Tuesday, July 11, 2017

363. தோழி கூற்று


363. தோழி கூற்று

 பாடியவர்: செல்லூர்க் கொற்றனார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவுணர்த்தப்பட்ட தோழி கிழவற்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியைவிட்டுப் பிரிந்து செல்ல நினைத்தான். தான் பிரிந்து செல்லப் போவதைப் பற்றித் தலைவியிடம் கூறினால் அவள் அதற்கு உடன்பட மாட்டாள் என்று எண்ணிய தலைவன், தோழியிடம் தான் செல்லப் போவதைப் பற்றிக் கூறுகிறான். அதைக் கேட்ட தோழி, “ இனிய தலைவியைப் பிரிந்து கொடிய பாலை நிலவழியில் செல்லுவது இனிதாகுமோ?” என்று வினவுகிறாள்.

கண்ணி மருப்பின் அண்ணநல் லேறு
செங்கோற் பதவின் வார்குரல் கறிக்கும்
மடக்கண் மரையா நோக்கிவெய் துற்றுப்
புல்லரை உகாஅய் வரிநிழல் வதியும்
இன்னா அருஞ்சுரம் இறத்தல்
இனிதோ பெரும இன்றுணைப் பிரிந்தே. 

கொண்டு கூட்டு: பெரும! கண்ணி மருப்பின் அண்ணல் நல் ஏறு, செங்கோற் பதவின் வார் குரல் கறிக்கும் மடக்கண் மரையா நோக்கி, வெய்துற்றுப் புல்அரை உகாஅய் வரிநிழல் வதியும்இன்னா அருஞ்சுரம் இன்துணைப் பிரிந்து  இறத்தல் இனிதோ?

அருஞ்சொற்பொருள்: கண்ணி = தலைமேற் சூடப்படும் மாலை; மருப்பு = கொம்பு; அண்ணல் = தலைமைவாய்ந்த (பெருமிதமான தோற்றமுள்ள); கோல் = தண்டு; பதவு = அறுகம்புல் ; வார் குரல் = நீண்ட கொத்து; மரையா = மரை + = காட்டுப் பசு; கறித்தல் = கடித்துத் தின்னுதல்; வெய்துறுதல் = பெருமூச்சு விடுதல்; உகாய் = ஒருவகை மரம்; வரி = புள்ளி; வதியும் = தங்கியிருக்கும்; சுரம் = பாலை நிலம்; இறத்தல் = கடத்தல்.

உரை:  பெரும! கொம்பில் மாலை அணிந்த, பெருமிதமான தோற்றத்தையுடைய நல்ல மலை எருது, சிவந்த தண்டுகளையுடைய அறுகினது நீண்ட கொத்தைக் கடித்துத் தின்னும், மடப்பம் பொருந்திய கண்ணையுடைய காட்டுப் பசுவைப் பார்த்துப் பெருமூச்சுவிட்டுக்கொண்டு, சிறிய அடிப்பக்கத்தையுடைய உகாஅய் மரத்தின் புள்ளிகளையுடைய நிழலில் தங்குகின்ற, துன்பம் நிறைந்த கடத்தற்கரிய பாலை நிலத்தை, இனிய துணைவியைப் பிரிந்து கடத்தல் இனிமை உடையதோ?


சிறப்புக் குறிப்பு: ”வரி நிழல்என்றது, பாலை நிலத்தின் வெப்பத்தின் கொடுமையால், உகாய் மரத்தில் இலைகள் அடர்த்தியாக இல்லாததால், நிழலும் அடர்த்தியாக இல்லை என்பதைக் குறிக்கிறது. தான் விரும்பும் இனிமையான தலைவியைவிட்டுக் கொடிய பாலைலநிலத்தைக் கடந்து செல்லுவது  இனிமையானதன்று என்று கூறித் தலைவன் பிரிந்து செல்லுவதைத் தோழி தடுக்க முயற்சி செய்கிறாள். காட்டில் மேய்கின்ற பொழுது, எருதின் கொம்பில் சுற்றிய கொடி, தலையில் அணியப்படும் மாலைபோல் தோற்றம் அளித்ததால், “கண்ணி மருப்புஎன்று குறிப்பிடப்பட்டது.

No comments:

Post a Comment