Tuesday, July 11, 2017

366. தோழி கூற்று

366. தோழி கூற்று

பாடியவர்: பேரிசாத்தனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு,“இவ்வேறுபாடு எற்றினான் ஆயது?” என்று செவிலி வினாவத் தோழி கூறியது. (எற்றினான் = எதனால்)
கூற்று விளக்கம்: தலைவியின் பெற்றோர்கள் அவளைக் காவலில் வைத்தார்கள். அதனால், அவளுக்குத் தலைவனைக் காணும் வாய்ப்பில்லை. தலைவனைக் காண இயலாததால், தலைவி மனம் வருந்தி, உடல் மெலிந்து காணப்படுகிறாள். அவள் தோற்றத்தில் மாற்றங்களைக் கண்ட செவிலித்தாய், தோழியை நோக்கி, “உன் தோழிக்கு என்ன ஆயிற்று? அவள் ஏன் இப்படிக் கவலையோடு காட்சி அளிக்கிறாள்?” என்று கேட்கிறாள். செவிலித் தாயின் வினாவுக்குத் தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

பால்வரைந் தமைத்த லல்ல தவர்வயிற்
சால்பளந் தறிதற் கியாஅம் யாரோ
வேறியான் கூறவும் அமையாள் அதன்தலைப்
பைங்கண் மாச்சுனைப் பல்பிணி யவிழ்ந்த
வள்ளிதழ் நீலம் நோக்கி உள்ளகை
பழுத கண்ண ளாகிப்
பழுதன் றம்மவிவ் வாயிழை துணிவே. 

கொண்டு கூட்டு: பைங்கண் மாச்சுனைப் பல்பிணி அவிழ்ந்த  வள்ளிதழ் நீலம் நோக்கி, இவ் ஆயிழை உள் அகைபு  அழுத கண்ணள் ஆகி வேறு யான் கூறவும் அமையாள். அதன்தலை அவர் வயின்  துணிவு  பால் வரைந்து அமைத்தல் அல்லது சால்பு அளந்து அறிதற்கு யாம் யாரோ? பழுது அன்று. அம்ம!

அருஞ்சொற்பொருள்: பால் = ஊழ்வினை; சால்பு = தகுதி; அதன்தலை = அதற்கு மேலும்; பைங்கண் = பசுமையான இடம்; மா =பெரிய; சுனை = நீர்நிலை; அகைபு = வருந்தி; ஆயிழை = தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள்.

உரை: பசுமையான இடத்தையுடைய பெரிய நீர்நிலையில் பல கட்டு அவிழ்ந்த, வளமான இதழ்களையுடைய நீலமலர் ஒன்றைப் பார்த்து, (அதைப் பறிக்க முடியாததால்),  தேர்ந்தெடுத்த அணிகலன்களை அணிந்த இத்தலைவி, நெஞ்சுள்ளே வருந்தி, அழுத கண்களோடு இருந்தாள்.  நான் வேறு ஒரு கருத்தைக் (இப் பூவைப் பறிக்க முடியாவிட்டால் வெறொரு பூவைப் பறித்துக்கொள்ளலாம் என்று) கூறவும் அவள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. பிறகு, அங்கு வந்த ஒரு ஆண்மகனிடம் தனக்கு உதவுமாறு கேட்கத் துணிந்தாள். பின்னர் இருவரும் காதலிக்கத் தொடங்கினார்கள். இது ஊழ்வினையினாலே வரையறுத்து முடிவு செய்யப்பட்டதே அன்றி, அத்தலைவரின் தகுதியை அளவிடுவதற்கு நாம் யார்? இந்தக் காதலில் குற்றம் ஒன்றும் இல்லை. நான் கூறுவதைக் கேட்பாயாக!


சிறப்புக் குறிப்பு: ”ஒருநாள், தலைவி அவள் ஒரு நீர்நிலையில் உள்ள பூவைப் பறிக்க விரும்பினாள். ஆனால், நீரில் இறங்கி அவளால் அந்தப் பூவைப் பறிக்க முடியவில்லை. அப்பொழுது, அங்கு வந்த ஆண்மகன் ஒருவன், அவளுக்கு அந்தப் பூவைப் பறித்துக் கொடுத்தான். அதுமுதல், இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கத் தொடங்கினார்கள். இப்பொழுது, தன் காதலனைக் காணா முடியாமல் காவலில் வைக்கப்பட்டதால், அவள் வருத்தத்தோடு, உடல் மெலிந்து காணப்படுகிறாள்என்று விளக்கம் அளித்துத் தலைவியின் களவொழுக்கத்தைத் தோழி செவிலித்தாய்க்குத் தெரியப்படுத்தினாள் (அறத்தொடு நின்றாள்).  இவ்வாறு, ஊழ்வினையால், தலைவன் தலைவியைச் சந்தித்து, அவளுக்குப்   பூவைப் பறித்துக் கொடுத்து, அவர்கள் ஒருவரை காதலிக்க ஆரம்பிப்பது, “பூத்தரு புணர்ச்சிஎன்று அழைக்கப்படுகிறது

No comments:

Post a Comment