Sunday, July 23, 2017

374. தோழி கூற்று

374. தோழி கூற்று

பாடியவர்: உறையூர்ப் பல்காயனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அறத்தொடு நின்றமை தோழி கிழத்திக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பெண்கேட்க வந்துள்ளான். தலைவியின் பெற்றோரும் உறவினர்களும் தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விப்பதற்குச் சம்மதித்தனர். அதை அறிந்த தோழி, “உன்  விருப்பப்படியே, உனக்கு உன் தலைவனோடு திருமணம் நடைபெறப்போகிறது. உன்னுடைய களவொழுக்கத்தைத் தக்க சமயத்தில் நான் வெளிப்படுத்தியதால் (அறத்தொடு நின்றதால்) இது நிகழ்ந்ததுஎன்று தலைவியிடம் கூறுகிறாள்.

எந்தையும் யாயும் உணரக் காட்டி
ஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்
மலைகெழு வெற்பன் தலைவந் திரப்ப
நன்றுபுரி கொள்கையின் ஒன்றா கின்றே
முடங்கல் இறைய தூங்கணங் குரீஇ
நீடிரும் பெண்ணைத் தொடுத்த
கூடினும் மயங்கிய மைய லூரே. 

கொண்டு கூட்டு: எந்தையும் யாயும் உணரக் காட்டிஒளித்த செய்தி வெளிப்படக் கிளந்தபின்மலைகெழு வெற்பன் தலைவந்து இரப்பநன்றுபுரி கொள்கையின் முடங்கல் இறைய, தூங்கணங் குரீஇ நீடு இரும் பெண்ணைத் தொடுத்த கூடினும் மயங்கிய, மையல் ஊர் ஒன்றாகின்று

அருஞ்சொற்பொருள்: ஒளித்த செய்தி = களவொழுக்கம்; கிளத்தல் = விளக்கிக் கூறுதல்; கெழு = பொருந்திய; வெற்பு = மலை; வெற்பன் = குறிஞ்சி நிலத்தலைவன்; தலைவந்து இரப்ப = பெற்றோர்களிடம் நேரில் வந்து பெண் கேட்டல்; புரிதல் = செய்தல்; ஒன்றாகின்று = ஒன்றுபட்டது; முடங்கல் = வளைதல்; இறை = சிறகு; குரீஇ = குருவி; பெண்ணை = பனை; மையல் = மயக்கம்.

உரை:  நம் தந்தையும் தாயும்  உணரும்படி,  நாம் இதுகாறும் மறைத்திருந்த களவொழுக்கத்தை,  நான் விளக்கமாகக் கூறி வெளிப்படுத்தினேன். அதன் பிறகு, மலைகள் பொருந்திய குறிஞ்சி நிலத்தலைவன், நம் பெற்றோர்களிடம் வந்து உன்னைப் பெண் கேட்டான். நமது பெற்றோரின் நன்மையைச் செய்யும் கொள்கையினால், திருமணம் உறுதியாகியது வளைந்த  சிறகையுடைய தூக்கணங் குருவி, உயர்ந்த பெரிய பனைமரத்தில் கட்டியிருந்த கூட்டைக் காட்டிலும், பலவகையான மயக்கத்தை அடைந்திருந்த, இந்த மயக்கத்தையுடைய ஊர், நம்மோடு ஒன்றுபட்டது.


சிறப்புக் குறிப்பு: தூக்கணங் குருவி தன் கூட்டைப் பல குச்சிகளாலும் நாராலும் பின்னிப் பிணைத்து அமைத்திருக்கும். அந்தக் கூட்டின் அமைப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்கள், அதைப் புரிந்துகொள்ள முடியாமல் கலக்கமுறுவர். தலைவியின் களவொழுக்கத்தைப் பற்றிய விவரங்களைப் புரிந்துகொள்ள முடியாத ஊர்மக்கள், தூக்கணங் குருவியின் கூட்டின் அமைப்பைப் புரிந்துகொள்ள முயற்சி செய்பவர்களைவிட அதிகமாக மயங்கிப் பலவகையிலும்  கலக்கமுற்றனர் என்று தோழி கூறுகிறாள். அவ்வாறு மயங்கிய  ஊர்மக்கள், தலைவியின் திருமணத்தைப் பற்றிய செய்தியைக் கேட்டு தலைவியின் குடும்பத்தினரோடு ஒன்றுபட்டனர் என்றும் தோழி கூறுகிறாள்.

No comments:

Post a Comment