Sunday, July 23, 2017

375. தோழி கூற்று

375. தோழி கூற்று
பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக் குறிக்கண் சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய் இருபொழுதும் மறுத்து வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைக் காண்பதற்கு இரவில் வந்து, அவள் வீட்டிற்கு வெளியே நிற்கிறான். “இராக் காவலர்கள் பறையை முழக்குவர். அதனால், இரவில் தலைவர் வராமல் இருப்பது நல்லதுஎன்று கூறி, விரைவில் திருமணத்திற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு தோழி, தலைவனை  மறைமுகமாக வற்புறுத்துகிறாள்.

அம்ம வாழி தோழி இன்றவர்
வாரா ராயினோ நன்றே சாரற்
சிறுதினை விளைந்த வியன்கண் இரும்புனத்
திரவரி வாரின் தொண்டகச் சிறுபறை
பானாள் யாமத்துங் கறங்கும்
யாமங் காவலர் அவியா மாறே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! சாரல் சிறுதினை விளைந்த வியன்கண் இரும் புனத்து, இரவு அரிவாரின் தொண்டகச் சிறுபறைபானாள் யாமத்தும் காவலர் அவியாமாறு கறங்கும்இன்று அவர் வாரார் ஆயின் நன்று

அருஞ்சொற்பொருள்: சாரல் = மலைப்பக்கம்; வியன்கண் = அகன்ற இடம்; இரும்புனம் = பெரிய தினைப்புனம்; அரிதல் = அறுவடை செய்தல்; தொண்டகம் = குறிஞ்சிப் பறை; பானாள் = நள்ளிரவு; யாமம் = நடு இரவு; கறங்குதல் = ஒலித்தல்; அவிதல் = ஒடுங்குதல் (உறங்குதல்).

உரை: தோழி! நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக! மலைப்பக்கத்தில், சிறிய தினை விளைந்த அகன்ற இடத்தையுடைய பெரிய கொல்லையில், இராக்காலத்தே தினைக்கதிரை அரிபவர்களைப்போல,  இராக் காவலர்கள் தூங்காமல் இருப்பதால், தொண்டகமாகிய சிறிய பறையை, நடு இரவிலும் அடிக்கின்றனர். இன்று, தலைவர் வராமல் இருப்பது நல்லதாகும்.


சிறப்புக் குறிப்பு: பெரிய தினைப்புனமாகையால், அது இரவிலும் பகலிலும் அறுவடை செய்யப்படுகிறதுதினை விளைந்தது என்று குறிப்பிடுவதால், இனி, தலைவி தினைப்புனம் காக்கச் செல்லமாட்டாள் என்பதும், அதனால் தலைவனைப் பகலில் சந்திக்க இயலாது என்பதும் தெரியவருகிறது. இரவில் ஊர்க்காவலர்கள் குறிஞ்சி நிலத்திற்குரிய தொண்டகப் பறையை முழங்குவதால், தலைவனை இரவில் வரவேண்டாம் என்று தோழி கூறுகிறாள். ஆகவே, இனி, தலைவி தலைவனைப் பகலிலும் சந்திக்கமுடியாது; இரவிலும் சந்திக்க முடியாது. அதனால், திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று தோழி குறிப்பால் உணர்த்துகிறாள்.  இரவில், அறுவடை செய்யும் பொழுது, கொடிய விலங்குகள் அணுகாதிருப்பதற்காகக் குறிஞ்சிநிலத்திற்குரிய தொண்டகப்பறையை குறிஞ்சிநில மக்கள் முழக்குவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது.

No comments:

Post a Comment