Saturday, January 16, 2016

144. செவிலித்தாய் கூற்று

144.  செவிலித்தாய் கூற்று

பாடியவர்: மதுரை ஆசிரியர் கோடன் கொற்றனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று: மகட்போக்கிய செவிலித்தாய் சொல்லியது.
கூற்று விளக்கம்:  தலைவனுக்குத் தலைவியைத் திருமணம் செய்விக்க அவளுடைய பெற்றோர்கள் சம்மதிக்கவில்லை. ஆகவே, தலைவனும் தலைவியும் ஊரைவிட்டுச் சென்றுவிட்டனர்(உடன்போக்கு). அதனால் வருத்தமடைந்த செவிலித்தாய், தலைவி எப்பொழுதும் தன் தோழிகளுடன் மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தாள். அத்தகையவள், இப்பொழுது தன் பாதங்களை வருத்தும் பாலைநிலத்தில் எங்களைவிட்டுப் பிரிந்து சென்றாளே!” என்று கூறித் தன் வருத்தத்தை வெளிப்படுத்துகிறாள்.

கழிய காவி குற்றும் கடல
வெண்டலைப் புணரி யாடியும் நன்றே
பிரிவி லாய முரியதொன் றயர
இவ்வழிப் படுதலும் ஒல்லாள் அவ்வழிப்
பரல்பாழ் படுப்பச் சென்றனள் மாதோ
சென்மழை தவழும் சென்னி
விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டே.

கொண்டு கூட்டு: கழிய காவி குற்றும், கடல வெண்தலைப் புணரி ஆடியும், பிரிவில் ஆயம் உரியது ஒன்று நன்று அயரஇவ்வழிப் படுதலும் ஒல்லாள்செல்மழை தவழும் சென்னி விண்ணுயர் பிறங்கல் விலங்குமலை நாட்டு, அவ்வழிப் பரல்பாழ் படுப்பச் சென்றனள்! மாதோ

அருஞ்சொற்பொருள்: கழி = உப்பங்கழி; காவி = ஓருமலர் ( கருநொச்சி, செங்கழுநீர்); குற்றுதல் = பறித்தல்; புணரி = அலை; நன்று = பெருமை, பெரிது (மிக); ஆயம் = தோழியர் கூட்டம்; அயர்தல் = விளையாடுதல்; இவ்வழி = இந்த வழி; படுதல் = பொருந்துதல்; ஒல்லுதல் = உடன்படுதல்; சென்னி = உச்சி; பிறங்கல் = கற்பாறை (மலை); விலங்குதல் = குறுக்கிடுதல்; அவ்வழி = அந்த இடம்; பரல் = பருக்கைக்கற்கள்; படுப்ப = வருத்த; மாதோ = மாது+ (மாது, ஓ அசைச்சொற்கள்).


உரை: உப்பங்கழியில் மலர்ந்த காவிமலர்களைப் பறித்து, கடலின் வெண்ணிறமான அலைகளில் நீராடி,  என்றும் தன்னைவிட்டுப் பிரியாத தோழியர்களோடு தமக்குரிய விளையாட்டுக்களை நன்று விளையாடிக்கொண்டு,  இங்கு இருப்பதற்கு உடன்படாமல், விரைந்து செல்லும் மேகங்கள் தவழ்கின்ற உச்சியையுடைய, வானத்தளவு உயர்ந்து விளங்குகின்ற மலைகள் குறுக்கிடும் நாட்டில், அப்பாலை நிலத்தில், பருக்கைக்கற்கள் தன் பாதங்களின் அழகைச் சிதைக்கும் வண்ணம் தலைவி சென்றாள்.

143. தோழி கூற்று

143. தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவிடை வைத்துப் பிரிந்தவிடத்துத் தலைமகட்குத் தோழிகூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவினால் தலைவி வருந்துகிறாள். வருத்தத்தால் அவள் உடலில் பசலை படர்ந்தது. இவ்வுலகில் நிலையில்லாமை ஒன்றுதான் திலைத்து நிற்பது. உதாரணமாக, ஒப்புரவு மனப்பன்மையோடு பிறருக்கு உதவி செய்பவனின் செல்வம் குறைந்து போகக்கூடியது. அதுபோல் உன்னுடைய பசலை நோயும் விரைவில் மறைந்துவிடும். உன் தலைவர் விரைவில் வந்துவிடுவார் என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.  

அழிய லாயிழை அன்பு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லா மையே நிலையிற் றாகலின்
நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட் டாள னுடைப்பொருள் போலத்
தங்குதற் குரிய தன்றுநின்
அங்கலுழ் மேனிப் பாய பசப்பே. 
-
கொண்டு கூட்டு: ஆயிழை! பயமலை நாடன் அன்பு பெரிது உடையன்பழியும் அஞ்சும். நில்லாமையே நிலையிற்று ஆகலின்நல்லிசை வேட்ட நயனுடை நெஞ்சிற்
கடப்பாட்டாளன் உடைப்பொருள் போலநின் அம் கலுழ் மேனிப் பாஅய பசப்பே
தங்குதற்கு உரியது அன்று! அழியல்!

அருஞ்சொற்பொருள்: அழியல் = வருந்தாதே; ஆயிழை = தெரிந்தெடுத்த அணிகலன்களை அணிந்தவள் (பெண்); பயமலை = பயனுடைய மலை; இசை = புகழ்; வேட்ட = விரும்பிய; நயன் = ஈரம், அன்பு; கடப்பாடு = கடமை; கடப்பாட்டாளன் = ஒப்புரவாளன்; கலுழ்தல் = நிரம்பி வழிதல்; அம் = அழகிய; பாஅய = படர்ந்த.

உரை: தெரிந்து அணிந்த அணிகலன்களை அணிந்தவளே!  பயன்தரும் மலைநாட்டுக்குத் தலைவன், மிகுந்த அன்புடையவன்; பழிக்கு அஞ்சுபவன்.  நிலையில்லாமை ஒன்றுதான் இவ்வுலகத்தில் நிலைத்து நிற்பதாகும். அதனால்,  நிலைத்து நிற்கும் நல்ல புகழை விரும்பிய, அன்புடன்கூடிய நெஞ்சையுடைய, ஒப்புரவாளன் பெற்ற செல்வத்தைப் போல உன்னுடைய  அழகு ஒழுகும் உடம்பில் படர்ந்த பசலை, நிலையாகத் தங்காமல் மறைந்துவிடும். ஆகவே, நீ வருந்தாதே.

சிறப்புக் குறிப்பு:  உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் நிலையற்றவைதான். ஆனால்புகழ் மட்டும்  நிலைத்து நிற்கக் கூடியதாதலால், ஒப்புரவாளர்கள் அதனை விரும்புவர்.

            ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
            பொன்றாது நிற்பதொன்று இல்.                (குறள் – 233)


என்னும் குறள் இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

142. தலைவன் கூற்று

142. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13-இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று – 1: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்குந் தலைமகன் சொல்லியது.
கூற்று – 2:  தோழிக்குத் தலைமகன், தன்குறை (குறை = வேண்டுகோள்) கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் தற்செயலாகச் சந்தித்தான். அவளோடு அளவளாவினான். அவள் மீது காதல் கொண்டான். பின்னர், அவளைவிட்டுப் பிரிய வேண்டிய நேரம் வந்தவுடன் பிரிந்து சென்றான். அவளைவிட்டுப் பிரிந்தாலும், தன் நெஞ்சம் அவளிடத்திலேயே தங்கிவிட்டதாகக் கருதுகிறான். இப்பாடலைத் தலைவன் தனக்குத் தானே சொல்லிக்கொண்டதாகவோ அல்லது தலைவியின் தோழியிடம் கூறித் தலைவியை மீண்டும் சந்திப்பதற்கு, உதவி செய்க என்று தலைவன் வேண்டுவதாகவோ கருதலாம்.

சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇப்
புனக்கிளி கடியும் பூங்கட் பேதை
தானறிந் தனளோ இலளோ பானாட்
பள்ளி யானையி னுயிர்த்தென்
உள்ளம் பின்னுந் தன்னுழை யதுவே. 

கொண்டு கூட்டு: பால் நாள்,  பள்ளி யானையின் உயிர்த்துஎன் உள்ளம் பின்னும் தன் உழையது. சுனைப்பூக் குற்றுத் தொடலை தைஇபுனக்கிளி கடியும் பூங்கண் பேதை தான் அறிந்தனளோ, இலளோ

அருஞ்சொற்பொருள்: சுனை = குளம், நீரை அடுத்துள்ள இடம்; குற்று = பறித்து; தொடலை = தொடுக்கப்படும் மாலை; தைஇ = கட்டி; புனம் = கொல்லை, வயல்; கடிதல் = வெருட்டுதல்; பூங்கண் = பூவைப் போன்ற கண்; பேதை = பெண் (இளம்பெண்); பால்நாள் = நடுஇரவு; பள்ளி = படுக்கை; உயிர்த்தல் = பெருமூச்சுவிடுதல்; உழை = இடம்; தன் உழையது = தன்னிடமே தங்கி உள்ளது.

உரை: நள்ளிரவில் படுத்துத் தூங்கும் யானையைப் போலப் பெருமூச்சு விட்டுக்கொண்டு, நான் தலைவியைப் பிரிந்து வந்த பின்னரும், எனது நெஞ்சம் அவளிடத்திலேயே இருக்கின்றது.  நீர்ச்சுனையில் மலர்ந்த மலர்களைப் பறித்துமாலையைக் கட்டிக்கொண்டு, தினைப் புனத்தில் கதிரை உண்ணும் பொருட்டு வரும் கிளிகளை வெருட்டும்,  பூவைப்போன்ற கண்களையுடைய இளம்பெண்ணாகிய அத்தலைவி, இதனை அறிந்தாளோ இல்லையோ!


சிறப்புக் குறிப்பு: பெருமூச்சு விடுவது நெஞ்சின் இயல்பு அன்று. ஆயினும், நெஞ்சம் பெருமூச்சு விடுவதாகக் கூறுவது இலக்கிய மரபு

141. தலைவி கூற்று

141. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைப் பெருங்கொல்லனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் (கேடு, ஆபத்து) அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது  மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் முதலில் பகல் நேரத்தில் சந்தித்தனர். ஏதோ காரணத்தால் தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள். அதற்குப் பிறகு, தலைவன் இரவு நேரங்களில் தலைவியின் வீட்டிற்கு அருகில் வந்து அவளைச் சந்தித்தான். அவளைச் சந்திப்பதற்காக அவன் கடந்துவரும் வழியில் புலி, கரடி முதலிய கொடிய விலங்குகளால் அவனுக்குப் பல இன்னல்கள் ஏற்படலாம் என்பதைத் தலைவி உணர்ந்தாள். ஆகவே, அவன் இரவில் வருவதை அவள் விரும்பவில்லை. ஒருநாள்,  தலைவியின் தாய் தலைவியைத் தினைப்புனம் காப்பதற்குப் போகச் சொல்லுகிறாள். பகல் நேரத்தில் வெளியே செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தலைவி, தலைவனைப் பகலில் சந்திக்க விரும்புகிறாள். அன்றிரவுதலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு அவள் வீட்டருகே வந்தான். அவன் வருகையை அறிந்த தலைவி, அவன் காதுகளில் கேட்குமாறு, தோழியை நோக்கி, தலைவர் இரவில் வரும் வழியில் பல இன்னல்கள் உள்ளன. என் தாய் என்னை தினைப்புனம் காக்கச் சொல்லுகிறாள். ஆகவே, இனிமேல் நாங்கள் பகலிலேயே சந்திக்கலாம் என்று நீ சொன்னால் என்ன?” என்று கேட்கிறாள்.

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.

கொண்டு கூட்டு: தோழி! சாரல் நாட! கொல்லை  நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றைபைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடுநாள் வருதிவாரல் என(வும்) அன்னை வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் செல்க என்றோள் என(வும்) நீ சொல்லின் எவனோ?

அருஞ்சொற்பொருள்: வளைவாய் = வளைந்த வாய் (அலகு); கடிதல் = வெருட்டுதல் (ஓட்டுதல்); மான்விலங்கின் பொதுப்பெயர்; நெடுங்கை வன் மான் = நெடிய கையையுடைய (தும்பிக்கையையுடைய) வலிய யானை; கடும்பகை = கடுமையான பகை; உழந்த = வருந்திய; குறுங்கை = குறுகிய கை (இங்குபுலியின் கை என்பது புலியின் முன்னங்கால்களைக் குறிக்கிறது); இரும்புலி = பெரிய புலி;  கோள் = கொலை; கோள் வல் = கொல்லுவதில் வல்லமை பெற்ற; ஏறு = ஆண்புலி; படுபதம் = அகப்படும் சமயம்; ஆர் இருள் = நிறைந்த இருள்; நடுநாள் = நடுஇரவு; வருதி = வருகிறாய்; வாரல் = வராதே.

உரை: தோழி! ”மலைப்பக்கத்தையுடைய நாட!  கொல்லையில், நெடிய தும்பிக்கையையுடைய வலிமையான யானையின் கடுமையான பகையால் வருந்திய,  குறிய முன்னங்கால்களையுடைய, கொல்லுதலில் வல்லமை பெற்ற பெரிய ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இருள் செறிந்த நள்ளிரவில் நீ வருகின்றாய்! இனி, அங்ஙனம் வருவதைத் தவிர்ப்பாயாக,”  என்றும், ”வளைந்த அலகையுடைய சிறுகிளிகளை, விளைந்த தினையினிடத்துப் படாமல் வெருட்டும் பொருட்டுத் தினைப்புனத்திற்குச் செல்க என்று நம் தாய் கூறினாள்,”  என்றும் நீ தலைவனிடம் கூறினால் என்ன?

140. தலைவி கூற்று

140.  தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 32-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: பொருள்வயிற் பிரிந்தவிடத்து, நீ ஆற்றுகின்றிலை யென்ற தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடுவதற்காகத் தலைவியை விட்டுப் பிரிந்திருக்கிறான். தலைவி பிரிவினால் வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “நீ பிரிவினால் மிகவும் வருந்துகிறாயே! தலைவர் விரைவில் வந்துவிடுவார். அதுவரை பொறுத்துக்கொள்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். அதைக்கேட்ட தலைவி, “நான் படும் துன்பத்தை இவ்வூர் எப்படி அறிந்தது?” என்று தோழியைக் கேட்கிறாள்.

வேதின வெரிநின் ஓதிமுது போத்து
ஆறுசெல் மாக்கள் புட்கொளப் பொருந்தும்
சுரனே சென்றனர் காதலர் உரனழிந்து
ஈங்கியான் தாங்கிய எவ்வம்
யாங்கறிந் தன்றிவ் வழுங்க லூரே. 

கொண்டுகூட்டு: காதலர், வேதின வெரிநின் ஓதிமுது போத்து ஆறுசெல் மாக்கள் புள்கொளப் பொருந்தும் சுரன்  சென்றனர். உரனழிந்து ஈங்கியான் தாங்கிய எவ்வம்
 ழுங்கலூர்  யாங்கறிந்தன்று?

அருஞ்சொற்பொருள்: வேதினம்  = கருக்கரிவாள்; வெரிந் = முதுகு; ஓதி = ஓந்தி (ஓந்தி என்பது ஓதியென இடைக்குறைந்து வந்தது)  = ஓணான்; போத்து = விலங்குகளின் ஆண் (குறிப்பாக புலி, மான் ஆகியவற்றின் ஆண்);  புள் = நிமித்தம்; சுரன் = பாலைநிலம்; உரன் = வலிமை; ஈங்கு = இங்கு; எவ்வம் = துன்பம்; அழுங்குதல் = மிகவருந்துதல், இரங்குதல்.

உரை: தலைவர், வழிச்செல்லும் மனிதர்கள் கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய, முதிய ஆண் ஓணானை நிமித்தமாகக் கொள்ளும், பாலைநிலத்து வழியில் சென்றார். வலிமை அழிந்து, அவர் பிரிந்த பிறகு, இங்கே இருந்து நான் தாங்கிக் கொண்டுள்ள துன்பத்தை, இப்பொழுது மிகவும்வருத்தத்தில் இருக்கும் இவ்வூர், எவ்வாறு அறிந்தது?


சிறப்புக் குறிப்பு: தலைவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றபொழுது, அவனைத் தோழி தடுத்து நிறுத்தாமல், இப்பொழுது வந்து தனக்குக் ஆறுதல் கூறுவதால் சினமுற்ற தலைவி, தோழியைத் தன்னிடமிருந்து வேறுபடுத்துவதற்காக, அவளை ஊர் மக்களோடு இணைத்துக் கூறினாள்.  “அவர் பிரிந்து சென்றபொழுது இல்லாத வருத்தம் உனக்கு இப்பொழுது எப்படி வந்தது?” என்று தலைவியை மறைமுகமாகக் கேட்கிறாள்

139. தோழி கூற்று

139. தோழி கூற்று

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 126-இல் காணலாம்.
திணை
: மருதம்.
கூற்று: வாயில் வேண்டிப் புக்க தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவியை விட்டுப்பிரிந்திருந்த தலைவன் மீண்டும் தலைவியைக் காண வருகிறான். அதைக் கண்ட தோழி, “ நீ இங்கே வந்தால் பரத்தையர் பழிச் சொற்களைக் கூறுவார்கள். அதனால், நீ இங்கு வராதே!” என்று தோழி கூறுகிறாள்.

மனையுறை கோழிக் குறுங்காற் பேடை
வேலி வெருகின மாலை யுற்றெனப்
புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய
பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்
கின்னா திசைக்கும் அம்பலொடு
வாரல் வாழிய ரையவெந் தெருவே. 

கொண்டுகூட்டு:
ஐய! மனையுறை கோழிக் குறுங்காற் பேடை, வேலி வெருகுஇனம் மாலை உற்றென, புகுமிடன் அறியாது தொகுபு உடன் குழீஇய பைதற் பிள்ளைக் கிளை பயிர்ந்தாங்கு, இன்னாது இசைக்கும் அம்பலொடு, எம் தெரு வாரல், வாழியர்!
அருஞ்சொற்பொருள்: வெருகு = காட்டுப் பூனை; தொகுபு = கூடிய, குழீஇய = குழுமிய, கூடிய; பைதல் = துன்பம்; கிளை = குஞ்சுகளாகிய இனம்; பயிர்தல் = அழைத்தல்; இசைத்தல் = ஒலித்தல்; அம்பல் = பழிச்சொல்.

உரை: ஐய!, மாலைக் காலத்தில் வேலிக்கு அருகில் உள்ள காட்டுப் பூனையின் கூட்டம் வந்ததால், வீட்டிலிருக்கும் குறுகிய காலையுடைய பெட்டைக்கோழி அதைக் கண்டு அஞ்சிப் பாதுகாப்பாகப் புகுதற்குரிய இடத்தை அறியாமல், சேர்ந்து ஒருங்கே கூடும் பொருட்டுதுன்புறுகின்ற தன் குஞ்சுகளை அழைத்துக் கூவினாற் போல, எமக்குத் துன்பந்ததருமாறு ஊரார் பேசும் பழிச்சொற்களோடு எங்கள் தெருவிற்கு வரவேண்டாம். நீ வாழ்வாயாக!


சிறப்புக் குறிப்பு: தன்னாற் பாதுகாக்கப்பட்ட தன் குஞ்சுகளை காட்டுப்பூனைகள் கவர்ந்துவிடுமோ என்ற அச்சத்தினால் பெட்டைக்கோழிக் கூவியது போல, இதுவரை தம்மோடு  இருந்த தலைவனைத் தலைவி கவர்ந்து தன்பால் இருத்திக் கொள்வாளோ என்ற அச்சத்தினால் பரத்தையர் பழிமொழி கூறுவார்கள் என்று தோழி நினைக்கிறாள். அதனால், தலைவனைத் தலைவி இருக்கும் தெருவிற்குக்கூட வரவேண்டா என்று தோழி கூறுகிறாள்.