Saturday, January 16, 2016

141. தலைவி கூற்று

141. தலைவி கூற்று

பாடியவர்: மதுரைப் பெருங்கொல்லனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று: இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் (கேடு, ஆபத்து) அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது  மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் முதலில் பகல் நேரத்தில் சந்தித்தனர். ஏதோ காரணத்தால் தலைவி வீட்டில் அடைக்கப்பட்டாள். அதற்குப் பிறகு, தலைவன் இரவு நேரங்களில் தலைவியின் வீட்டிற்கு அருகில் வந்து அவளைச் சந்தித்தான். அவளைச் சந்திப்பதற்காக அவன் கடந்துவரும் வழியில் புலி, கரடி முதலிய கொடிய விலங்குகளால் அவனுக்குப் பல இன்னல்கள் ஏற்படலாம் என்பதைத் தலைவி உணர்ந்தாள். ஆகவே, அவன் இரவில் வருவதை அவள் விரும்பவில்லை. ஒருநாள்,  தலைவியின் தாய் தலைவியைத் தினைப்புனம் காப்பதற்குப் போகச் சொல்லுகிறாள். பகல் நேரத்தில் வெளியே செல்லும் வாய்ப்புக் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்த தலைவி, தலைவனைப் பகலில் சந்திக்க விரும்புகிறாள். அன்றிரவுதலைவன் தலைவியைச் சந்திப்பதற்கு அவள் வீட்டருகே வந்தான். அவன் வருகையை அறிந்த தலைவி, அவன் காதுகளில் கேட்குமாறு, தோழியை நோக்கி, தலைவர் இரவில் வரும் வழியில் பல இன்னல்கள் உள்ளன. என் தாய் என்னை தினைப்புனம் காக்கச் சொல்லுகிறாள். ஆகவே, இனிமேல் நாங்கள் பகலிலேயே சந்திக்கலாம் என்று நீ சொன்னால் என்ன?” என்று கேட்கிறாள்.

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே அன்னை எனநீ
சொல்லின் எவனோ தோழி கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வல் ஏற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சாரல் நாட வாரலோ எனவே.

கொண்டு கூட்டு: தோழி! சாரல் நாட! கொல்லை  நெடுங்கை வன்மான் கடும்பகை உழந்த குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்றைபைங்கண் செந்நாய் படுபதம் பார்க்கும் ஆர் இருள் நடுநாள் வருதிவாரல் என(வும்) அன்னை வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர் செல்க என்றோள் என(வும்) நீ சொல்லின் எவனோ?

அருஞ்சொற்பொருள்: வளைவாய் = வளைந்த வாய் (அலகு); கடிதல் = வெருட்டுதல் (ஓட்டுதல்); மான்விலங்கின் பொதுப்பெயர்; நெடுங்கை வன் மான் = நெடிய கையையுடைய (தும்பிக்கையையுடைய) வலிய யானை; கடும்பகை = கடுமையான பகை; உழந்த = வருந்திய; குறுங்கை = குறுகிய கை (இங்குபுலியின் கை என்பது புலியின் முன்னங்கால்களைக் குறிக்கிறது); இரும்புலி = பெரிய புலி;  கோள் = கொலை; கோள் வல் = கொல்லுவதில் வல்லமை பெற்ற; ஏறு = ஆண்புலி; படுபதம் = அகப்படும் சமயம்; ஆர் இருள் = நிறைந்த இருள்; நடுநாள் = நடுஇரவு; வருதி = வருகிறாய்; வாரல் = வராதே.

உரை: தோழி! ”மலைப்பக்கத்தையுடைய நாட!  கொல்லையில், நெடிய தும்பிக்கையையுடைய வலிமையான யானையின் கடுமையான பகையால் வருந்திய,  குறிய முன்னங்கால்களையுடைய, கொல்லுதலில் வல்லமை பெற்ற பெரிய ஆண்புலியானது, பசிய கண்ணையுடைய செந்நாய் அகப்படுகின்ற சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் இருள் செறிந்த நள்ளிரவில் நீ வருகின்றாய்! இனி, அங்ஙனம் வருவதைத் தவிர்ப்பாயாக,”  என்றும், ”வளைந்த அலகையுடைய சிறுகிளிகளை, விளைந்த தினையினிடத்துப் படாமல் வெருட்டும் பொருட்டுத் தினைப்புனத்திற்குச் செல்க என்று நம் தாய் கூறினாள்,”  என்றும் நீ தலைவனிடம் கூறினால் என்ன?

No comments:

Post a Comment