Thursday, October 15, 2015

104. தலைவி கூற்று

104. தலைவி கூற்று 

பாடியவர்: காவன் முல்லைப்பூதனார். இவரது இயற்பெயர் பூதனார். காவன் முல்லை என்பது புறத்திணைத் துறைகளுள் ஒன்று. இவர் அத்துறையைப் பாடும் வல்லமை உடையவர் என்று கருதப்படுகிறது. காவன் முல்லை என்பது வாகைத்திணையைச் சார்ந்த ஒருதுறை. அரசன் நாட்டைப் பாதுகாப்பதைச் சிறப்பித்துக் கூறுவது காவன் முல்லை எனப்படும். இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (104, 211), அகநானூற்றில் ஐந்து பாடல்களும் ( 21, 151, 241, 293, 391) நற்றிணையில் ஒருபாடலும் (274) இயற்றியுள்ளார்.
திணை: பாலை.
 கூற்று - 1:  பிரிவின்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குக் கூறியது.
கூற்று - 2:  சிறிய உள்ளிப் பெரிய மறக்க வேண்டாவோ என்ற தோழிக்குக் கிழத்தி (தலைவி) கூறியதூஉமாம்.
கூற்று விளக்கம்: தலைவன் நீண்ட நாட்களாகத் தலைவியைப் பிரிந்திருக்கிறான். அப்பிரிவை பொறுத்துக்கொள்ள முடியாத தலைவி,  “பின்பனிக் காலத்தில் (பின்பனிக் கால்லம்மாசி, பங்குனி; கார்காலம்ஆவணி, புரட்டாசி) பிரிந்த தலைவர் பல நாட்களாகியும் இன்னும் வரவில்லையேஎன்று தனக்குத் தானே கூறியதாகவோ, “அவர் செய்த நன்மைகளை நினைத்து, பிரிவை மறப்பதற்கு முயற்சி செய்.” என்று அறிவுரை கூறிய தோழிக்குத் தலைவி,  ”என்னால் தலைவரின் பிரிவைப் பொறுத்துகொள்ள முடியவில்லையே ! ” என்று கூறியதாகவோ இப்பாடல் அமைந்திருப்பதாகக் கருதலாம்.

அம்ம வாழி தோழி காதலர்
நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்
தாளித் தண்பவர் நாளா மேயும்
பனிபடு நாளே பிரிந்தனர்
பிரியும் நாளும் பலவா குபவே. 

கொண்டு கூட்டு: வாழி ! தோழி ! அம்ம ! நூலறு முத்தின் தண்சிதர் உறைப்பத்  தாளித்தண் பவர் நாள் ஆ மேயும்  பனிபடு நாளே காதலர் பிரிந்தனர்பிரியும் நாளும் பல ஆகுப !

அருஞ்சொற்பொருள்: அம்ம முன்னின்றாரை அழைக்கப் பயன்படும் அசைச்சொல்; சிதர்தல் = சிதறுதல்; உறை = துளி; தாளி = ஒருவகை அறுகு (நீண்ட புல்);   தண் = குளிர்ச்சி; பவர் = கொடி; பனிபடுநாள் = பனி பேயும் காலம்.

உரை: தோழி, நீ வாழ்க! நம் தலைவர், முத்துமாலையில் இருந்த நூல் அறுபட்டதால் சிதறிக் கிடக்கும் முத்துக்களைப் போலக் குளிர்ந்த பனித்துளிகளை உடைய  குளிர்ந்த தாளியறுகின் கொடியை, விடியற்காலத்தில் பசுக்கள் மேயும், பனி வீழ்கின்ற பின்பனிக் காலத்திலே என்னைப் பிரிந்து சென்றார்; அங்ஙனம் அவர் பிரிந்து சென்று பல நாட்கள் ஆகின்றன;  நான் எங்ஙனம் பொறுத்துக்கொள்வேன்?

சிறப்புக் குறிப்பு: பின்பனிக் காலம் தலைவனும் தலைவியும் கூடியிருப்பதற்குரிய காலம். அத்தகைய பின்பனிக்காலத்தில் தன் கணவன் தன்னைவிட்டுப் பிரிந்து சென்றதை அவன் தனக்குச் செய்த கொடுமையாகத் தலைவி கருதுகிறாள். பிரிந்த கணவன் விரைவில் திரும்பி வந்திருந்தால் அந்தக் கொடுமையை அவள் மறந்திருப்பாள். ஆனால், பிரிந்து சென்றவன் பலநாட்களாகியும் வரவில்லை என்பதை நினைத்துத் தலைவி வருந்துகிறாள்


103. தலைவி கூற்று

103. தலைவி கூற்று

 பாடியவர்: வாயிலோன் தேவனார். வாயில் என்பது ஓர் ஊர். இவர் அவ்வூரைச் சர்ந்தவராக இருந்தமையால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் குறுந்தொகையில் இரண்டு பாடல்களை  (103, 108) இயற்றியுள்ளார்.
திணை: நெய்தல்.
 கூற்று: பருவங் கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: கூதிர் காலம் ( ஐப்பசி, கார்த்திகை மாதங்கள்) வந்த பின்னரும் தலைவன் வராததால் துன்பமுற்ற தலைவி, தோழியை நோக்கி, “ வாடைக்காலமும் வந்துவிட்டது. அவர் இன்னும் வரவில்லையே. இனி, நான் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் இறக்கப் போகிறேன்.” என்று கூறுகிறாள்.

கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல்
கவிரிதழ் அன்ன தூவிச் செவ்வாய்
இரைதேர் நாரைக் கெவ்வ மாகத்
தூஉந் துவலைத் துயர்கூர் வாடையும்
வாரார் போல்வர்நங் காதலர்
வாழேன் போல்வல் தோழி யானே.

கொண்டு கூட்டு: தோழி! கடும்புனல் தொகுத்த நடுங்கஞர் அள்ளல் இரைதேர் கவிர் இதழ் அன்ன தூவிச் செவ்வாய் நாரைக்கு எவ்வம் ஆகத்  துவலைத் தூஉம் துயர்கூர் வாடையும் நம் காதலர் வாரார் போல்வர்யான் வாழேன் போல்வல்.

அருஞ்சொற்பொருள்: கடு = விரைவு ; புனல் = ஆறு, நீர்; கடும்புனல் = விரைவாக ஓடிவரும் நீர்; தொகுத்த = குவித்த; அஞர் = துன்பம்; அள்ளல் = சேறு; கவிர் = முள்ளுமுருங்கை ; தூவி = சிறகு; தேர்தல் = ஆராய்தல், (தேடுதல்) எவ்வம் = துன்பம்; தூஉம் = தூவும்; துவலை = நீர்த்துளி; கூர்தல் = மிகுதல்; வாடை = குளிர் காற்று ( வடக்கிலிருந்து வரும் காற்று).

உரை: தோழி, விரைவாக ஓடிவரும் வெள்ளத்தால் குவிக்கப்பட்ட, நடுங்கும்படியான துன்பத்தைத் தரும் சேற்றில், மீனாகிய உணவைத் தேடுகின்ற, முள்ளு முருங்கை மலரின் இதழைப் போன்ற மெல்லிய இறகையும், சிவந்த அலகையும் உடைய நாரைக்கு துன்பம் உண்டாகும்படித் தூவுகின்ற நீர்த்துளிகளையுடைய, துயரம் மிகுந்த வாடைக்காற்று வீசும்  கூதிர் காலத்திலும் நம்முடைய தலைவர் வரமாட்டார் போலிருக்கிறது. நான் இனி உயிர் வாழமாட்டேன்.

சிறப்புக் குறிப்பு: வாடைக் காற்று வீசும் இந்தக் குளிர்காலத்தில், நாரையும் தான் இரை தேடும்பொழுது துன்பப் படுகிறது. ஆனால், தலைவர் தன்னுடைய பொருள்தேடும் முயற்சியை ஒழித்துத் தன்னிடம் திரும்பி வரமாட்டாரோ என்று தலைவி என்ணுவதாகத் தோன்றுகிறது

102. தலைவி கூற்று

102. தலைவி கூற்று

பாடியவர்: ஔவையார். இவறைப் பற்றிய செய்திகளைப் பாடல் 15-இல் காணலாம்.
திணை: நெய்தல்.
 கூற்று: ஆற்றாளெனக் கவன்ற (கவலையுற்ற) தோழிக்குக் கிழத்தி (தலைவி), ‘யான் யாங்ஙனம் ஆற்றுவேன்?’ என்றது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து சென்று நீண்ட காலம் ஆகிவிட்டதே. தலைவி என்ன பாடுபடுவாளோ !” என்று தோழி கவலைப்படுகிறாள். தோழி கவலைப்படுவதை அறிந்த தலைவி, “அவரை நினைத்து நினைத்து நான் காமநோயால் வருந்துகிறேன், அவர் இன்னும் வரவில்லையே ! இந்தப் பிரிவை நான் எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறேன் என்று தெரியவில்லையே!”என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

உள்ளின் உள்ளம் வேமே உள்ளா
திருப்பினெம் அளவைத் தன்றே வருத்தி
வான்றோய் வற்றே காமம்
சான்றோர் அல்லர்யாம் மரீஇ யோரே. 

கொண்டு கூட்டு: உள்ளின் உள்ளம் வேம்;  உள்ளாது இருப்பின் எம் அளவைத்து அன்று. காமம்  வருத்தி வான்தோய்வற்று. யாம் மரீஇயோர் சான்றோர் அல்லர். 

அருஞ்சொற்பொருள்: வேம் = வேகும்; அளவைஅளவு; தோய்தல் = தொடுதல், மருவுதல் = தழுவுதல்.

உரை: தலைவரை நினைத்தால் என் உள்ளம் வேகும். நினையாமல் இருக்கலாம் என்றால், அவ்வாறு  இருத்தல் எனது ஆற்றல் அளவிற்கு உட்பட்டது அன்றுவானத்தைத் தொடுவது போன்று மிகப் பெரிதாக என்னைக் காமநோய் வருத்துகிறது. என்னால் தழுவப்பட்ட என் தலைவர் சான்றோர் அல்லர்.


சிறப்புக் குறிப்பு:     ”என் துயரத்தை அறியாததால் அவர் அன்புடையவர் அல்லர். அவருடைய பிரிவு நீட்டித்தலால் என் உடலில் உண்டாகிய வேறுபாடுகளையறிந்த ஊரார் தம்மைத் பழித்துரைப்பதைப் பற்றிக் கவலைப்படாமல் இன்னும் பிரிந்தே இருப்பதால் அவர் நாணமில்லாதவர்.  இல்லறத்தில் இருப்பவர்கள் தம் தலைவியருடன் இருந்து இன்புறும் உலக வழக்கை மறந்ததால் அவர் ஒப்புரவு (உலகத்தார் போற்றும் நல்லொழுக்கம்) இல்லாதவர். என் துயரத்தை நீக்க வாராததால் அவர் கண்ணோட்டம் இல்லாதவர். தாம் கூறிய காலத்தில் திரும்பி வராததால் அவர் வாய்மை உடையவர் அல்லர். ஆகவே, அவர் அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்ற சான்றாண்மைக்கு இன்றியமையாத ஐந்து பண்புகளும் இல்லாதவர் ஆகையால் அவர் சான்றோர் அல்லர்.” என்று தலைவி எண்ணுவதாகவும், “அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையோடு, ஐந்துசால்பு ஊன்றிய தூண் (குறள், 983) என்ற குறள் இங்கு ஒப்பு நோக்கத் தக்கதாகவும் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.

101. தலைவன் கூற்று

101. தலைவன் கூற்று

பாடியவர்:   பரூஉ மோவாய்ப் பதுமர். பருத்த மோவாயை உடைய பதுமர் என்பது இப் பெயரின் பொருள். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. 
திணை: குறிஞ்சி.
 கூற்று - 1: தலைமகட்குப் பாங்காயினார் (தோழி முதலியோர்) கேட்பச் சொல்லியது.
கூற்ரு – 2: வலித்த நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியதூஉமாம். (செலவழுங்குதல் என்றால் பிரிதலைத் தவிர்த்தல் என்று பொருள்)
கூற்று விளக்கம்: இப்பாடல் இரண்டு வகையான பின்னணியில் இயற்றப்பட்டதாக எண்ணிப் பார்க்கலாம்தலைவியைப் பிரிந்து செல்ல விரும்பாத தலைவன் தலைவியின் தோழிகள் கேட்குமாறு கூறியதாகக் கருதலாம். தலைவியைவிட்டுப் பிரிய விரும்பாத தலைவன் பிரிவைத் தவிர்க்கும் எண்ணத்தோடு தனக்குக்தானே சொல்லியதாகவும் கருதலாம். இரண்டாவது கருத்து சிறந்ததாகத் தோன்றுகிறது.

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும்
இரண்டும் தூக்கிற் சீர்சா லாவே
பூப்போல் உண்கண் பொன்போல் மேனி
மாண்வரி அல்குற் குறுமகள்
தோள்மாறு படூஉம் வைகலோ டெமக்கே.

கொண்டு கூட்டு: விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் அரிதுபெறு சிறப்பிற் புத்தேள் நாடும் பூப்போல் உண்கண் பொன்போல் மேனி மாண்வரி அல்குல் குறுமகள்
எமக்குத் தோள்மாறு படூஉம் வைகலோடு இரண்டும் சீர்தூக்கின் சாலா.

அருஞ்சொற்பொருள்: திரை = அலை; வளைஇய = சூழ்ந்த; அரிதுபெறு = பெறுதற்கரிய; புத்தாள் நாடு = துறக்க உலகம் (சுவர்க்க உலகம்); சீர்தூக்குதல் = ஒப்பு நோக்குதல்; சாலுதல் = ஒவ்வுதல்; உண்கண் = மைதீட்டிய கண்கள்; மாண் = மாட்சிமை; வரி = தேமல்; அல்குல் = இடை.

உரை: விரிந்த அலைகளையுடைய பெரிய கடலால் சூழப்பட்ட இந்த உலக இன்பம்,   பெறுதற்கரிய சிறப்பையுடைய தேவருலக இன்பம் ஆகிய இரண்டும், பூவைப் போன்ற மையுண்ட கண்களையும், பொன்னைப் போன்ற நிறத்தையும், மாட்சிமைப்பட்ட தேமலையுடன் கூடிய இடைகளையும் உடைய, தலைவியுடன்  தோளோடு தோள் மாறுபடத்தழுவும் நாளில் எமக்குக் கிடைக்கும்  இன்பத்திற்கு ஈடாகா.


சிறப்புக் குறிப்பு: மண்ணுலக இன்பம் பொருளால் வருவது. தேவருலக இன்பம் அறத்தால் வருவது. ஆகவே, பொருளாலும் அறத்தாலும் பெறும் இன்பத்தைவிட காமத்தால் கிடைக்கும் இன்பம் சிறந்தது என்று தலைவன் எண்ணுகிறான். தோள் மாறுபடுதல் என்பது ஒருவரின் இடது தோள் மற்றவரின் வலது தோளிலும், ஒருவரின் வலது தோள் மற்றவரின் இடது தோளிலும் பொருந்துமாறு தழுவுவதைக் குறிக்கிறது.  “எமக்குஎன்றதால் தோளோடு தோள் மாறுபடத் தழுவுவதால் தலைவன் தலைவி ஆகிய இருவரும் இன்பம் அடைந்தார்கள் என்பது பெறப்படுகிறது

100. தலைவன் கூற்று

100. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: 1) பாங்கற்கு உரைத்தது.
கூற்று: 2) அல்லகுறிப்பட்டு (குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க முடியாமல்) மீள்கின்றான் திரும்புபவன்) தன் நெஞ்சிற்குக் கூறியது
கூற்று விளக்கம் - 1: தலைவன் சோர்வடைந்த தோற்றத்தோடு தோன்றுகிறான். அதைக் கண்ட தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்தச் சோர்வு?” என்று கேட்கிறான். அதற்கு மறுமொழியாகத் தலைவன், “நான் மலையில் வாழும்  பெண் ஒருத்தியைக் கண்டேன். அவள் மிகவும் அழகானவள். ஆனால், அவள் பெறுதற்கு அரியவள்.” என்று கூறித் தன் சோர்வின் காரணத்தைத் தோழனுக்குக் கூறுகிறான்.
கூற்று விளக்கம் – 2: இப்பாடலைத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறியதாகவும் எண்ணிப் பார்க்கலாம். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வரும்பொழுது, தலைவி  தன் வரவை அறிந்துகொள்வதற்காக சில ஒலிகளைச் செய்வது வழக்கம். ஒருநாள் இரவு, தலைவி தலைவனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் சில ஒலிகள் கேட்டன. அவை தலைவனால் எழுப்பப்பட்ட ஒலிகள் என்று எண்ணித் தலைவி ஏமாந்தாள். தலைவன் வந்து ஒலி செய்தான். அவ்வொலிகளைக் கேட்ட தலைவி, முன்பு போல் ஏமாற விரும்பாமல், தலைவனைக் காண வரவில்லை. அதனால், தலைவன் தலைவியை சந்திக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பினான். அந்தச் சூழ்நிலையில், “என் காதலி மிகவும் அழகானவள். ஆனால், அவளை அடைவது அரிதாக இருக்கிறதே.” என்று தனக்குக்தானே கூறியதாகவும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம். ஆனால், இதைவிட, தலைவன் தோழனிடம் கூறியதாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. 

கொண்டுகூட்டு: அருவிப் பரப்பின் ஐவனம் வித்திபருஇலை குளவியொடு, பசுமரல் கட்கும் காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும் வல்வில் ஓரி (யின்) கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே. (அவள்பணைப்பெருந் தோள் மணத்தற்கு அரிய.

அருஞ்சொற்பொருள்: பரப்பு = பரந்த நிலம்; ஐவனம் = மலைநெல்; வித்தி = விதைத்து; பரு = பருத்த; குளவி = காட்டுமல்லிகை; பசு = பசுமையான; மரல் = கற்றாழை; கட்கும் = களைந்து எறியும்; பசிப்பின் = பசித்தால் ; வேழம் = யானை; கோடு = தந்தம்; நொடுத்து = விற்று ; வல்வில் ஓரிஇவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்;  குடவரை = மேற்குப் பக்கத்திலுள்ள மலை; மடம் = அழகு ; பணை = மூங்கில்.

உரை: அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும்,  பசியமரலையையும்  களைந்தெறியும், காந்தளையே இயற்கை வேலியாகவுடைய, சிற்றூரில் உள்ளவர்கள், உணவின்றிப் பசியால் வாடினால், வீரம் மிகுந்த யானையின் கொம்பை விற்றுப் பெற்ற பொருளால் உணவை வாங்கி உண்ணுவர். அத்தகையோர் வாழும் சிற்றூரில், வல்வில் ஓரியின் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் மலையைக் குடைந்து செய்யப்பட்ட பாவையைப் போல அழகுடைய பெண் ஒருத்தியைக் கண்டேன். ஆனால், அவளது மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்.

சிறப்புக் குறிப்பு: கொல்லிப்பாவை மிகவும் அழகான பாவை. ஆனால் அது அடைதற்கு அரியது. அதுபோல், தலைவன் கண்ட பெண்ணும் மிகவும் அழகுடையவள். ஆனால் அவள் அடைதற்கு அரியவள்.

99. தலைவன் கூற்று

99. தலைவன் கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பொருள் முற்றிப் புகுந்த (பொருள் தேடிக்கொண்டு திரும்பிவந்த) தலைமகன் ''எம்மை நினைத்தும் அறிதிரோ?'' என்ற தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் பொருளோடு திரும்பி வந்தான். “நீங்கள் பிரிந்திருந்த பொழுது எங்களை நினைத்தீர்களா?” என்று தோழி தலைவனைக் கேட்கிறாள். அதற்குத் தலைவன், “ நான் எப்பொழுதும் உங்கள் நினைவாகவேதான் இருந்தேன்.” என்று மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே. 

கொண்டுகூட்டு: நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறைஇறைத்து உணச் சென்று அற்றாங்கு அனைப்பெரும் காமம் ஈண்டு கடைக்கொளயான் உள்ளினென் அல்லனோ; உள்ளிப் பெரிதே நினைத்தனென் அல்லனோஉலகத்துப் பண்பை நினைத்து
மருண்டனென் அல்லனோ !

அருஞ்சொற்பொருள்: உள்ளுதல் = எண்ணுதல்; உள்ளி = எண்ணி; நினைத்தல் = மீண்டும் மீண்டும் எண்ணுதல்; மருண்டனென் = மயங்கினேன்; நீடிய = உயர்ந்த; மராஅம் = மரம்; கோடு = கிளை; தோய்தல் = கலத்தல் (தொடுதல்); மலிர்தல் = பெருகுதல்; மலிர் = பெருவெள்ளம்; இறைத்தல் = நீர் இறைத்தல்;  அற்றாங்கு = அற்ற + ஆங்கு = அற்றது போல; அனை = அத்துணை; கடைக்கொள்ளுதல் = முடிவடைதல்.

உரை: உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு ஓடும் மிகப் பெரிய வெள்ளம், பிறகு கையால் இறைத்து உண்ணும் அளவு குறைந்து போவதுபோல,  வெள்ளத்தைப் போன்ற என்னுடைய பெரிய காமநோய், நான் இங்கே வருவதால் முடிவடையும் என்பதால் நான் தலைவியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். அங்ஙனம் எண்ணி,  மீண்டும் மீண்டும் மிகவும் அவளையே நினைவு கூர்ந்தேன். அவ்வாறு அவளை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன்.


சிறப்புக் குறிப்பு: உலகத்து பண்புஎன்றது இல்லறத்தில் இருப்பவன் அதற்குத் தேவையான பொருளைத் தேடுவதற்காகப் பிரிந்து சென்றால், அந்தப் பொருளைப் பெற்ற பிறகே திரும்பி வரவேண்டும் என்பதைக் குறிக்கிறது. தலைவன் பொருளும் சேர்க்கவேண்டும், குறிப்பிட்ட  காலத்திற்குள் திரும்பியும் வரவேண்டும். இதற்கிடையில் தலைவியைப் பிரிந்திருப்பதால்  காமநோய் அவனை வருத்துகிறது. ஆகவேதான், உலகத்தின் இயல்பை எண்ணித் தலைவன் மயக்கம் அடைந்தான் என்று தோன்றுகிறது.  

98. தலைவி கூற்று

98. தலைவி கூற்று

பாடியவர்: கோக்குள முற்றனார். இவர் குறுந்தொகையில் ஒருபாடலும் (98) நற்றிணையில் ஒருபாடலும் (96) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பருவம் கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலம் வந்துவிட்டது. கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தலைவனின் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அவள் பசலை நோயுற்றிருக்கிறாள். ”நான் பசலையுற்றதையும் கார்காலம் வந்ததையும் யாராவது தலைவனிடம் சென்று அறிவுறுத்தினால் நன்றாக இருக்குமே.” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே. 

கொண்டுகூட்டு: வாழி ! தோழி ! நம் படப்பை நீர்வார் பைம்புதலில் கலித்த மாரிப் பீரத்து அலர் சிலகொண்டு அவர்த் துன்னச் சென்று, நன்னுதல் இன்னளாயினள் என்று செப்புநர்ப் பெறின் நன்றுமன்.

அருஞ்சொற்பொருள்: இன்னள் = இத்தகையவள்; நன்னுதல் = நல் + நுதல் = நல்ல நெற்றி (இங்கு, நல்ல அழகிய நெற்றியையுடைய தலைவியைக் குறிக்கிறது); துன்னுதல் = நெருங்குதல்; செப்புதல் = கூறுதல்; பெறின் = பெற்றால்; மன்அசைச்சொல்; அதைப் பெறவில்லை என்ற பொருளில் வந்துள்ளது; நன்மை = உதவி; படப்பை = தோட்டம், கொல்லை (வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டம்); வார்தல் = ஒழுகல்; பை = பசுமை; புதல் = புதர்; கலித்த = தழைத்த; மாரி = மழைக்காலம்; பீர் = பீர்க்கு; அலர் = பூ.

உரை: தோழி, நீ வாழ்க! நம் தோட்டத்திலுள்ள, நீர் ஒழுகுகின்ற பசுமையான புதரில் தழைத்த, மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, தலைவரை அணுகிச் சென்று, நல்ல நெற்றியையுடைய தலைவி இப்பூவைப் போன்ற பசலை நோயை அடைந்தாள், என்று அவரிடம் சொல்லுவாரை யான் பெற்றால், அது மிகவும் உதவியாக இருக்கும்.

சிறப்புக் குறிப்பு: நன்னுதல் என்றது தலைவனைக் கண்ட பொழுது பசலை படராத அழகிய நெற்றியை உடையவளாகத் தலைவி இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. தலைவனைப் பிரிந்த வருத்தத்தால், இப்பொழுது அவளுடைய நெற்றியில் படர்ந்திருக்கும் பசலை, பீர்க்கம் பூவின் நிறத்தை ஒத்திருக்கிறது.
மாரிக்காலம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகப் பீர்க்கம் பூ பூத்திருக்கிறது. பீர்க்கம் பூவைத் தலைவனிடம் காட்டுவது  தலைவியின் பசலையையும், மழைக்காலம் வந்ததையும்  ஒருங்கே நினைவுறுத்தற்கு உதவியாக இருக்கும் என்று தலைவி எண்ணுகிறாள்.

அவளுடைய களவொழுக்கம் பிறர் அறியாததால், தனக்குத் தூதுவனாகச் சென்று தன்னைப் பற்றிய செய்தியைக் கூறுபவர் தலைவனை அணுகிப் பிறர் அறியாதவாறு தன் நிலையைப் பற்றி கூற வேண்டும் என்று  தலைவி விரும்புகிறாள்

97. தலைவி கூற்று

97. தலைவி கூற்று

பாடியவர்: வெண்பூதியார். இவர் குறுந்தொகையில் மூன்று படலகள் (97, 174, 219) இயற்றியுள்ளார். வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார் என்பாரும் இவரும் ஒருவரே. பெயர் அளவில் பெண்பாலாக இருக்கலாம் என்று தோன்றினாலும் வெள்ளூர் கிழார் மகனார் என்று இருப்பதால் ஆண்பால் என்றே கொள்ள வேண்டும்.என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.  
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்தவழி, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பொழுது அவர்களின் மறைவான காதல் ஊரில் பலருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் தலைவன் திருமணத்திற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. அதனால் வருத்தமுற்ற தலைவி தன் வருத்தத்தைத் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள்.

யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே. 

கொண்டுகூட்டு: யானே ஈண்டையேன்; என் நலன் ஆனா நோயொடு கானலஃது;
துறைவன் தம் ஊரான்; மறை அலராகி மன்றத்தஃது. 

அருஞ்சொற்பொருள்: ஈண்டு = இவ்விடம்; நலன் = அழகு; ஆனா = குறையாத; நோய் = வருத்தம்கானல் = கடற்கரைச் சோலை; துறைவன் = நெய்தல்நிலத் தலைவன்; மறை = களவுக் காதல்; மன்றம் = பொதுவிடம்.

உரை: தோழி, நான் இங்கே தனியளாக உள்ளேன்; எனது பெண்மைநலம் என்னைவிட்டு நீங்கிக் குறையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையில் உள்ளது; தலைவன் தனது ஊரில் உள்ளான்; எங்களுடைய களவொழுக்கத்தை பற்றிய செய்தியானது பலரும் அறியும்படி பழிச்சொற்களாகப் பொதுவிடத்தில் பரவி உள்ளது.


சிறப்புக் குறிப்பு: ”நான் இங்கே தனியளாக இருக்கிறேன். என் தலைவன் அவனுடைய ஊரில் இருக்கிறான். ஒன்றாக இருக்க வேண்டிய நாங்கள் இப்படித் தனித்து வாழ்கிறோம். அவனை கடற்கரைச் சோலையிலே எப்பொழுது சந்தித்தேனோ அங்கேயே என் பெண்மை நலன் என்னைவிட்டு நீங்கியது. தலைவனைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

Tuesday, October 6, 2015

96. தலைவி கூற்று

96. தலைவி கூற்று

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 32 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகனை இயற்பழித்துத் (இயல்பைப் பழித்துத்) தெருட்டும் ( தெளிவு படுத்தும்) தோழிக்குத் தலைமகள் இயற்படச் ( இயல்பைச் சிறப்பித்துச்) சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதற்குக் காலம் தாழ்த்துகிறான். திருமணத்திற்கான முயற்சிகள் எவற்றையும் தலைவன் செய்யவில்லை. இதை அறிந்த தோழி தலைவன்மீது கோபம் கொள்கிறாள். ஆகவே, அவள் தலைவனை இகழ்ந்து பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி , “ நீ விளையாட்டுக்காக அவ்வாறு பேசினாய் என்று நினைக்கிறேன்நீ தலைவனைப் உண்மையாகவே பழித்துப் பேசியிருந்தால், நீ மிகவும் துன்பப்படுவாய்.” என்று கூறித் தோழியிடம் சினந்துகொள்கிறாள்.

அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு
யானெவன் செய்கோ என்றி யானது
நகையென உணரேன் ஆயின்
என்னா குவைகொல் நன்னுதல் நீயே. 

கொண்டுகூட்டு: நன்னுதல் !அருவி வேங்கைப் பெருமலை நாடற்கு ”யான் எவன் செய்கோ ?” என்றி. யான் அது நகை என உணரேன் ஆயின் நீ என்ஆகுவை

அருஞ்சொற்பொருள்: வேங்கை = ஒரு வகை மரம்; என் செய்கோ = என்ன செய்வேன்; நகை = மகிழ்ச்சி தோன்ற விளையாட்டாகப் பேசுவது; நன்னுதல் = நல் +நுதல் = நல்ல நெற்றி.

உரை: நல்ல நெற்றியை உடைய தோழி ! அருவியின் அருகில் வளரும் வேங்கை மரங்களையுடைய, பெரிய மலையையுடைய நாட்டுக்குரிய தலைவனை என்னால் என்ன செய்ய முடியும் என்று கூறி நீ அவனை பழித்துப் பேசினாய். நீ அங்ஙனம் கூறியதை, நான் நீ விளையாட்டுக்காக கூறினாய் என்று எண்ணாமல் இருந்திருந்தால் நீ என்ன பாடு பட்டிருப்பாய் என்று தெரியுமா?


சிறப்புக் குறிப்பு:  ”அருவி வேங்கைப் பெருமலை நாடன்என்றது, அருவி தன்னைச் சார்ந்த வேங்கையைப் பாதுகாப்பதைப் போலத் தலைவன் தன்னை பாதுகாப்பான் என்று தலைவி எண்ணுவதைக் குறிக்கிறது.

95. தலைவன் கூற்று

95. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: தலைமகன் பாங்கற்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: மனம் வருந்தி உடல் மெலிந்து காணப்படும் தலைவனை நோக்கித் தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? இந்த வேறுபாட்டிற்குக் காரணம் என்ன ?” என்று கேட்கிறான். “ஒரு  இளம்பெண்னின் மீது நான் கொண்ட காதலால் எனக்கு இந்த நிலை வந்தது.”  என்று தலைவன் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே. 

கொண்டுகூட்டு: மால்வரை இழிதரும் தூவெள் அருவி கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல் சிறுகுடிக் குறவன் பெருந்தோள் குறுமகள் நீரோரன்ன சாயல் தீயோரன்ன என் உரன் அவித்தன்றே. 

அருஞ்சொற்பொருள்: மால் = பெரிய ; வரை = மலை; இழிதல் = விழுதல்; தூ = தூய்மையான; முகை = குகை; கன்முகை = கல் + முகை = பாறைகளின் வெடிப்பு; ததும்புதல் = ஒலித்தல்; சாரல் = மலைப்பக்கம்; குறவன் = குறிஞ்சிநிலத்தில் வாழ்பவன்; ஓர்அசைச்சொல்; சாயல் = மென்மை; உரன் = மனவலிமை, ஊக்கம்; அவித்தல் = கெடுத்தல்.

உரை: தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,  பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின் நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச் செய்தது.

சிறப்புக் குறிப்பு: ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு (1308).” என்ற குறளில் வள்ளுவர்போர்க்களத்தில் வலிய பகைவரும் அஞ்சி நடுங்கத் தக்க என் பெருமிதம், இவள் ஒளி பொருந்திய நெற்றிக்கு ஆற்றாமல் தோற்று விட்டதே!”, என்று கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.
எதிர்ப்பட்ட பொருள் அனைத்தையும் அழிக்கும் தன்மை உடையதால், அழிக்கும் வலிமைக்குத் தீயை உவமை கூறுவது மரபு.  “வளித்தலைஇய தீயும்... போல... தெறலும் ... உடையோய்  (புறநானூறு. 2:4-8)” என்று புறநானூற்றில் முரஞ்சியூர் முடிநாகனார் சேரமான் பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனின் வலிமைக்குத் தீயை உவமையாகக் குறிப்பிட்டிருப்பதும், ”நீரினும் இனிய சாயல் பாரி வேள்என்று புறநானூற்றுப் பாடல் 105 – இல் கபிலர் பாரியின் இனிய தன்மைக்கு நீரை உவமையாகக் கூறியிருப்பதும் இங்கு ஒப்பு நோக்கத் தக்கது.

94. தலைவி கூற்று

94. தலைவி கூற்று

பாடியவர்: கதக்கண்ணனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்று மட்டுமே.
திணை: முல்லை.
கூற்று: பருவம் கண்டு ஆற்றாள்'' எனக் கவன்ற(கவலைப் பட்ட) தோழிக்கு, ''ஆற்றுவல்'' என்பதுபடத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் மழைக்காலத்திற்கு முன்னரே திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது மழைக்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தமாக இருப்பாள் என்று எண்ணி, தோழி தலைவியைக் காண வருகிறாள். தலைவி பிச்சிப்பூக்களை உற்று நோக்கியவாறு இருக்கிறாள். “பிச்சிப் பூக்களையே பார்த்துக்கொண்டு மிகுந்த சிந்தனையோடு இருக்கிறாயே ! தலைவனை நினைத்து வருத்தமாக இருக்கிறாயா?” என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். “இன்னும் மழைக்காலம் வரவில்லை. தலைவன் வரும்வரை நான் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால்மழைக்காலத்திற்கு முன்னதாகவே இந்தப் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. அவை அறிவில்லாதவை. மேகம் முழங்குகின்றது; மழை பெய்கிறது; இதைக் கண்டு, தான் சென்ற காரியத்தை முடிக்காமலே தலைவர் திரும்பிவிடுவரோ என்று அஞ்சினேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே. 

கொண்டுகூட்டு: தோழி ! பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வேன்; இன்னுந் தமியர் பிரிந்திசினோர் அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலைதரும் குரல் பானாள் கேட்பிற் பெயர்த்தும்என் ஆகுவர் கொல் ?

அருஞ்சொற்பொருள்: பெரு = பெரிய; தண்மை = குளிர்ச்சி; மாரி = மழைக்காலம் (கார்காலம்ஆவணி, புரட்டாசி மாதங்கள்) ; பேதைமை = அறிவின்மை; பித்திகம் = பிச்சிப்பூ; மருள்தல் = மயங்குதல்; பால் = பகுதி; பானாள் = பால் + நாள் = நடுநாள், நள்ளிரவு (இங்கு, நள்ளிரவைக் குறிக்கிறது); தமியர் = தனியர்; பிரிந்திசினோர் = பிரிந்தவர்; தத்துதல் = தாவிச்செல்லுதல்; கருவி = தொகுதி; மழை = மேகம்; சிலைத்தல் = ஒலித்தல் ; குரல் = ஓசை.

உரை: தோழி, மிகுந்த குளிர்ச்சியையுடைய மழைக்காலத்துக்குரிய பிச்சியின் அரும்புகள், ஆறிவில்லாதவை. அவை தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகவும் சிவந்தன; அவற்றைக் கண்டு இது கார்காலம் (மழைக்காலம்) என்று நான் மயங்கமாட்டேன். ஆயினும்இன்னும் என்னிடம் வந்துசேராமல் என்னைப் பிரிந்து தனித்து இருக்கும் என் தலைவர், பெரிய மலையிலிருந்து அருவி நீர் பாய்ந்து விழும்படி மேகக் கூட்டங்கள்  ஒன்றாகச் சேர்ந்து  மழை பெய்து முழங்கும் ஓசையை நள்ளிரவில் கேட்டால், ஏற்கனவே என்னைப் பிரிந்து வருந்தும் அவர் மீண்டும் எந்த நிலையை அடைவாரோ!


சிறப்புக் குறிப்பு: பிச்சிப்பூ மழைக்காலத்தில் சிவந்த நிறமாக இருக்கும் இயல்பையுடைய பூமழைக்காலம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாகத்தான் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. தலைவன் இன்னும் திரும்பி வராததால், இன்னும் மழைக்காலம் வரவில்லை என்று தலைவி எண்ணுகிறாள். மேகம் மழை பொழிந்ததால் மழைக்காலத்திற்கு முன்னரே பிச்சிப்பூக்கள் சிவந்ததாகத் தலைவி எண்ணுகிறாள். ஆகவே, பிச்சிப்பூவை அறிவில்லாத பூ என்று கூறுகிறாள்