Thursday, October 15, 2015

100. தலைவன் கூற்று

100. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: 1) பாங்கற்கு உரைத்தது.
கூற்று: 2) அல்லகுறிப்பட்டு (குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க முடியாமல்) மீள்கின்றான் திரும்புபவன்) தன் நெஞ்சிற்குக் கூறியது
கூற்று விளக்கம் - 1: தலைவன் சோர்வடைந்த தோற்றத்தோடு தோன்றுகிறான். அதைக் கண்ட தோழன், “ உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இந்தச் சோர்வு?” என்று கேட்கிறான். அதற்கு மறுமொழியாகத் தலைவன், “நான் மலையில் வாழும்  பெண் ஒருத்தியைக் கண்டேன். அவள் மிகவும் அழகானவள். ஆனால், அவள் பெறுதற்கு அரியவள்.” என்று கூறித் தன் சோர்வின் காரணத்தைத் தோழனுக்குக் கூறுகிறான்.
கூற்று விளக்கம் – 2: இப்பாடலைத் தலைவன் தன் நெஞ்சுக்குக் கூறியதாகவும் எண்ணிப் பார்க்கலாம். தலைவன் இரவு நேரத்தில் தலைவியைக் காண வரும்பொழுது, தலைவி  தன் வரவை அறிந்துகொள்வதற்காக சில ஒலிகளைச் செய்வது வழக்கம். ஒருநாள் இரவு, தலைவி தலைவனின் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள். வழக்கம்போல் சில ஒலிகள் கேட்டன. அவை தலைவனால் எழுப்பப்பட்ட ஒலிகள் என்று எண்ணித் தலைவி ஏமாந்தாள். தலைவன் வந்து ஒலி செய்தான். அவ்வொலிகளைக் கேட்ட தலைவி, முன்பு போல் ஏமாற விரும்பாமல், தலைவனைக் காண வரவில்லை. அதனால், தலைவன் தலைவியை சந்திக்காமல் ஏமாற்றத்தோடு திரும்பினான். அந்தச் சூழ்நிலையில், “என் காதலி மிகவும் அழகானவள். ஆனால், அவளை அடைவது அரிதாக இருக்கிறதே.” என்று தனக்குக்தானே கூறியதாகவும் இப்பாடலை எண்ணிப் பார்க்கலாம். ஆனால், இதைவிட, தலைவன் தோழனிடம் கூறியதாகக் கருதுவது சிறந்ததாகத் தோன்றுகிறது

அருவிப் பரப்பின் ஐவனம் வித்திப்
பருவிலைக் குளவியொடு பசுமரல் கட்கும்
காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பிற்
கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத் துண்ணும்
வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப்
பாவையின் மடவந் தனளே
மணத்தற் கரிய பணைப்பெருந் தோளே. 

கொண்டுகூட்டு: அருவிப் பரப்பின் ஐவனம் வித்திபருஇலை குளவியொடு, பசுமரல் கட்கும் காந்தள் வேலிச் சிறுகுடி பசிப்பின்கடுங்கண் வேழத்துக் கோடுநொடுத்து உண்ணும் வல்வில் ஓரி (யின்) கொல்லிக் குடவரைப் பாவையின் மடவந்தனளே. (அவள்பணைப்பெருந் தோள் மணத்தற்கு அரிய.

அருஞ்சொற்பொருள்: பரப்பு = பரந்த நிலம்; ஐவனம் = மலைநெல்; வித்தி = விதைத்து; பரு = பருத்த; குளவி = காட்டுமல்லிகை; பசு = பசுமையான; மரல் = கற்றாழை; கட்கும் = களைந்து எறியும்; பசிப்பின் = பசித்தால் ; வேழம் = யானை; கோடு = தந்தம்; நொடுத்து = விற்று ; வல்வில் ஓரிஇவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்;  குடவரை = மேற்குப் பக்கத்திலுள்ள மலை; மடம் = அழகு ; பணை = மூங்கில்.

உரை: அருவி பாயும் பரந்த நிலத்தில் மலைநெல்லை விதைத்து, இடையிலே களையாக முளைத்த பருத்த இலையையுடைய காட்டுமல்லிகைச் செடியையும்,  பசியமரலையையும்  களைந்தெறியும், காந்தளையே இயற்கை வேலியாகவுடைய, சிற்றூரில் உள்ளவர்கள், உணவின்றிப் பசியால் வாடினால், வீரம் மிகுந்த யானையின் கொம்பை விற்றுப் பெற்ற பொருளால் உணவை வாங்கி உண்ணுவர். அத்தகையோர் வாழும் சிற்றூரில், வல்வில் ஓரியின் கொல்லி மலையின் மேற்குப் பக்கத்தில் மலையைக் குடைந்து செய்யப்பட்ட பாவையைப் போல அழகுடைய பெண் ஒருத்தியைக் கண்டேன். ஆனால், அவளது மூங்கில் போன்ற பெரிய தோள்கள் தழுவுதற்கு அரியனவாகும்.

சிறப்புக் குறிப்பு: கொல்லிப்பாவை மிகவும் அழகான பாவை. ஆனால் அது அடைதற்கு அரியது. அதுபோல், தலைவன் கண்ட பெண்ணும் மிகவும் அழகுடையவள். ஆனால் அவள் அடைதற்கு அரியவள்.

No comments:

Post a Comment