Tuesday, October 6, 2015

94. தலைவி கூற்று

94. தலைவி கூற்று

பாடியவர்: கதக்கண்ணனார். சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்று மட்டுமே.
திணை: முல்லை.
கூற்று: பருவம் கண்டு ஆற்றாள்'' எனக் கவன்ற(கவலைப் பட்ட) தோழிக்கு, ''ஆற்றுவல்'' என்பதுபடத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்றிருக்கிறான். அவன் மழைக்காலத்திற்கு முன்னரே திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். இப்பொழுது மழைக்காலம் வந்துவிட்டது. ஆனால், தலைவன் இன்னும் வரவில்லை. ஆகவே, தலைவி வருத்தமாக இருப்பாள் என்று எண்ணி, தோழி தலைவியைக் காண வருகிறாள். தலைவி பிச்சிப்பூக்களை உற்று நோக்கியவாறு இருக்கிறாள். “பிச்சிப் பூக்களையே பார்த்துக்கொண்டு மிகுந்த சிந்தனையோடு இருக்கிறாயே ! தலைவனை நினைத்து வருத்தமாக இருக்கிறாயா?” என்று தோழி தலைவியைக் கேட்கிறாள். “இன்னும் மழைக்காலம் வரவில்லை. தலைவன் வரும்வரை நான் பிரிவைப் பொறுத்துக்கொள்வேன். ஆனால்மழைக்காலத்திற்கு முன்னதாகவே இந்தப் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துவிட்டன. அவை அறிவில்லாதவை. மேகம் முழங்குகின்றது; மழை பெய்கிறது; இதைக் கண்டு, தான் சென்ற காரியத்தை முடிக்காமலே தலைவர் திரும்பிவிடுவரோ என்று அஞ்சினேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து
அரும்பே முன்னும் மிகச்சிவந் தனவே
யானே மருள்வேன் தோழி பானாள்
இன்னுந் தமியர் கேட்பிற் பெயர்த்தும்
என்னா குவர்கொல் பிரிந்திசி னோரே
அருவி மாமலை தத்தக்
கருவி மாமழைச் சிலை தருங் குரலே. 

கொண்டுகூட்டு: தோழி ! பெருந்தண் மாரிப் பேதைப் பித்திகத்து அரும்பே முன்னும் மிகச் சிவந்தனவே; யானே மருள்வேன்; இன்னுந் தமியர் பிரிந்திசினோர் அருவி மாமலை தத்தக் கருவி மாமழைச் சிலைதரும் குரல் பானாள் கேட்பிற் பெயர்த்தும்என் ஆகுவர் கொல் ?

அருஞ்சொற்பொருள்: பெரு = பெரிய; தண்மை = குளிர்ச்சி; மாரி = மழைக்காலம் (கார்காலம்ஆவணி, புரட்டாசி மாதங்கள்) ; பேதைமை = அறிவின்மை; பித்திகம் = பிச்சிப்பூ; மருள்தல் = மயங்குதல்; பால் = பகுதி; பானாள் = பால் + நாள் = நடுநாள், நள்ளிரவு (இங்கு, நள்ளிரவைக் குறிக்கிறது); தமியர் = தனியர்; பிரிந்திசினோர் = பிரிந்தவர்; தத்துதல் = தாவிச்செல்லுதல்; கருவி = தொகுதி; மழை = மேகம்; சிலைத்தல் = ஒலித்தல் ; குரல் = ஓசை.

உரை: தோழி, மிகுந்த குளிர்ச்சியையுடைய மழைக்காலத்துக்குரிய பிச்சியின் அரும்புகள், ஆறிவில்லாதவை. அவை தாம் சிவக்க வேண்டிய காலத்திற்கு முன்பே மிகவும் சிவந்தன; அவற்றைக் கண்டு இது கார்காலம் (மழைக்காலம்) என்று நான் மயங்கமாட்டேன். ஆயினும்இன்னும் என்னிடம் வந்துசேராமல் என்னைப் பிரிந்து தனித்து இருக்கும் என் தலைவர், பெரிய மலையிலிருந்து அருவி நீர் பாய்ந்து விழும்படி மேகக் கூட்டங்கள்  ஒன்றாகச் சேர்ந்து  மழை பெய்து முழங்கும் ஓசையை நள்ளிரவில் கேட்டால், ஏற்கனவே என்னைப் பிரிந்து வருந்தும் அவர் மீண்டும் எந்த நிலையை அடைவாரோ!


சிறப்புக் குறிப்பு: பிச்சிப்பூ மழைக்காலத்தில் சிவந்த நிறமாக இருக்கும் இயல்பையுடைய பூமழைக்காலம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாகத்தான் பிச்சிப்பூக்கள் பூக்க ஆரம்பித்துள்ளன. தலைவன் இன்னும் திரும்பி வராததால், இன்னும் மழைக்காலம் வரவில்லை என்று தலைவி எண்ணுகிறாள். மேகம் மழை பொழிந்ததால் மழைக்காலத்திற்கு முன்னரே பிச்சிப்பூக்கள் சிவந்ததாகத் தலைவி எண்ணுகிறாள். ஆகவே, பிச்சிப்பூவை அறிவில்லாத பூ என்று கூறுகிறாள்

6 comments:

  1. THIS EXPLANATION WAS EXCELLENT SIR. THANKYOU VERY MUCH SIR.

    ReplyDelete
  2. Dear Niveditha,

    Thank you for your comment. I am glad you liked my explanation. Please continue to read. The more you read the more you will appreciate Kurunthokai. What is really nice is the poem itself. My explanation simply helps you to understand the poem. The real credit goes to Kurunthokai.

    ReplyDelete
  3. அருமையான விளக்கம் ஐயா
    👏👏👏

    ReplyDelete
  4. அன்பிற்குரிய சிவபாரதி,

    நன்றி.

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete
  5. ஒவ்வொரு பாடலையும் மிகச்சுவைத்து நுண்மாண்நுழைபுலத்துடன் தமிழறிஞர்களைவிட ஆழமாக எளியவருக்கும் புரியும் வகையில் எழுதியுள்ளீர்கள். எடுப்பு ஆவணக் கோப்பு [pdf] பதிவேற்றம் தேடுபொறியில் வராது. ஒவ்வொரு சொல்லும் தேடுபொறியில் வரும் வகையில் பதிவேற்றித் தமிழை விசும்பலையில் பரவிவிடும் பணித்தொடர்க. என் மாணாக்கருக்கு உங்கள் உரையைப் பரிந்துரைத்து வருகிறேன்.
    இ.வளனறிவு (எ) சூசை.
    இலக்கணம் தொடர்பான YouTube பொழிவுகள் நிறைய தந்துள்ளேன்.
    தமிழ்த்துறை முன்னைத்தலைவர் தூய வளனார் ( st.joseph) கல்லூரி. திருச்சி

    ReplyDelete
  6. மதிப்பிற்குரிய சூசை அவர்களுக்கு,

    வணக்கம்.

    உங்களுடைய பாராட்டுதலுக்கும், என் உரையை நீங்கள் மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வதற்கும் என் மன்மார்ந்த நன்றி. புறநானூற்றுப் பாடல்கள் அனைத்திற்கும் நான் என்னுடைய உரையை என் வளைத்தளங்களில் (https://puram1to69.blogspot.com மற்றும் https://puram400.blogspot.com) பதிவு செய்திருக்கிறேன். நான் எழுதிய திருக்குறள் சார்ந்த கட்டுரைகளை https://thirukkuralkatturaikal.blogspot.com என்ற வலைத்தளத்தில் காணலாம். மேலும், என்னுடைய பல சொற்பொழிவுகள் வலையொளியில் (YouTube) முனைவர் பிரபாகரன்என்ற தலைப்பில் பதிவாகியுள்ளன. உங்களுக்கு ஆர்வமும் நேரமும் இருந்தால் அவற்றையும் கேளுங்கள்.

    வாழ்க நலமுடனும் வளமுடனும்!

    அன்புடன்,
    பிரபாகரன்

    ReplyDelete