Thursday, October 15, 2015

97. தலைவி கூற்று

97. தலைவி கூற்று

பாடியவர்: வெண்பூதியார். இவர் குறுந்தொகையில் மூன்று படலகள் (97, 174, 219) இயற்றியுள்ளார். வெள்ளூர்கிழார் மகனார் வெண்பூதியார் என்பாரும் இவரும் ஒருவரே. பெயர் அளவில் பெண்பாலாக இருக்கலாம் என்று தோன்றினாலும் வெள்ளூர் கிழார் மகனார் என்று இருப்பதால் ஆண்பால் என்றே கொள்ள வேண்டும்.என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் கூறுகிறார்.  
திணை: நெய்தல்.
கூற்று: வரைவு (திருமணம்) நீட்டித்தவழி, தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே களவொழுக்கம் தொடர்ந்து நடைபெறுகிறது. இப்பொழுது அவர்களின் மறைவான காதல் ஊரில் பலருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால் தலைவன் திருமணத்திற்கான முயற்சியை மேற்கொள்ளவில்லை. அதனால் வருத்தமுற்ற தலைவி தன் வருத்தத்தைத் தோழியுடன் பகிர்ந்து கொள்கிறாள்.

யானே ஈண்டை யேனே யென்னலனே
ஆனா நோயொடு கான லஃதே
துறைவன் தம்மூ ரானே
மறையல ராகி மன்றத் தஃதே. 

கொண்டுகூட்டு: யானே ஈண்டையேன்; என் நலன் ஆனா நோயொடு கானலஃது;
துறைவன் தம் ஊரான்; மறை அலராகி மன்றத்தஃது. 

அருஞ்சொற்பொருள்: ஈண்டு = இவ்விடம்; நலன் = அழகு; ஆனா = குறையாத; நோய் = வருத்தம்கானல் = கடற்கரைச் சோலை; துறைவன் = நெய்தல்நிலத் தலைவன்; மறை = களவுக் காதல்; மன்றம் = பொதுவிடம்.

உரை: தோழி, நான் இங்கே தனியளாக உள்ளேன்; எனது பெண்மைநலம் என்னைவிட்டு நீங்கிக் குறையாத வருத்தத்தோடு கடற்கரைச் சோலையில் உள்ளது; தலைவன் தனது ஊரில் உள்ளான்; எங்களுடைய களவொழுக்கத்தை பற்றிய செய்தியானது பலரும் அறியும்படி பழிச்சொற்களாகப் பொதுவிடத்தில் பரவி உள்ளது.


சிறப்புக் குறிப்பு: ”நான் இங்கே தனியளாக இருக்கிறேன். என் தலைவன் அவனுடைய ஊரில் இருக்கிறான். ஒன்றாக இருக்க வேண்டிய நாங்கள் இப்படித் தனித்து வாழ்கிறோம். அவனை கடற்கரைச் சோலையிலே எப்பொழுது சந்தித்தேனோ அங்கேயே என் பெண்மை நலன் என்னைவிட்டு நீங்கியது. தலைவனைத் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.” என்று தலைவி தோழியிடம் கூறுகிறாள்.

No comments:

Post a Comment