Thursday, October 15, 2015

98. தலைவி கூற்று

98. தலைவி கூற்று

பாடியவர்: கோக்குள முற்றனார். இவர் குறுந்தொகையில் ஒருபாடலும் (98) நற்றிணையில் ஒருபாடலும் (96) இயற்றியுள்ளார்.
திணை: முல்லை.
கூற்று: பருவம் கண்டு அழிந்த (வருந்திய) தலைமகள் தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: கார்காலம் வந்துவிட்டது. கார்காலத்தில் திரும்பிவருவேன் என்று சொல்லிச் சென்ற தலைவன் இன்னும் வரவில்லை. தலைவனின் பிரிவினால் தலைவி வருந்துகிறாள். அவள் பசலை நோயுற்றிருக்கிறாள். ”நான் பசலையுற்றதையும் கார்காலம் வந்ததையும் யாராவது தலைவனிடம் சென்று அறிவுறுத்தினால் நன்றாக இருக்குமே.” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

இன்ன ளாயினள் நன்னுதல் என்றவர்த்
துன்னச் சென்று செப்புநர்ப் பெறினே
நன்றுமன் வாழி தோழிநம் படப்பை
நீர்வார் பைம்புதற் கலித்த
மாரிப் பீரத் தலர்சில கொண்டே. 

கொண்டுகூட்டு: வாழி ! தோழி ! நம் படப்பை நீர்வார் பைம்புதலில் கலித்த மாரிப் பீரத்து அலர் சிலகொண்டு அவர்த் துன்னச் சென்று, நன்னுதல் இன்னளாயினள் என்று செப்புநர்ப் பெறின் நன்றுமன்.

அருஞ்சொற்பொருள்: இன்னள் = இத்தகையவள்; நன்னுதல் = நல் + நுதல் = நல்ல நெற்றி (இங்கு, நல்ல அழகிய நெற்றியையுடைய தலைவியைக் குறிக்கிறது); துன்னுதல் = நெருங்குதல்; செப்புதல் = கூறுதல்; பெறின் = பெற்றால்; மன்அசைச்சொல்; அதைப் பெறவில்லை என்ற பொருளில் வந்துள்ளது; நன்மை = உதவி; படப்பை = தோட்டம், கொல்லை (வீட்டிற்கு அருகில் உள்ள தோட்டம்); வார்தல் = ஒழுகல்; பை = பசுமை; புதல் = புதர்; கலித்த = தழைத்த; மாரி = மழைக்காலம்; பீர் = பீர்க்கு; அலர் = பூ.

உரை: தோழி, நீ வாழ்க! நம் தோட்டத்திலுள்ள, நீர் ஒழுகுகின்ற பசுமையான புதரில் தழைத்த, மழைக்காலத்தில் மலரும் பீர்க்கின் மலர்கள் சிலவற்றை எடுத்துக்கொண்டு, தலைவரை அணுகிச் சென்று, நல்ல நெற்றியையுடைய தலைவி இப்பூவைப் போன்ற பசலை நோயை அடைந்தாள், என்று அவரிடம் சொல்லுவாரை யான் பெற்றால், அது மிகவும் உதவியாக இருக்கும்.

சிறப்புக் குறிப்பு: நன்னுதல் என்றது தலைவனைக் கண்ட பொழுது பசலை படராத அழகிய நெற்றியை உடையவளாகத் தலைவி இருந்தாள் என்பதைக் குறிக்கிறது. தலைவனைப் பிரிந்த வருத்தத்தால், இப்பொழுது அவளுடைய நெற்றியில் படர்ந்திருக்கும் பசலை, பீர்க்கம் பூவின் நிறத்தை ஒத்திருக்கிறது.
மாரிக்காலம் வந்துவிட்டது என்பதற்கு அறிகுறியாகப் பீர்க்கம் பூ பூத்திருக்கிறது. பீர்க்கம் பூவைத் தலைவனிடம் காட்டுவது  தலைவியின் பசலையையும், மழைக்காலம் வந்ததையும்  ஒருங்கே நினைவுறுத்தற்கு உதவியாக இருக்கும் என்று தலைவி எண்ணுகிறாள்.

அவளுடைய களவொழுக்கம் பிறர் அறியாததால், தனக்குத் தூதுவனாகச் சென்று தன்னைப் பற்றிய செய்தியைக் கூறுபவர் தலைவனை அணுகிப் பிறர் அறியாதவாறு தன் நிலையைப் பற்றி கூற வேண்டும் என்று  தலைவி விரும்புகிறாள்

No comments:

Post a Comment