Thursday, October 15, 2015

99. தலைவன் கூற்று

99. தலைவன் கூற்று

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 15 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: பொருள் முற்றிப் புகுந்த (பொருள் தேடிக்கொண்டு திரும்பிவந்த) தலைமகன் ''எம்மை நினைத்தும் அறிதிரோ?'' என்ற தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன் பொருளோடு திரும்பி வந்தான். “நீங்கள் பிரிந்திருந்த பொழுது எங்களை நினைத்தீர்களா?” என்று தோழி தலைவனைக் கேட்கிறாள். அதற்குத் தலைவன், “ நான் எப்பொழுதும் உங்கள் நினைவாகவேதான் இருந்தேன்.” என்று மறுமொழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

உள்ளினென் அல்லனோ யானே உள்ளி
நினைத்தனென் அல்லனோ பெரிதே நினைத்து
மருண்டனென் அல்லனோ உலகத்துப் பண்பே
நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறை
இறைத்துணச் சென்றற் றாஅங்கு
அனைப்பெருங் காமம் மீண்டுகடைக் கொளவே. 

கொண்டுகூட்டு: நீடிய மராஅத்த கோடுதோய் மலிர்நிறைஇறைத்து உணச் சென்று அற்றாங்கு அனைப்பெரும் காமம் ஈண்டு கடைக்கொளயான் உள்ளினென் அல்லனோ; உள்ளிப் பெரிதே நினைத்தனென் அல்லனோஉலகத்துப் பண்பை நினைத்து
மருண்டனென் அல்லனோ !

அருஞ்சொற்பொருள்: உள்ளுதல் = எண்ணுதல்; உள்ளி = எண்ணி; நினைத்தல் = மீண்டும் மீண்டும் எண்ணுதல்; மருண்டனென் = மயங்கினேன்; நீடிய = உயர்ந்த; மராஅம் = மரம்; கோடு = கிளை; தோய்தல் = கலத்தல் (தொடுதல்); மலிர்தல் = பெருகுதல்; மலிர் = பெருவெள்ளம்; இறைத்தல் = நீர் இறைத்தல்;  அற்றாங்கு = அற்ற + ஆங்கு = அற்றது போல; அனை = அத்துணை; கடைக்கொள்ளுதல் = முடிவடைதல்.

உரை: உயர்ந்த மரத்தினது கிளையைத் தொட்டு ஓடும் மிகப் பெரிய வெள்ளம், பிறகு கையால் இறைத்து உண்ணும் அளவு குறைந்து போவதுபோல,  வெள்ளத்தைப் போன்ற என்னுடைய பெரிய காமநோய், நான் இங்கே வருவதால் முடிவடையும் என்பதால் நான் தலைவியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தேன். அங்ஙனம் எண்ணி,  மீண்டும் மீண்டும் மிகவும் அவளையே நினைவு கூர்ந்தேன். அவ்வாறு அவளை நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது, உலகத்தியல்பை எண்ணி மயங்கினேன்.


சிறப்புக் குறிப்பு: உலகத்து பண்புஎன்றது இல்லறத்தில் இருப்பவன் அதற்குத் தேவையான பொருளைத் தேடுவதற்காகப் பிரிந்து சென்றால், அந்தப் பொருளைப் பெற்ற பிறகே திரும்பி வரவேண்டும் என்பதைக் குறிக்கிறது. தலைவன் பொருளும் சேர்க்கவேண்டும், குறிப்பிட்ட  காலத்திற்குள் திரும்பியும் வரவேண்டும். இதற்கிடையில் தலைவியைப் பிரிந்திருப்பதால்  காமநோய் அவனை வருத்துகிறது. ஆகவேதான், உலகத்தின் இயல்பை எண்ணித் தலைவன் மயக்கம் அடைந்தான் என்று தோன்றுகிறது.  

No comments:

Post a Comment