Sunday, February 19, 2017

312. தலைவன் கூற்று

312. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன்னெஞ்சிற்கு வரைவுடைமை வேட்பக் (திருமணத்தில் விருப்பம் தோன்றக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்தார்கள். அதன் பின்னர் தலைவன் தன் இல்லத்திற்குச் செல்கிறான். தலைவி தன்னோடு இருக்கும் பொழுது மனம் ஒன்றி, அன்புடையவளாகப் பழகுவதையும், அவள் தன் சுற்றத்தாரோடு இருக்கும்பொழுது தன் களவொழுக்கத்தை மறைத்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடப்பதையும் நினைத்து, வியந்து, அவளை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. 


கொண்டு கூட்டு: நம் காதலோள் இரண்டு அறி கள்வி!  முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; வைகறையான்கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துசாந்துளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தளாகித் தமர் ஓரன்னள்!
அருஞ்சொற்பொருள்: கள்வி = உள்ளத்தில் உள்ளதை மறைத்து நடப்பவள்; முரண் = பகை; துப்பு = துணைவலி; செவ்வேல் = சிவந்த வேல்; மலையன் = மலையமான் திருமுடிக்காரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்);  நள் = செறிவு; கங்குல் = இருள்; ஓரன்னள் = ஒன்றிய தன்மையவள்; வேய்ந்த = சூடிய; விரவுதல் = கலத்தல்; உளர்தல் = பூசுதல்; கதுப்பு = பெண்களின் கூந்தல்; நீவி = தடவி; அமர்தல் = பொருந்துதல்; அமரா = பொருந்தாத; வைகறை = விடியற்காலம்.
உரை: இருவேறு விதமான நடத்தையை அறிந்த கள்ளத் தன்மையை உடைய நம் காதலி, இருள் செறிந்த  இரவில், எப்பகையையும் எதிர்க்கும் வலிமையையுடைய, சிவந்த வேலையுடைய மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர் மலைக்காட்டிலுள்ள நறுமணத்தைப் போன்ற மணம் வீசும்படி வந்து, நம்மோடு மனம் ஒன்றியவளாயினாள்; விடியற்காலத்தில், அவள் கூந்தலில் நான் சூட்டிய,  பலவகையான மலர்களை உதிர்த்துவிட்டு, மயிர்ச்சாந்து பூசிக் கோதிய மணமுள்ள கூந்தலில் எண்ணெயைத் தடவி, மாறுபட்ட முகத்துடன், தன் உறவினர்களோடு ஒத்தவளாயினாள்.
சிறப்புக் குறிப்பு: தலைவி தலைவனோடு மனம் ஒன்றிப் பழகுகிறாள். இரவிலே அவனோடு கூடி மகிழ்கிறாள். அவர்கள் இரவில் சந்திக்கும் பொழுது, அவன் அவளுக்குப் பலவகையான மலர்களைச் சூட்டி அவள் அழகைக் கண்டு மகிழ்கிறான். அவளும் அவன் விருப்பத்துக்கு இணங்கி நடந்துகொள்கிறாள். ஒருநாள், காலைவேளையில் தலைவன் தலைவி வீட்டுக்கு விருந்தினனாகச் சென்றான். அவள் தலையில், அவன் முதல் நாள் இரவு சூட்டிய மலர்களைக் காணவில்லை. அவள் அந்த மலர்களை உதிர்த்துவிட்டு, நீராடித் தலையில் எண்ணெயைத்  தடவி வாரியிருந்தாள். அவள் தன் சுற்றத்தாரோடு மனம் ஒன்றிப் பழகினாள். அவனோடு காதலியாக இரவில்  உறவாடியவள் இப்பொழுது அவனைத் தெரியாதவள் போல் நடந்துகொள்கிறாள். இவ்வாறு, இருவேறு விதமான நடத்தையை உடைய கள்வியாக அவள் இருப்பாது அவனுக்கு மிகுந்த வியப்பாக இருக்கிறது.
தலைவி இருவேறு விதமாக நடந்துகொள்ளும் ஆற்றல் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. ஆகவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்று தலைவன் நினைக்கிறான்
மலையமான் திருமுடிக்காரி:திருக்கோவலூருக்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் சங்க காலத்தில் மலாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது.  மலாடு என்ற பகுதிக்குக் கோவலூர் தலைநகராக இருந்தது.  கபிலர் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக்கொண்ட மலாடு என்ற பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னனின் பெயர் மலையமான் திருமுடிக்காரி.  இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  இவன் காரி என்றும் மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் தேர்வண்மலையன் என்றும் அழைக்கப்பட்டான்.
            பெண்ணையாற்றுக்குத் தென்மேற்கே உள்ள முள்ளூர் என்ற ஊரும் காரிக்குச் சொந்தமானதாக இருந்தது.  ஒரு சமயம் அதனைக் கைப்பற்ற ஆரிய மன்னர் பெரிய வேற்படையோடு வந்து முற்றுகையிட்டனர்.  காரி அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.  இச்செய்தி, ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி ஆங்குஎன்ற நற்றிணைப் பாடலிலிருந்து (170) தெரியவருகிறது.

            மலையமான் திருமுடிக்காரி தமிழ் மூவேந்தருடன் நட்பு கொண்டிருந்தான்.  அவர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தான்.  உதாரணமாக, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் போரிட்ட பொழுது, திருமுடிக்காரி சோழனுக்குத் துணையாக இருந்து சேரனை எதிர்த்துப் போராடியதாகவும், அப்போரில் திருமுடிக்காரியின் உதவியால் சோழன் வென்றதாகவும் புறநானூற்றுப் பாடல் 125 – இல் குறிப்பிடப்பட்டுள்ளது

311. தலைவி கூற்று

311. தலைவி கூற்று
பாடியவர்: சேந்தன் கீரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று: அலரஞ்சிய தலைமகள், தலைமகன் சிறைப் புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்குக் காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். ஒருநாள், இரவில் தலைவியைக் காண்பதற்காகத் தலைவியின் வீட்டுக்கு வெளியே தலைவன் வந்து நிற்கிறான். அவன் வந்திருப்பது  தலைவிக்கும் தோழிக்கும் தெரியும். “தலைவன் தேரில் வந்ததைத் என் தோழியர் பலரும் கண்டனர். அதனால் அலர் பெருகியது.” என்று  தலைவன் காதில் கேட்குமாறு தலைவி தோழியிடம் கூறுகிறாள். அவள் சொல்லுவதைத் தலைவன் கேட்டால், அவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவில் செய்வான் என்று தலைவி எண்ணுகிறாள்.

அலர்யாங் கொழிவ தோழி பெருங்கடற்
புலவுநா றகன்றுறை வலவன் தாங்கவும்
நில்லாது கழிந்த கல்லென் கடுந்தேர்
யான்கண் டனனோ இலனோ பானாள்
ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத்
தாதுசேர் நிகர்மலர் கொய்யும்
ஆயம் எல்லாம் உடன்கண் டன்றே.
கொண்டு கூட்டு: தோழி! பெருங்கடல் புலவு நாறு அகன்துறை, வலவன் தாங்கவும் நில்லாது கழிந்த கல்என் கடுந்தேர் யான் கண்டனனோ, இலனோ? பானாள் ஓங்கல் வெண்மணல் தாழ்ந்த புன்னைத் தாதுசேர் நிகர் மலர் கொய்யும் ஆயம் எல்லாம் உடன்கண்டன்று. யாங்கு அலர் ஒழிவ?
அருஞ்சொற்பொருள்: அகன்துறை = அகன்ற துறை; வலவன் = தேர்ப்பாகன்; தாங்கவும் = தடுக்கவும்; கடுந்தேர் = விரைந்து செல்லும் தேர்; பானாள் = நடு இரவு; ஓங்கல் = உயர்ச்சி; நிகர் = ஒளி; ஆயம் = தோழியர் கூட்டம்.

உரை: தோழி! பெரிய கடலின், புலால் நாற்றம் வீசும் அகன்ற துறையில், தேர்ப்பாகன் குதிரைகளை இழுத்துப் பிடிக்கவும், நில்லாமல் விரைந்து ஓடி, ”கல்என்னும் ஓசையை எழுப்பிய தலைவனது தேரை நான் கண்டேனோ, இல்லையோ? நடு இரவில், உயர்ந்த வெண்மையான மணல் மேட்டில், தாழ்ந்து வளர்ந்த புன்னை மரத்தின், மகரந்தம் சேர்ந்த ஒளியையுடைய மலர்களைப் பறிக்கும்,  மகளிர் கூட்டத்தினர் அனைவரும் அந்தத் தேரை ஒருங்கே கண்டனர். ஆதலால், நம்மைப் பற்றிய பழிச்சொற்கள் எவ்வாறு ஒழியும்?

310. தலைவி கூற்று

310. தலைவி கூற்று 
பாடியவர்: பெருங்கண்ணனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 289 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை முனிந்து கிழத்தி தோழிக்கு உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவியால் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. தோழி, “தலைவன் திருமணத்திற்காகப்  பொருள் தேடத்தான் சென்றிருக்கிறான்.  ஆகவே, இந்தப் பிரிவை நீ பொறுத்துக்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்துகிறாள்.  தோழியின் கூற்றால் கோபமடைந்த தலைவி, ”நான் பொறுத்துகொள்ள வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறுவதை விடுத்து, யாராவது எனக்காகத் தலைவனிடம் சென்று என் நிலையைப் பற்றிக் கூறினால் நான் உயிரோடு இருக்க இயலும்.” என்று தோழியிடம் கூறுகிறாள்.

புள்ளும் புலம்பின பூவுங் கூம்பின
கானலும் புலம்புநனி யுடைத்தே வானமும்
நம்மே போலும் மம்மர்த் தாகி
எல்லை கழியப் புல்லென் றன்றே
இன்னும் உளெனே தோழி இந்நிலை
தண்ணிய கமழு ஞாழல்
தண்ணந் துறைவர்க் குரைக்குநர்ப் பெறினே. 

கொண்டு கூட்டு: தோழி! புள்ளும் புலம்பின; பூவும் கூம்பினகானலும் புலம்பு நனி உடைத்து; வானமும் நம்மே போலும் மம்மர்த்து ஆகி எல்லை கழியப் புல்லென்றன்று. இந்நிலை, தண்ணிய கமழும் ஞாழல் தண்அம் துறைவர்க்கு உரைக்குநர்ப் பெறின் இன்னும் உளென்.

அருஞ்சொற்பொருள்: புள் = பறவை; புலம்பின = ஒலித்தன; நனிமிகுதியாக; மம்மர் =  மயக்கம்; எல்லை = பகல் நேரம்; புல்லென்றன்று = பொலிவிழந்தது; ஞாழல் = ஒருவகை மரம் (புலிநகக் கொன்றை); துறைவன் = நெய்தல் நிலத் தலைவன்.
உரை: தோழி! பறவைகளும் ஒலித்தன;  மலர்களும் குவிந்தன; கடற்கரைச் சோலையும் தனிமை மிகுந்ததாயிற்று. வானமும் நம்மைப் போல் மயக்கத்தை உடையதாகி,  பகல் நேரம் முடிந்ததால் பொலிவிழந்தது.  குளிர்ச்சியுடன் கூடிய மணம் கமழும் மலர்களை உடைய ஞாழல் மரங்கள் வளர்ந்த, குளிர்ந்த அழகிய துறையை உடைய தலைவருக்கு, என்னுடைய இந்த நிலையைப் பற்றி உரைப்பவரைப் பெற்றால், நான் தொடர்ந்து  உயிரோடு இருப்பேன். (இல்லையேல், நான் இறப்பேன்.)

சிறப்புக் குறிப்பு: பூ என்றது ஆம்பல் முதலிய நீர்ப்பூக்களை குறிக்கிறது. நம்மே போலும் மம்மர்த்தாகி என்பதனால் தான் மயக்கமுடையவள் என்பதைத் தலைவி தெரிவிக்கிறாள். தன்னைக் கடிந்துரைப்பவர்கள் மட்டும்தான் உண்டு. தன்னுடைய துயரத்தை உணர்ந்து தனக்காகத் தலைவனிடம் சென்று தன் நிலையை உரைப்பார் யாரும் இல்லையே என்று தலைவி வருந்துகிறாள். இவ்வாறு தலைவி கூறுவது, தோழி தலைவனிடம் சென்று, தன் நிலையைப் பற்றிக் கூற வேண்டும் என்று அவள் விரும்புவதைக் குறிக்கிறது.  

309. தோழி கூற்று

309. தோழி கூற்று

பாடியவர்: உறையூர்ச் சல்லியன் குமாரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று : பரத்தையிற் பிரிந்துவந்த கிழவற்குத் தோழி வாயில் நேர்ந்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தன் மனைவியைவிட்டுப் பிரிந்து சென்று, பரத்தையரோடு  சிலகாலம் இருந்தான். இப்பொழுது, மீண்டும் தன் மனைவியோடு வாழ விரும்புகிறான். தலைவன், மனைவியின் தோழியைச் சந்தித்து, அவளைத் தனக்காகத் தன் மனைவியிடம் பரிந்து பேசி, அவள் ஊடலைத் தணித்துத் தன்னை ஏற்றுக் கொள்ளச் செய்யுமாறு வேண்டுகிறான். தலைவனின் உதவி இல்லாமல் அவன் மனைவியால் தனித்து வாழ முடியாது என்பதைத் தோழி நன்கு உணர்ந்தவளாதலால், அவனுக்காகப் பரிந்து பேச விரும்பாவிட்டாலும், அவன் வேண்டுகோளுக்கு இணங்குகிறாள்.

கைவினை மாக்கடம் செய்வினை முடிமார்
சுரும்புண மலர்ந்த வாசங் கீழ்ப்பட
நீடின வரம்பின் வாடிய விடினும்
கொடியரோ நிலம்பெயர்ந் துறைவே மென்னாது
பெயர்த்துங் கடிந்த செறுவிற் பூக்கும்
நின்னூர் நெய்த லனையேம் பெரும
நீயெமக், கின்னா தனபல செய்யினும்
நின்னின் றமைதல் வல்லா மாறே. 

கொண்டு கூட்டு: பெரும! நீ எமக்கு, இன்னாதன பல செய்யினும்  நின்னின்று அமைதல் வல்லாமாறுகை வினை மாக்கள் தம் செய்வினை முடிமார்சுரும்பு உண மலர்ந்த வாசம் கீழ்ப்படநீடின வரம்பின் வாடிய விடினும், ”கொடியர்; நிலம்பெயர்ந்து உறைவேம்.” என்னாதுபெயர்த்தும் கடிந்த செறுவில் பூக்கும் நின் ஊர் நெய்தல் அனையேம்.

அருஞ்சொற்பொருள்: கைவினைகையால் செய்யும் தொழில் (இங்கு, களையெடுத்தலைக் குறிக்கிறது); சுரும்பு = வண்டு; வாசம் = மணம்; வரம்பு = வரப்பு; கடிந்த = நீக்கிய (களைந்த); செறு = வயல்; பெரும = தலைவ; வல்லாமாறு = வல்லமை இல்லாததால்.

உரை: தலைவ! நீ எங்களுக்குப் பல கொடிய செயல்களைச் செய்தாலும், நீ இல்லாமல் எங்களால் வாழ இயலாதுகளை எடுக்கும் தொழிலைச் செய்யும் உழவர்கள், தாம் செய்யும் தொழிலை முடிப்பதற்காக, வண்டுகள் உண்ணுமாறு, மலர்ந்த நெய்தல் மலர்களின் மணம் தரையிலே படும்படி,  நீண்ட வரப்பிலே அந்த  மலர்கள் வாடும்படி விட்டாலும்,  இவர் கொடியர்; இந்நிலத்தை நீங்கிச் சென்று, நாம் வேறிடத்தில் வாழ்வோம்.” என்று எண்ணாமல்,  மீண்டும் தம்மைக் களைந்த வயலிலேயே,  உன் ஊரில் உள்ள நெய்தல் மலர்கள் மலர்கின்றன. நாங்களும் அந்த மலர்களை போன்றவர்கள்தான்.

சிறப்புக் குறிப்பு: நெய்தற் கிழங்கு வயலில் இருந்ததால், அந்த வயலில் மீண்டும் நெய்தல் மலர் பூத்தது. ”தன்னைப் பிடுங்கி எறிந்த உழவரின் வயலில் நெய்தல் மலர் மீண்டும் பூத்ததைப் போல, நீ எமக்கு இன்னா செய்தாலும், நீ இல்லாமல் எம்மால் வாழ இயலாததால், நாங்கள் உன்னிடம்  தொடர்ந்து அன்புடையவர்களாக இருக்கிறோம்.” என்று தோழி கூறுகிறாள்.

 சங்க கால சமுதாயத்தில், பெண்கள் தனித்தியங்கும்  தன்மை இல்லாமல், ஆண்களை நம்பியே வாழ்ந்தார்கள் என்பது இப்பாடலிலிருந்து நன்கு தெரிகிறது

308. தோழி கூற்று

308. தோழி கூற்று
பாடியவர்: பெருந்தோட் குறுஞ்சாத்தனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கிழத்தியை வன்சொற் சொல்லி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். “நீங்கள் இருவரும் இல்லற வாழ்வில் இன்பமாக இருப்பதற்காகத்தானே தலைவன் பொருள் தேடச் சென்றிருக்கிறான். பொருள் தேடுவதில் வெற்றிபெற்றவுடன் தலைவன் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்து கொள்வான். நீங்கள் இருவரும் கூடி மகிழ்ந்து இன்பமாக இருக்கப் போகிறீர்கள். நீ இவ்வாறு பொறுமை இழந்து வருந்துவது சரியன்று. ” என்று தோழி தலைவியை இடித்துரைக்கிறாள்.

சோலை வாழைச் சுரிநுகும் பினைய
அணங்குடை அருந்தலை நீவலின் மதனழிந்து
மயங்குதுயர் உற்ற மையல் வேழம்
உயங்குயிர் மடப்பிடி யுலைபுறந் தைவர
ஆமிழி சிலம்பின் அரிதுகண் படுக்கும்
மாமலை நாடன் கேண்மை
காமந் தருவதோர் கைதாழ்ந் தன்றே. 

கொண்டு கூட்டு: சோலை வாழைச் சுரி நுகும்பு இனைய அணங்குடை அருந்தலை நீவலின், மதன் அழிந்து மயங்கு துயர் உற்ற மையல் வேழம்உயங்கு உயிர் மடப்பிடி உலைபுறம் தைவர, ஆம்இழி சிலம்பின் அரிதுகண் படுக்கும் மாமலை நாடன் கேண்மைகாமம் தருவதுஓர் கை தாழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: சுரி = சுருண்ட; நுகும்பு =குருத்து; இனைய = வருந்தும்படி; அணங்கு = தெய்வம்; நீவல் = தடவுதல்; மதன் = வலிமை; மையல் = மயக்கம்; வேழம் = யானை (இங்கு ஆண்யானையைக் குறிக்கிறது); உயங்குதல் = வருந்துதல்; உயிர் = மூச்சுக் காற்று; மடப்பிடி = இளம் பெண்யானை; உலைதல் = வருந்துதல்; தைவர = தடவ; ஆம் = அருவி நீர்; சிலம்பு = மலைப் பக்கம்; கேண்மை = நட்பு; காமம் = விருப்பம்; கை = தன் முயற்சி (செயல்); தாழ்ந்தன்று = அதில் ஈடுபட்டது.

உரை:  சோலையில் உள்ள வாழையின் சுருண்ட குருத்து, தெய்வம் உறைவதாகக் கருதப்படும்  யானையின் (ஆண்யானையின்) பெரிய தலையைத் தடவியதால்யானை தன் வலிமையை இழந்து கலக்கமுற்று, துன்பத்தோடு கூடிய மயக்கத்தை அடைந்தது. அந்த யானையின்பால் அன்புள்ள, வருந்தி மூச்சுவிடும் இளம் பெண்யானை, அந்த யானையின்  முதுகைத் தடவிக் கொடுத்தது. அருவியிலிருந்து நீர் வழிகின்ற மலைப்பக்கத்தில், பெண்யானை தடவிக் கொடுக்க, ஆண்யானை அருமையாக தூங்குகிறதுஅத்தகைய மலைநாட்டையுடைய தலைவனது நட்பு, நாம் விரும்புபவற்றைத் தரும் செயலில் ஈடுபட்டுள்ளது.

சிறப்புக் குறிப்பு: யானையின் மத்தகத்தில் தெய்வம் தங்கியிருப்பதாக ஒரு நம்பிக்கை சங்க  காலத்தில் நிலவியதாகத் தெரிகிறது. மற்றும், யானையின் தலையில் வாழைக்குருத்து பட்டால் யானை தன் வலிமையை இழக்கும் என்றும் கருதப்பட்டது.


பெண்யானை தடவிக் கொடுக்க, வலிமை இழந்த ஆண்யானை வருத்தம் தணிந்து அருமையாகத் தூங்குகிறதுஎன்றது அக்காட்சியைக் காணும் தலைவன் தானும்  தலைவியால் தழுவப்பட்டு, இன்பமாக உறங்க வேண்டுமென்று விரும்புவான் என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்

307. தலைவி கூற்று

307. தலைவி கூற்று

பாடியவர்: கடம்பனூர்ச் சாண்டிலியனார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை:  பாலை.
கூற்று : பிரிவிடைக் கடுஞ்சொற் சொல்லிய தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியை விட்டுப் பிரிந்து சென்று சிலமாதங்கள் கழிந்தன. தலைவி வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தைக் கண்ட தோழி, “ நீ இவ்வாறு வருந்தக் கூடாது. உன் தலைவன் எப்பொழுது வரமுடியுமோ அப்பொழுது வருவான். அதுவரை நீ பொறுமையாக இருப்பதுதான் நல்லது.” என்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். தலைவி, “அவர் பிரிந்து சென்று பல மாதங்கள் கழிந்தன. அதோ பார்! மீண்டும் ஒருமுறை மூன்றாம் பிறை வந்துவிட்டது. நான் எத்துணைக் காலம்தான் பொறுமையாக இருக்க முடியும்? அவர் என்னை மறந்துவிட்டார் என்று நினைக்கிறேன்.”” என்று தோழிக்கு மறுமொழி கூறுகிறாள்.

வளையுடைத் தனைய தாகிப் பலர்தொழச்
செவ்வாய் வானத் தையெனத் தோன்றி
இன்னம் பிறந்தன்று பிறையே அன்னோ
மறந்தனர் கொல்லோ தாமே களிறுதன்
உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது
நிலையுயர் யாஅந் தொலையக் குத்தி
வெண்ணார் கொண்டு கைசுவைத் தண்ணாந்
தழுங்க னெஞ்சமொடு முழங்கும்
அத்த நீளிடை அழப்பிரிந் தோரே.

கொண்டு கூட்டு: வளையுடைத்து அனையது ஆகிப் பலர்தொழச் செவ்வாய் வானத்துஎனத் தோன்றிஇன்னம் பிறந்தன்று பிறை! களிறு தன் உயங்குநடை மடப்பிடி வருத்தம் நோனாது  நிலைஉயர் யாஅம் தொலையக் குத்தி, வெள்நார் கொண்டு, கை சுவைத்து, அண்ணாந்து அழுங்கல் நெஞ்சமொடு முழங்கும் அத்த நீளிடை அழப் பிரிந்தோர்,  மறந்தனர் கொல்லோ? அன்னோ!

அருஞ்சொற்பொருள்: வளை = சங்கு வளையல்; செவ்வாய் வானம் = சிவந்த மாலைநேரத்து வானம்; ஐ என = விரைவாக; பிறை = வளர்மதியின் மூன்றாம் பிறை; அன்னோ = ஐயோ; தாம்அசைநிலை; உயங்கு நடை = சோர்வுற்ற நடை; மடப்பிடி = இளம் பெண்யானை; நோனாது = தாங்காது; யாஅம் = யா மரம்; வெண்ணார் = வெண்மையான நார் (நீர்ப்பசை இல்லாத உலர்ந்த பட்டை); அழுங்கல் = வருத்தம்; அத்தம் = பாலை நிலம்; நீளிடை = நீண்ட வழி.

உரை: சங்கு வளையல் உடைந்ததைப் போன்ற தோற்றத்தோடு, பலரும் தொழ, சிவந்த வானத்தில், மாலைநேரத்தில், மூன்றாம் பிறை விரைந்து பிறந்து தோன்றியது. ஆண்யானை,  வருந்திய நடையையுடைய தனது துணையாகிய இளம் பெண்யானைக்கு நீர் வேட்கையினால் தோன்றிய வருத்தத்தைத் தாங்க முடியாமல்,  உயர்ந்து நிற்கும்  யாமரத்தை அழியும்படிக் கொம்பாற் குத்தி,  பசையற்ற வெண்ணிறமான பட்டையை உரித்தெடுத்தது. அப்பட்டையில் ஈரமில்லாததால், தன் வெறுங்கையையே சுவைத்தது. பெண்யானையின் நீர்வேட்கையைத் தீர்க்க முடியாததால், வருந்தும் நெஞ்சோடு, ஆண்யானை தன் கையை (துதிக்கையை) மேல் நோக்கி உயர்த்திப் பிளிறியது. அத்தகைய பாலை நிலத்தில், நீண்ட வழியில் செல்லும்போது, நாம் அழும்படி நம்மைப்பிரிந்து சென்ற தலைவர், நம்மை மறந்தனரோ? ஐயோ!
சிறப்புக் குறிப்பு: இங்கு பிறை என்றது வளர்மதியின் மூன்றாம் பிறையைக் குறிக்கிறது. சங்க காலத்தில் மூன்றாம் பிறையை வைத்து மாதங்களைக் கணக்கிடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. “இன்னம் பிறந்தன்று பிறையேஎன்றது மீண்டும் ஒரு மாதம் கழிந்ததை நினைத்துத் தலைவி வருந்துவதைக் குறிக்கிறது

பாலைநிலத்தில் நீர் கிடைப்பது அரிது. அங்குள்ள யானைகள் யாமரத்தின் பட்டையைப் பிளந்து, அதிலிருந்து வரும் நீரைக் குடித்துத் தம் நீர் வேட்கையைத் தீர்த்துக் கொள்வது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது.

தலைவர் சென்ற இடத்தில், ஆண்யானை தன் துணையாகிய பெண்யானையின் நீர் வேட்கையைத் தீர்க்க முயல்வதைக் கண்ட பிறகாவது, தலைவருக்குத் தன் நினைவு வராதா என்று தலைவி எண்ணுகிறள். இது இப்பாடலில் உள்ள இறைச்சிப் பொருளாகும்.


குறுந்தொகையில் உள்ள பாடல்கள் நான்கு அடி முதல் எட்டு அடிகளைக் கொண்டவை. இந்தப் பாடலும் 391 – ஆம் பாடலும் ஒன்பது அடிகளைக் கொண்டவை என்பது குறிப்பிடத் தக்கது

Monday, February 6, 2017

306. தலைவி கூற்று

306. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 - இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : காப்பு மிகுதியால் நெஞ்சு மிக்கதுவாய் சோர்ந்து கிழத்தி உரைத்தது. (நெஞ்சில் வருத்தம் மிகுதியானதால், தன் முயற்சியின்றியே வாய்ப்பேச்சில் தன் உணர்ச்சியை வெளிப்படுத்துவது.)
கூற்று விளக்கம்: தலைவி யாரையோ காதலிக்கிறாள் என்பதை அறிந்த அவளுடைய பெற்றோர், அவளைக் காவலில் வைத்தார்கள். தலைவன் திருமணத்திற்கான ஏற்பாடுகளை விரைவாகச் செய்யாததால், தலைவி தலைவன் மீது கோபமாக இருக்கிறாள். காவலில் வைக்கப்பட்டிருப்பதால், தலைவனைக் காணும் வாய்ப்பு தலைவிக்கு அரிதாக உள்ளது.  இருந்தாலும் எப்பொழுதாவது அவனைக் காணும் வாய்ப்புக் கிடைக்கிறது. இனி, தலைவனைக் கண்டால், அவனிடம் அன்பான இனிய சொற்களைப் பேசக்கூடாது என்று தலைவி மனவுறுதியுடன் இருக்கிறாள். ஆனால், அவனைக் கண்டவுடன், அவளையும் அறியாமல் அவனிடம் அன்பாகப் பேசுகிறாள். ஒருநாள், தலைவனைச் சந்தித்த பிறகு, “நான் இனி தலைவனிடம் அன்பாகப் பேசக் கூடாது என்று சொல்லியிருந்தாலும், நீ என் சொல்லை மறந்துவிட்டாயோ?” என்று தன் நெஞ்சைக் கடிந்துகொள்கிறாள்.

மெல்லிய இனிய மேவரு தகுந
இவைமொழி யாமெனச் சொல்லினு மவைநீ
மறத்தியோ வாழியென் னெஞ்சே பலவுடன்
காமர் மாஅத்துத் தாதமர் பூவின்
வண்டுவீழ் பயருங் கானல்
தண்கடற் சேர்ப்பனைக் கண்ட பின்னே. 


கொண்டு கூட்டு: என் நெஞ்சே! வாழி! மெல்லிய, இனிய மேவரு தகுந இவை மொழியாம் எனச் சொல்லினும், காமர் மாஅத்துத் தாது அமர் பூவின்  வண்டு பலவுடன் வீழ்பு அயரும் கானல் தண்கடல் சேர்ப்பனைக் கண்டபின் நீ அவை மறத்தியோ?

அருஞ்சொற்பொருள்: மேவருதல் = விரும்புதல்; மேவரு தகுந = விரும்பத் தக்கன; மொழியாம் = மொழியேம்; மறத்தியோ = மறத்துவிட்டாயோ; வாழிஅசைநிலை; காமர் = அழகு; மாஅத்து = மாமரத்தில்; அமர்தல் = பொருந்துதல்; அயர்தல் = செய்தல்; கானல் = கடற்கரைச் சோலை; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்.  

உரை: என் நெஞ்சே! பிரிந்த தலைவர் வந்தவுடன் மென்மையான, இனிய, விரும்பத் தகுந்த சொற்களைக் கூறாதே என்று உனக்கு நான் சொல்லியிருந்தாலும்,  அழகிய மாமரத்தின், தாதுகள் பொருந்திய மலர்களில், வண்டுகள் பல ஒருங்கே வந்து விழும் சோலையையுடைய,  குளிர்ந்த நெய்தல் நிலத்தலைவனைக் கண்டவுடன், நான் கூறியவற்றை நீ மறந்துவிட்டாயோ?
சிறப்புக் குறிப்பு: ஒருபெண் தன்னுடைய காதலனைப் பிரிந்திருக்கும் பொழுது, அவன்மீது கோபமாக இருந்தாலும், அவனைக் கண்டவுடன் தன் கோபத்தை மறந்து அவனிடம் அன்பாகப் பேசிக் கூடி மகிழ விரும்புவது இயல்பு என்ற கருத்து திருக்குறளிலும்  கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம் 
 கலத்தல் உறுவது கண்டு”                                                               (குறள், 1259.)
பொருள்: ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னைவிட்டு அவரோடு கூடுவதைக் கண்டு அவரைத் தழுவினேன்.

            நிணம்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
            புணர்ந்து ஊடி நிற்போம் எனல்.                                                    (குறள் – 1260)

பொருள்: கொழுப்பைத் தீயில் இட்டாற் போல் உருகும் நெஞ்சினையுடைய என்னைப் போன்றவர்க்கு, என் காதலர் அருகில் வந்து கூடுங்கால், ஊடி எதிர்த்து நிற்போம் எனக் கருதுதல் இயலுமோ?

305. தலைவி கூற்று

305. தலைவி கூற்று

பாடியவர்: குப்பைக் கோழியார். இப்பாடலில் இவர் குப்பைக் கோழியைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பதால், இவர் இப்பெயர் பெற்றார். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: மருதம்.
கூற்று : காப்பு மிகுதிக்கண், தோழி அறத்தொடு நிற்பாளாக, தனது ஆற்றாமை தோன்றத் தலைமகள் தன்னுள்ளே கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். ஒருநாள், தலைவி, வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். அதனால் தலைவனும் தலைவியும்  ஒருவரை ஒருவர் சந்திக்க முடியவில்லை. தலைவி மிகுந்த வருத்தத்தோடு இருக்கிறாள். ”என் காம நோயைத் தீர்ப்பதற்கு எனக்கு உதவி செய்பவர்கள் எவரும் இல்லையே.” என்று தனக்குள் சொல்லிக்கொள்வதின் மூலம், தோழி அறத்தொடு நிற்பாள் என்று எதிர்பார்க்கிறாள்.

கண்தர வந்த காம ஒள்ளெரி
என்புற நலியினும் அவரொடு பேணிச்
சென்றுநாம் முயங்கற் கருங்காட் சியமே
வந்தஞர் களைதலை அவராற் றலரே
உய்த்தனர் விடாஅர் பிரித்திடை களையார்
குப்பைக் கோழித் தனிப்போர் போல
விளிவாங்கு விளியி னல்லது
களைவோர் இலையா னுற்ற நோயே.

கொண்டு கூட்டு: கண்தர வந்த காம ஒள் எரிஎன்பு உற நலியினும், அவரொடு பேணிச்
சென்று நாம் முயங்கற்கு அருங் காட்சியம்அவர் வந்து அஞர் களைதலை ஆற்றலர். குப்பைக் கோழித் தனிப்போர் உய்த்தனர் விடாஅர்; பிரித்து இடை களையார்; அது போலவிளிவாங்கு விளியின் அல்லதுயான் உற்ற நோய் களைவோர் இலை.

அருஞ்சொற்பொருள்: எரி = நெருப்பு; என்பு = எலும்பு; நலிதல் = வருந்துதல்; பேணி = விரும்பி; முயங்குதல் = தழுவுதல்; அஞர் = துன்பம்; உய்த்தல் = அனுப்புதல்; உய்த்தனர் விடாஅர் = இழுத்து விட மாட்டர்கள்; விளிதல் = அழிதல்.

உரை: தலைவரைக் கண்கள் கண்டதால் உண்டாகிய காமமாகிய ஒளிரும் நெருப்பு (காம நோய்), என் எலும்பை வருத்தினாலும்,  தலைவரை விரும்பிச் சென்று, அவரைத் தழுவ எண்ணினால், நாமாகச் சென்று அவரைக் காண இயலாத நிலையில் இருக்கிறோம். நாமிருக்கும் இடத்திற்கு வந்து நம்முடைய துன்பத்தை நீக்க அவரால் முடியவில்லை. குப்பைக் கோழிகள் தாமாகவே தனிமையில் போரிடும் பொழுது அவற்றை இழுத்து, இடையிலே புகுந்து இரண்டு கோழிகளையும் பிரித்துச் சண்டையை யாரும் நிறுத்த மாட்டர்கள். அக்கோழிகள் சண்டையிட்டு அழியும். அக்கோழிகள் அழிவது போல, தானே அழிந்தாலன்றி, என்னுடைய காமநோயைக் களைவார் யாரும் இல்லை.

சிறப்புக் குறிப்பு: தலைவனைக் கண்டவுடன் அவன்மீது காதல் கொண்டதால், ”கண்தர வந்த காமவொள்ளெரிஎன்றாள். வெளியில் தெரியாமல் மனத்தை வருத்துவதால்என்புற நலியினும்என்றாள்.  தலைவனை எளிதிற் காண முடியாமல் காவலில் வைக்கப்பட்டதால், “அருங்காட்சியம்என்றாள்.

போரிடுவதற்காகக் கோழிகளை வளர்ப்பவர்கள், தங்கள் கோழிகளைச் சண்டையிடச் செய்து, தக்க சமயத்தில் அவற்றை விலக்கிச் சண்டையை நிறுத்துவர். கோழிகள் தாமாகவே சண்டையிட்டால், விலக்குபவர் யாரும் இல்லாமல் அவை புண்பட்டு அழியும். “தனிமையில் சண்டையிட்டு மடியும் கோழிகள் போல, நானும் இறக்கும் வரை இந்த காமநோயால் வருந்தப் போகிறேன். என்னுடைய இந்தக் காமநோயிலிருந்து என்னைக் காப்பற்றுபவர்கள் யாரும் இல்லை.” என்று தன் நிலையை நினைத்து வருந்தி, தனக்குத்தானே கூறிக்கொள்கிறாள். அவ்வாறு கூறினால், அதைக் கேட்ட தோழி, தன் காதலைத் தக்க சமயத்தில் தன் பெற்றோருக்குத் தெரிவிப்பாள் என்றும், அவள் செயலால் திருமணம் விரைவில் நடைபெறும் என்றும் தலைவி எண்ணுகிறாள்

304. தலைவி கூற்று

304. தலைவி கூற்று
பாடியவர்: கணக்காயன் தத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவியால் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “அன்று தலைவனோடு இனிமையான நட்பைச் செய்தோம். அந்த நட்பு இன்று நமக்குத் துன்பத்தைத் தரும் பகையாக மாறியது.” என்று கூறுகிறாள்.

கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே. 

கொண்டு கூட்டு: கொல்வினைப் பொலிந்த, கூர்வாய் எறிஉளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்தாங்கு அரு நீர்ச்சுரத்து எறிந்து, வாங்குவிசைக் கொடுந்திமில் பரதவர், கோட்டுமீன் எறியநெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து வெண்தோடு இரியும் வீ ததை கானல்கைதைஅம் தண்புனல் சேர்ப்பனொடு ஓர் பகைதரு நட்புச் செய்தனம் மன்ற!

அருஞ்சொற்பொருள்: கொல்வினை = கொல்லும் தொழிற்திறன்; பொலிதல் = சிறத்தல்; எறிஉளி = வீசி எறிகின்ற உளி; முகம் = முனை; மடுத்தல் = சேர்த்தல்; முளிதல் = உலர்தல்; வெதிர் = மூங்கில்; நோன் காழ் = வலிய காம்பு (தடி); நீர்ச்சுரம் = நீரிலுள்ள வழி (படகு செலுத்தும் வழி); வாங்குதல் = கைக்கொள்ளுதல்; விசை = வேகம்; கொடு = வளைவு; திமில் = ஒருவகைப் படகு; பரதவர் = மீனவர்; கோடு = கொம்பு; கோட்டு மீன் = சுறா மீன்; தோடு = தொகுதி, கூட்டம்; இரிதல் = ஓடுதல்; வீ = பூ; ததைதல் = நெருங்கல்; கைதை = தாழை; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்; மன்ற = நிச்சயமாக; பகைதரு நட்பு = பகையைத் தரும் நட்பு (காதலித்ததால் உண்டாகிய துன்பத்தைத் தரும் நட்பு)
உரை:  கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய வாயைடைய எறியுளியை, உலர்ந்த வலிய மூங்கிலின் காம்பின் முனையில் பொருத்தி, தாங்குதற்கரிய நீரிலுள்ள வழியில் எறிந்து, பின்னர் இழுத்துக் கைக்கொள்ளும், வேகமாகச் செல்லும் வளைந்த மீன்பிடிக்கும் படகையுடைய மீனவர், கொம்பையுடைய சுறாமீன் மீது  எறிந்து அவற்றைப் பிடிக்க முயல்வர். அந்த ஒலியைக் கேட்டு, நெடிய கரையில்  இருந்த, குறுகிய கால்களையுடைய வெண்மையான அன்னப்பறவைகளின் கூட்டம் அஞ்சி ஓடும். அத்தகைய, மலர்கள் நிறைந்த சோலையையும், தாழையையும், அழகிய குளிர்ந்த நீரையுமுடைய, நெய்தல் நிலத்  தலைவனோடு,  நாம் நிச்சயமாக, ஒரு பகையைத் தருகின்ற  நட்பைச் செய்தோம்.
சிறப்புக் குறிப்பு: மீனவர்கள் படகில் இருந்தபடியே, ஒரு மூங்கிலின் நுனியில் கட்டப்பட்ட கூர்மையான எறிஉளி என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து சுறாமீனைக் கொல்வர். அந்த மூங்கிலின் மறுநுனியில் கட்டிய கயிற்றால் அந்த மூங்கிலை இழுத்துத் தாம் கொன்ற மீனைக் கைக்கொள்வர்.

தலைவனின் பிரிவால் தலைவி, பசலையுற்று, தன் அழகை இழந்து, தோள் மெலிந்து, வளையல்கள் நெகிழ்ந்து வருந்துவதால், அவனோடு அவள் கொண்ட நட்பைப்பகைதரு நட்புஎன்றாள்.

303. தோழி கூற்று

303. தோழி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவியும் தலைவனும் களவொழுக்கத்தில்  தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். சில நாட்களாகத் தலைவனைக் காணாததால், தலைவி வருத்தம் அடைந்தாள். இன்று, தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அவனைக் கண்ட தோழி, “சில நாட்களாக உன்னைக் காணாததால், தலைவி மிகவும் வருந்தினாள்; அவள் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட  தாய் அவளைக் காவலில் வைத்தாள். ஆகவே, இனி நீ அவளைச் சந்திக்க முடியாது. அவளை விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவதே சிறந்தது.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும்
மின்னிணர்ப் புன்னையம் புகர்நிழற்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே. 

கொண்டு கூட்டு: கழி தேர்ந்து அசைஇய, கருங்கால் வெண்குருகு, அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் உடைதிரை ஒலியில் துஞ்சும் துறைவ!  என்னொடும் மின்இணர்ப் புன்னை அம் புகர் நிழல் பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றேஎன் தோழி
தொல்நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்கு பசந்தனள் மன்.

அருஞ்சொற்பொருள்: கழி = உப்பங்கழி; அசைஇய = தங்கிய; குருகு = நாரை; அடைகரை = மணல் செறிந்த கரை; குழீஇ = குழுமி; துஞ்சும் = ஆழ்ந்து உறங்கும்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; ஈங்கு = இப்பொழுது; பசந்தனள் = பசலையுற்றனள்; மன்  - இங்கு ,மிகுதிப் பொருளில் வந்த இடைச்சொல்; இணர் = பூங்கொத்து; புகர் = புள்ளி; அலவன் = நண்டு; ஞான்று = பொழுது;

உரை: மீன்களை உண்ணும் பொருட்டுக் கழியின் நீரை ஆராய்ந்து,  அங்குள்ள மீன்களை  உண்டு, அங்கே தங்கிய, கரிய காலையுடைய வெண்மையான நாரைகள், கரையிலுள்ள தாழையினிடத்துக் கூடி, பெரிய கடற்கரையை மோதி உடைக்கின்ற அலையின் ஓசையில் உறங்கும். அத்தகைய கடற்கரைத்  தலைவ! மின்னுகின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தின், அழகிய புள்ளிகளையுடைய நிழலில், பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை அலைத்து,  என்னோடு தலைவி விளையாடிக்கொண்டிருந்த  போழுதே, அவள்,  தன் பழையநிலை மாறி, நெகிழ்ந்த வளையல்களை உடையவளானாள். அவள் இப்பொழுது மிகுந்த பசலையை உடைய மேனியளானாள்.
சிறப்புக் குறிப்பு: சிறுமிகள் கடற்கரையில் உள்ள நண்டுகளை விரட்டி விளையாடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. தலைவி தன் தோழிகளோடு நண்டுகளை விரட்டி விளையாடிக்கொண்டிருந்த பொழுது, தலைவன் தலைவியைக் கடைசியாகச் சந்தித்தான். அன்று, தலைவன் தலைவியைச் சந்தித்த பிறகு, அவள் கைவளயல்கள் நெகிழ்ந்தன; உடலில் பசலை படரத் தொடங்கியது. உடலில் தோன்றிய மாற்றங்களால், தலைவி வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். அதனால் அவளைக் காண்பது தலைவனுக்கு அரிதாயிற்று. இனி அவளைக் காண வேண்டுமானால். தலைவன் அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தோழியின் கருத்து.


குருகு கழியை ஆராய்ந்து, வயிறு நிரம்ப உண்டு பின் தாழை மடலில் உறங்குகின்றது.” என்றது, “இதுவரை நீ களவொழுக்கத்தில் உன் உள்ளம் நிறைவு உண்டாகுமாறு தலைவியோடு அளாவளாவி மகிழ்ந்தாய். இனி, நீ அவளைத் திருமணம் செய்துகொண்டு உன் இல்லத்தில்  இல்லறம் நடத்துவாயாக.” என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது