Monday, February 6, 2017

303. தோழி கூற்று

303. தோழி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : செறிப்பறிவுறீஇ வரைவு கடாயது.
கூற்று விளக்கம்: தலைவியும் தலைவனும் களவொழுக்கத்தில்  தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். சில நாட்களாகத் தலைவனைக் காணாததால், தலைவி வருத்தம் அடைந்தாள். இன்று, தலைவியைக் காணத் தலைவன் வருகிறான். அவனைக் கண்ட தோழி, “சில நாட்களாக உன்னைக் காணாததால், தலைவி மிகவும் வருந்தினாள்; அவள் உடலில் தோன்றிய மாற்றங்களைக் கண்ட  தாய் அவளைக் காவலில் வைத்தாள். ஆகவே, இனி நீ அவளைச் சந்திக்க முடியாது. அவளை விரைவில் திருமணம் செய்துகொண்டு இல்லறம் நடத்துவதே சிறந்தது.” என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

கழிதேர்ந் தசைஇய கருங்கால் வெண்குரு
கடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல்
உடைதிரை ஒலியில் துஞ்சுந் துறைவ
தொன்னிலை நெகிழ்ந்த வளைய ளீங்குப்
பசந்தனள் மன்னென் தோழி யென்னொடும்
மின்னிணர்ப் புன்னையம் புகர்நிழற்
பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றே. 

கொண்டு கூட்டு: கழி தேர்ந்து அசைஇய, கருங்கால் வெண்குருகு, அடைகரைத் தாழைக் குழீஇப் பெருங்கடல் உடைதிரை ஒலியில் துஞ்சும் துறைவ!  என்னொடும் மின்இணர்ப் புன்னை அம் புகர் நிழல் பொன்வரி அலவன் ஆட்டிய ஞான்றேஎன் தோழி
தொல்நிலை நெகிழ்ந்த வளையள், ஈங்கு பசந்தனள் மன்.

அருஞ்சொற்பொருள்: கழி = உப்பங்கழி; அசைஇய = தங்கிய; குருகு = நாரை; அடைகரை = மணல் செறிந்த கரை; குழீஇ = குழுமி; துஞ்சும் = ஆழ்ந்து உறங்கும்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; ஈங்கு = இப்பொழுது; பசந்தனள் = பசலையுற்றனள்; மன்  - இங்கு ,மிகுதிப் பொருளில் வந்த இடைச்சொல்; இணர் = பூங்கொத்து; புகர் = புள்ளி; அலவன் = நண்டு; ஞான்று = பொழுது;

உரை: மீன்களை உண்ணும் பொருட்டுக் கழியின் நீரை ஆராய்ந்து,  அங்குள்ள மீன்களை  உண்டு, அங்கே தங்கிய, கரிய காலையுடைய வெண்மையான நாரைகள், கரையிலுள்ள தாழையினிடத்துக் கூடி, பெரிய கடற்கரையை மோதி உடைக்கின்ற அலையின் ஓசையில் உறங்கும். அத்தகைய கடற்கரைத்  தலைவ! மின்னுகின்ற பூங்கொத்துக்களையுடைய புன்னை மரத்தின், அழகிய புள்ளிகளையுடைய நிழலில், பொன் போன்ற கோடுகளையுடைய நண்டுகளை அலைத்து,  என்னோடு தலைவி விளையாடிக்கொண்டிருந்த  போழுதே, அவள்,  தன் பழையநிலை மாறி, நெகிழ்ந்த வளையல்களை உடையவளானாள். அவள் இப்பொழுது மிகுந்த பசலையை உடைய மேனியளானாள்.
சிறப்புக் குறிப்பு: சிறுமிகள் கடற்கரையில் உள்ள நண்டுகளை விரட்டி விளையாடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. தலைவி தன் தோழிகளோடு நண்டுகளை விரட்டி விளையாடிக்கொண்டிருந்த பொழுது, தலைவன் தலைவியைக் கடைசியாகச் சந்தித்தான். அன்று, தலைவன் தலைவியைச் சந்தித்த பிறகு, அவள் கைவளயல்கள் நெகிழ்ந்தன; உடலில் பசலை படரத் தொடங்கியது. உடலில் தோன்றிய மாற்றங்களால், தலைவி வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். அதனால் அவளைக் காண்பது தலைவனுக்கு அரிதாயிற்று. இனி அவளைக் காண வேண்டுமானால். தலைவன் அவளை விரைவில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்பது தோழியின் கருத்து.


குருகு கழியை ஆராய்ந்து, வயிறு நிரம்ப உண்டு பின் தாழை மடலில் உறங்குகின்றது.” என்றது, “இதுவரை நீ களவொழுக்கத்தில் உன் உள்ளம் நிறைவு உண்டாகுமாறு தலைவியோடு அளாவளாவி மகிழ்ந்தாய். இனி, நீ அவளைத் திருமணம் செய்துகொண்டு உன் இல்லத்தில்  இல்லறம் நடத்துவாயாக.” என்று தோழி கூறுவதைக் குறிக்கிறது

No comments:

Post a Comment