Monday, February 6, 2017

304. தலைவி கூற்று

304. தலைவி கூற்று
பாடியவர்: கணக்காயன் தத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவியால் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்று கவலைப்பட்ட தோழியை நோக்கித் தலைவி, “அன்று தலைவனோடு இனிமையான நட்பைச் செய்தோம். அந்த நட்பு இன்று நமக்குத் துன்பத்தைத் தரும் பகையாக மாறியது.” என்று கூறுகிறாள்.

கொல்வினைப் பொலிந்த கூர்வா யெறியுளி
முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்
தாங்கரு நீர்ச்சுரத் தெறிந்து வாங்குவிசைக்
கொடுந்திமிற் பரதவர் கோட்டுமீ னெறிய
நெடுங்கரை யிருந்த குறுங்கா லன்னத்து
வெண்டோ டிரியும் வீததை கானற்
கைதையந் தண்புனற் சேர்ப்பனொடு
செய்தனெ மன்றவோர் பகைதரு நட்பே. 

கொண்டு கூட்டு: கொல்வினைப் பொலிந்த, கூர்வாய் எறிஉளி முகம்பட மடுத்த முளிவெதிர் நோன்காழ்தாங்கு அரு நீர்ச்சுரத்து எறிந்து, வாங்குவிசைக் கொடுந்திமில் பரதவர், கோட்டுமீன் எறியநெடுங்கரை இருந்த குறுங்கால் அன்னத்து வெண்தோடு இரியும் வீ ததை கானல்கைதைஅம் தண்புனல் சேர்ப்பனொடு ஓர் பகைதரு நட்புச் செய்தனம் மன்ற!

அருஞ்சொற்பொருள்: கொல்வினை = கொல்லும் தொழிற்திறன்; பொலிதல் = சிறத்தல்; எறிஉளி = வீசி எறிகின்ற உளி; முகம் = முனை; மடுத்தல் = சேர்த்தல்; முளிதல் = உலர்தல்; வெதிர் = மூங்கில்; நோன் காழ் = வலிய காம்பு (தடி); நீர்ச்சுரம் = நீரிலுள்ள வழி (படகு செலுத்தும் வழி); வாங்குதல் = கைக்கொள்ளுதல்; விசை = வேகம்; கொடு = வளைவு; திமில் = ஒருவகைப் படகு; பரதவர் = மீனவர்; கோடு = கொம்பு; கோட்டு மீன் = சுறா மீன்; தோடு = தொகுதி, கூட்டம்; இரிதல் = ஓடுதல்; வீ = பூ; ததைதல் = நெருங்கல்; கைதை = தாழை; சேர்ப்பன் = நெய்தல் நிலத்தலைவன்; மன்ற = நிச்சயமாக; பகைதரு நட்பு = பகையைத் தரும் நட்பு (காதலித்ததால் உண்டாகிய துன்பத்தைத் தரும் நட்பு)
உரை:  கொல்லும் தொழிலில் சிறந்த, கூரிய வாயைடைய எறியுளியை, உலர்ந்த வலிய மூங்கிலின் காம்பின் முனையில் பொருத்தி, தாங்குதற்கரிய நீரிலுள்ள வழியில் எறிந்து, பின்னர் இழுத்துக் கைக்கொள்ளும், வேகமாகச் செல்லும் வளைந்த மீன்பிடிக்கும் படகையுடைய மீனவர், கொம்பையுடைய சுறாமீன் மீது  எறிந்து அவற்றைப் பிடிக்க முயல்வர். அந்த ஒலியைக் கேட்டு, நெடிய கரையில்  இருந்த, குறுகிய கால்களையுடைய வெண்மையான அன்னப்பறவைகளின் கூட்டம் அஞ்சி ஓடும். அத்தகைய, மலர்கள் நிறைந்த சோலையையும், தாழையையும், அழகிய குளிர்ந்த நீரையுமுடைய, நெய்தல் நிலத்  தலைவனோடு,  நாம் நிச்சயமாக, ஒரு பகையைத் தருகின்ற  நட்பைச் செய்தோம்.
சிறப்புக் குறிப்பு: மீனவர்கள் படகில் இருந்தபடியே, ஒரு மூங்கிலின் நுனியில் கட்டப்பட்ட கூர்மையான எறிஉளி என்னும் ஆயுதத்தை வீசி எறிந்து சுறாமீனைக் கொல்வர். அந்த மூங்கிலின் மறுநுனியில் கட்டிய கயிற்றால் அந்த மூங்கிலை இழுத்துத் தாம் கொன்ற மீனைக் கைக்கொள்வர்.

தலைவனின் பிரிவால் தலைவி, பசலையுற்று, தன் அழகை இழந்து, தோள் மெலிந்து, வளையல்கள் நெகிழ்ந்து வருந்துவதால், அவனோடு அவள் கொண்ட நட்பைப்பகைதரு நட்புஎன்றாள்.

No comments:

Post a Comment