Monday, February 6, 2017

302. தலைவி கூற்று

302. தலைவி கூற்று

பாடியவர்: மாங்குடி கிழார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 164 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடைக் கவன்ற (கவலைப்பட்ட) தோழிக்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைப் பிரிந்து சென்றிருக்கிறான். இந்தப் பிரிவைத் தலைவி எப்படிப் பொறுத்துக்கொள்ளப் போகிறாளோ என்று தோழி கவலைப் படுகிறாள். அதைக் கண்ட தலைவி, “தலைவனின் பிரிவினால் உண்டாகிய துயரத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இறந்து போகலாம் என்றால், அதற்கும் அச்சமாக இருக்கிறது. ஊரார் எங்கள் இருவரையும் பற்றிப் பழிச்சொற்கள் பேசுவதால், தலைவன் என்னை நேரில் காண வருவதற்கு அஞ்சுகிறான் என்று நினைக்கிறேன். அவன் என் நினைவிலே மட்டும் வருகிறான்.” என்று தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

உரைத்திசின் தோழியது புரைத்தோ அன்றே
அருந்துயர் உழத்தலும் ஆற்றாம் அதன்றலைப்
பெரும்பிறி தாகல் அதனினும் அஞ்சுதும்
அன்னோ இன்னும் நன்மலை நாடன்
பிரியா நண்பினர் இருவரும் என்னும்
அலரதற் கஞ்சினன் கொல்லோ பலருடன்
துஞ்சூர் யாமத் தானுமென்
நெஞ்சத் தல்லது வரவறி யானே. 

கொண்டு கூட்டு: தோழி ! அருந்துயர் உழத்தலும் ஆற்றாம்; அதன்தலைப்  பெரும்பிறிது ஆகல் அதனினும் அஞ்சுதும்.  அன்னோ! இன்னும் நன்மலை நாடன், இருவரும் பிரியா நண்பினர் என்னும் அலரதற்கு அஞ்சினன் கொல்லோ? பலருடன் துஞ்சு ஊர் யாமத்தானும் என் நெஞ்சத்து அல்லது வரவறியானே. அது புரைத்தோ? உரைத்திசின்!

அருஞ்சொற்பொருள்: உரைத்திசின் = உரைப்பாயாக; புரை = உயர்வு; அன்று அசைச்சொல்; உழத்தல் = வருந்துதல்; அதன்தலை = அதற்கும் மேல்; பெரும்பிறிது = இறப்பு; அன்னோ = ஐயோ; துஞ்சும் = ஆழ்ந்து உறங்கும்; யாமம் = நள்ளிரவு.

உரை: தோழி! தலைவனின் பிரிவால் உண்டாகிய, பொறுத்தற்கரிய துயரத்தால் நாம் வருந்துதவதற்குரிய  ஆற்றல் இல்லாதவரானோம்; அதற்கும் மேல், இறப்பதை நினைத்தால்  அதைவிட அதிகமாக  அஞ்சுகின்றோம்; ஐயோ! மேலும், நல்ல மலைநாட்டை உடைய தலைவன், ”நாங்கள் இருவரும் என்றும் பிரியாத நட்பையுடையவர்கள் என்று பிறர் கூறும்,  பழிச்சொற்களுக்கு அஞ்சினனோ? ஊரிலுள்ளோர் பலரும் ஒருங்கே நன்கு ஆழ்ந்து உறங்குகின்ற நள்ளிரவிலும், அவன்  என் நினைவிலே வருகின்றானே தவிர, நேரிலே வருவதில்லை. அவன் அவ்வாறு இருப்பது உயர்வுடையதாகுமோ? நீயே கூறுவாயாக!
சிறப்புக் குறிப்பு: ஊரார் கூறும் பழிச்சொற்கள்தான் தங்கள் காதலை வளர்த்துத் தங்கள் உயிரைக் காப்பதற்கு வழி செய்கிறது என்ற உண்மையைத்  தலைவி அறிந்துள்ளாள். ஆனால், தலைவன் ஊரார் கூறும் பழிச் சொற்களுக்கு அஞ்சுகிறான் என்று தலைவி எண்ணுகிறாள்.
ஊராரின் பழிச்சொற்களுக்காகப் பெண்கள் வருந்தினாலும், அவர்கள் அந்தப் பழிச்சொற்களால் தங்கள் களவொழுக்கம் வெளிப்பட்டு, தங்கள் காதல் திருமணத்தில்  நிறைவு பெறும் என்பதில் உறுதியான நம்பிக்கை உடையவர்களாக இருந்தார்கள் என்ற கருத்து திருக்குறளிலும் காணப்படுகிறது.

ஊரவர் கௌவை எருவாக அன்னைசொல்
நீராக நூளுகிந் நோய்.                                                                     (குறள் – 1147)


பொருள்: இக் காமநோயாகிய பயிர், ஊரார் கூறும் பழிச்சொற்களை உரமாகவும், அன்னை கூறும் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு  வளர்கின்றது.

No comments:

Post a Comment