Sunday, February 19, 2017

312. தலைவன் கூற்று

312. தலைவன் கூற்று

பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 13 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி வந்து நீங்குகின்ற தலைமகன், தன்னெஞ்சிற்கு வரைவுடைமை வேட்பக் (திருமணத்தில் விருப்பம் தோன்றக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் இரவில் சந்தித்தார்கள். அதன் பின்னர் தலைவன் தன் இல்லத்திற்குச் செல்கிறான். தலைவி தன்னோடு இருக்கும் பொழுது மனம் ஒன்றி, அன்புடையவளாகப் பழகுவதையும், அவள் தன் சுற்றத்தாரோடு இருக்கும்பொழுது தன் களவொழுக்கத்தை மறைத்து அவர்கள் விருப்பத்திற்கேற்ப நடப்பதையும் நினைத்து, வியந்து, அவளை விரைவில் மணந்துகொள்ள வேண்டும் என்று தனக்குத் தானே கூறிக்கொள்கிறான்.

இரண்டறி கள்விநங் காத லோளே
முரண்கொள் துப்பிற் செவ்வேல் மலையன்
முள்ளூர்க் கான நாற வந்து
நள்ளென் கங்குல் நம்மோ ரன்னள்
கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துச்
சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி
அமரா முகத்த ளாகித்
தமரோ ரன்னள் வைகறை யானே. 


கொண்டு கூட்டு: நம் காதலோள் இரண்டு அறி கள்வி!  முரண்கொள் துப்பின் செவ்வேல் மலையன் முள்ளூர்க் கானம் நாற வந்து, நள்ளென் கங்குல் நம் ஓரன்னள்; வைகறையான்கூந்தல் வேய்ந்த விரவுமலர் உதிர்த்துசாந்துளர் நறும் கதுப்பு எண்ணெய் நீவி, அமரா முகத்தளாகித் தமர் ஓரன்னள்!
அருஞ்சொற்பொருள்: கள்வி = உள்ளத்தில் உள்ளதை மறைத்து நடப்பவள்; முரண் = பகை; துப்பு = துணைவலி; செவ்வேல் = சிவந்த வேல்; மலையன் = மலையமான் திருமுடிக்காரி (கடையெழு வள்ளல்களில் ஒருவன்);  நள் = செறிவு; கங்குல் = இருள்; ஓரன்னள் = ஒன்றிய தன்மையவள்; வேய்ந்த = சூடிய; விரவுதல் = கலத்தல்; உளர்தல் = பூசுதல்; கதுப்பு = பெண்களின் கூந்தல்; நீவி = தடவி; அமர்தல் = பொருந்துதல்; அமரா = பொருந்தாத; வைகறை = விடியற்காலம்.
உரை: இருவேறு விதமான நடத்தையை அறிந்த கள்ளத் தன்மையை உடைய நம் காதலி, இருள் செறிந்த  இரவில், எப்பகையையும் எதிர்க்கும் வலிமையையுடைய, சிவந்த வேலையுடைய மலையமான் திருமுடிக்காரியின் முள்ளூர் மலைக்காட்டிலுள்ள நறுமணத்தைப் போன்ற மணம் வீசும்படி வந்து, நம்மோடு மனம் ஒன்றியவளாயினாள்; விடியற்காலத்தில், அவள் கூந்தலில் நான் சூட்டிய,  பலவகையான மலர்களை உதிர்த்துவிட்டு, மயிர்ச்சாந்து பூசிக் கோதிய மணமுள்ள கூந்தலில் எண்ணெயைத் தடவி, மாறுபட்ட முகத்துடன், தன் உறவினர்களோடு ஒத்தவளாயினாள்.
சிறப்புக் குறிப்பு: தலைவி தலைவனோடு மனம் ஒன்றிப் பழகுகிறாள். இரவிலே அவனோடு கூடி மகிழ்கிறாள். அவர்கள் இரவில் சந்திக்கும் பொழுது, அவன் அவளுக்குப் பலவகையான மலர்களைச் சூட்டி அவள் அழகைக் கண்டு மகிழ்கிறான். அவளும் அவன் விருப்பத்துக்கு இணங்கி நடந்துகொள்கிறாள். ஒருநாள், காலைவேளையில் தலைவன் தலைவி வீட்டுக்கு விருந்தினனாகச் சென்றான். அவள் தலையில், அவன் முதல் நாள் இரவு சூட்டிய மலர்களைக் காணவில்லை. அவள் அந்த மலர்களை உதிர்த்துவிட்டு, நீராடித் தலையில் எண்ணெயைத்  தடவி வாரியிருந்தாள். அவள் தன் சுற்றத்தாரோடு மனம் ஒன்றிப் பழகினாள். அவனோடு காதலியாக இரவில்  உறவாடியவள் இப்பொழுது அவனைத் தெரியாதவள் போல் நடந்துகொள்கிறாள். இவ்வாறு, இருவேறு விதமான நடத்தையை உடைய கள்வியாக அவள் இருப்பாது அவனுக்கு மிகுந்த வியப்பாக இருக்கிறது.
தலைவி இருவேறு விதமாக நடந்துகொள்ளும் ஆற்றல் உடையவளாக இருந்தாலும், அவளால் நெடுங்காலம் களவொழுக்கத்தை மறைக்கமுடியாது. ஆகவே, விரைவில் அவளைத் திருமணம் செய்துகொள்வதுதான் சிறந்தது என்று தலைவன் நினைக்கிறான்
மலையமான் திருமுடிக்காரி:திருக்கோவலூருக்கு மேற்கே பெண்ணையாற்றின் தென்கரைப் பகுதியும் தென்பகுதியும் சங்க காலத்தில் மலாடு என்ற பெயரால் அழைக்கப்பட்டது.  மலாடு என்ற பகுதிக்குக் கோவலூர் தலைநகராக இருந்தது.  கபிலர் காலத்தில் கோவலூரைத் தலைநகராகக்கொண்ட மலாடு என்ற பகுதியை ஆட்சி புரிந்த குறுநில மன்னனின் பெயர் மலையமான் திருமுடிக்காரி.  இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  இவன் காரி என்றும் மலையமான் என்றும் கோவற்கோமான் என்றும் தேர்வண்மலையன் என்றும் அழைக்கப்பட்டான்.
            பெண்ணையாற்றுக்குத் தென்மேற்கே உள்ள முள்ளூர் என்ற ஊரும் காரிக்குச் சொந்தமானதாக இருந்தது.  ஒரு சமயம் அதனைக் கைப்பற்ற ஆரிய மன்னர் பெரிய வேற்படையோடு வந்து முற்றுகையிட்டனர்.  காரி அவர்களை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற்றான்.  இச்செய்தி, ‘ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒருவேற்கு ஓடி ஆங்குஎன்ற நற்றிணைப் பாடலிலிருந்து (170) தெரியவருகிறது.

            மலையமான் திருமுடிக்காரி தமிழ் மூவேந்தருடன் நட்பு கொண்டிருந்தான்.  அவர்களுக்குத் துணையாகப் போர்புரிந்தான்.  உதாரணமாக, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் சேரமான் மாந்தரஞ்சேரலிரும்பொறையும் போரிட்ட பொழுது, திருமுடிக்காரி சோழனுக்குத் துணையாக இருந்து சேரனை எதிர்த்துப் போராடியதாகவும், அப்போரில் திருமுடிக்காரியின் உதவியால் சோழன் வென்றதாகவும் புறநானூற்றுப் பாடல் 125 – இல் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment