Wednesday, March 8, 2017

313. தலைவி கூற்று

313.  தலைவி கூற்று

பாடியவர்: இவர் பெயர் தெரியவில்லை.
திணை: நெய்தல்.
கூற்று : இரவுக்குறி வந்து ஒழுகுங் காலத்துத் தலைமகனது வரவுணர்ந்து, ”பண்பிலர் என்று இயற்பழித்த தோழிக்கு, ”அவரோடு பிறந்த நட்பு அழியாத நட்பன்றோஎன்று, சிறைப்புறமாகத் தலைமகள் இயற்படமொழிந்தது. (இயற்பழித்தல் = தலைவனின் இயல்பைப் பழித்துரைத்தல்; இயற்பட மொழிதல் = தலைவனது இயல்பைப் போற்றி உரைத்தல்)
கூற்று விளக்கம்: தலைவன் இரவில் வந்து தலைவியைச் சந்திக்கிறான். அவளோடு கூடி மகிழ்கிறான். ஆனால், திருமணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் காலம் கடத்துகிறான். ஒருநாள், தலைவன் தலைவியைக் காணவந்து, வீட்டுக்கு வெளியே நிற்கிறான். தலைவனின் செயலால் கோபமுற்ற தோழி, அவன் காதில் கேட்குமாறு, அவனைப் பற்றி இழிவாகப் பேசுகிறாள். அதைக் கேட்ட தலைவி, “தலைவனுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பு மிகவும் உறுதியானது. எங்கள் நட்புக்கு அழிவில்லை. எங்களை எவராலும் பிரிக்க முடியாது.” என்று தலைவன் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்.

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந் துண்டு
பூக்கமழ் பொதும்பிற் சேக்குந் துறைவனொடு
யாத்தேம் யாத்தன்று நட்பே
அவிழ்த்தற் கரிதது முடிந்தமைந் தன்றே. 


கொண்டு கூட்டு: பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கைநீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டுபூக்கமழ் பொதும்பில் சேக்கும் துறைவனொடு நட்பு  யாத்தேம்;
யாத்தன்று; அவிழ்த்தற்கு அரிது; முடிந்து அமைந்தன்று. 
அருஞ்சொற்பொருள்: நீத்து = வெள்ளம்; இரு = கரிய; கழி = கடலோர நீர்நிலை; பொதும்பு = சோலை; யாத்தல் = கட்டுதல், முடிச்சுப் போடுதல்; சேக்கும் = தங்கும்.
உரை: தோழி! பெரிய கடற்கரையில், சிறிய வெண்ணிறமான காக்கையானது, வெள்ளம் போல் நீர் நிறைந்த கழியில் மீனை  இரையாகத் தேடி உண்டு,  மலர் மணம் வீசும் சோலையில் தங்கும் துறையையுடைய தலைவனோடு, நம்மை நட்பில் பிணைத்துக் கொண்டோம். அங்ஙனம் பிணைக்கப்பட்ட  நட்பு நன்றாக உறுதியாகக் கட்டப்பட்டது. அது பிறராற் பிரித்தற்கு அரியது; அது நன்கு முடிச்சுப் போடபட்டதுபோல் அமைந்தது.

சிறப்புக் குறிப்பு:  கடற்கரையில் இரையை உண்ட காகம், பூ மணக்கும் சோலையில் தங்கும் துறையையுடைய தலைவன் என்றது, களவொழுக்கத்தில் வந்து கூடி மகிழும் தலைவன், திருமணம் செய்துகொண்டு தன் இல்லத்திலிருந்து இல்லறம் நடத்த வேண்டும் என்று தலைவி விரும்புவதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment