Sunday, March 19, 2017

324. தோழி கூற்று

324. தோழி கூற்று
பாடியவர்: கவை மகனார்.
திணை: நெய்தல்.
கூற்று : செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இரா வாரா வரைவல்" என்றாற்கு த் தோழி அது மறுத்து வரைவு கடாயது. (இரா வாரா இரவில் வந்து; வரைவல்திருமணம் செய்துகொள்வேன்)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் பகலில் சந்தித்துக் களவொழுக்கத்தில் தங்கள் காதல் வாழ்க்கையைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவியின் தாய்க்குத் தலைவியின் காதலைப் பற்றித் தெரிய வந்ததால், தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கவேண்டும் என்று முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “ தலைவியின் தாய் அவளை வீட்டில் காவலில் வைக்கப் போகிறாள். ஆகவே, இனிமேல் நீ அவளைக் காண இயலாது. நீ அவளை விரைவில் திருமணம் செய்துகொள்வதுதான் முறையான செயல்.” என்று தலைவனிடம் கூறுகிறாள். அதற்குத் தலைவன், “ நான் எவருக்கும் தெரியாமல் தலைவியை இரவில் சந்திக்க விரும்புகிறேன். அதற்குப் பிறகு, நான் அவளைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறுகிறான். தலைவனின் கூற்றுக்கு தோழியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

கொடுங்கால் முதலைக் கோள்வ லேற்றை
வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை
இனமீன் இருங்கழி நீந்தி நீநின்
நயனுடை மையின் வருதி யிவடன்
மடனுடை மையின் உயங்கும் யானது
கவைமக நஞ்சுண் டாஅங்
கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. 
கொண்டு கூட்டு: பெரும! நீ நின் நயனுடைமையின், கொடுங்கால் முதலைக் கோள்வல் ஏற்றைவழிவழக்கு அறுக்கும் கானலம் பெருந்துறைஇனமீன் இருங்கழி நீந்தி வருதி. இவள் தன் மடன் உடைமையின் உயங்கும். யான் கவைமக நஞ்சு உண்டாங்கு என் நெஞ்சத்தான் அது அஞ்சுவல்!
அருஞ்சொற்பொருள்: கொடுங்கால் = வளைந்த கால்; கோள்வல் = கொல்லுதலில் வல்லமை பெற்ற; ற்றை – விலங்குகளின் ஆணுக்குப் பொதுப்பெயர் (இங்கு ஆண் முதலையைக் குறிக்கிறது); வழக்கு அறுதல் = போய் வருதலைத் தடுத்தல்; கானல் = கடற்கரைச் சோலை; இனமீன்மீன் இனம்; நயன் = அன்பு; மடன் = அறியாமை;  உயங்குதல் = வருந்துதல்; கவை மகவு = இரட்டைக் குழந்தைகள்; பெரும = தலைவ.
உரை: தலைவ!  நீ உனது அன்புடைமையால், வளைந்த கால்களையுடைய, கொல்லுதலில் வல்ல ஆண்முதலைவழிச்செல்வோரைச் செல்ல விடாது போய்வருதலைத் தடுக்கும் கடற்கரைச் சோலைகளையுடைய பெரிய கடற்றுறையில், திரளாக மீன்களை உடைய கரிய கழியை நீந்திக் கடந்து வருவாய். தலைவி, உன் வலிமையை  அறியாததால் வருந்துவாள். நான்  என் மனத்தினுள்ளே,  இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், இருவருக்காகவும் ஒரு தாய் வருந்துவது போல, நீ அவ்வாறு வருவதை நினைத்து அஞ்சுவேன்.

சிறப்புக் குறிப்பு: நீ உன் அன்பினால் தலைவியைக் காணபதற்காக  வர விரும்புகிறாய். நீ வருவதைத் தடுப்பது முறை அன்று. நீ வரும் வழியில் உனக்கு இன்னல்கள் நேரலாம். அதை எண்ணித் தலைவி வருந்துவாள். அதனால், நீ இரவில் வருவது சரி அன்று. உங்கள்  இருவருக்கும் துன்பமுண்டாகும் இந்நிலையில், இரட்டைக் குழந்தைகள் நஞ்சுண்டால், அவர்கள்  இருவருக்காகவும் இரங்கும் தாயைப் போல, நான் உங்கள் இருவருக்காகவும் வருந்துவேன். ஆகவே, ”நீ விரைவில் தலைவியைத் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது.” என்று தோழி தலைவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறாள்.  

No comments:

Post a Comment