Wednesday, March 8, 2017

316. தலைவி கூற்று

316.  தலைவி கூற்று
பாடியவர்: தும்பிசேர் கீரனார்.
திணை: நெய்தல்.
கூற்று : "வரைவிடை வேறுபடுகின்றாய்" என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். அதனால் தலைவி வருத்தத்துடன் இருக்கிறாள். அவள் கைவளையல்கள் நெகிழ்ந்து, உடல் மெலிந்து காணப்படுகிறாள். தலைவியின் நிலையைக் கண்ட தோழி, “தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நீ மிகவும் வருந்துகிறாய் போலும். எப்படியாவது, பிரிவைப் பொறுத்துகொள்ள முயற்சி செய். தலைவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று ஆறுதல் கூறுகிறாள். “தலைவன் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற காலம் கடந்தது. ஆனால், அவன் இன்னும் வரவில்லை. அவன் என்னைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று எனக்கு அளித்த உறுதிமொழிகள் எல்லாம் பொய்யாயின. என் வருத்தத்தின் காரணத்தை என் தாய் அறிந்துகொள்வாளோ என்று நான் அஞ்சுகிறேன். அவள் அறிந்து கொண்டால், நான் உயிர் வாழ மாட்டேன்.” என்று தலைவி கூறுகிறாள்.
ஆய்வளை ஞெகிழவு மயர்வுமெய் நிறுப்பவும்
நோய்மலி வருத்தம் அன்னை யறியின்
உளெனோ வாழி தோழி விளியா
துரவுக்கடல் பொருத விரவுமண லடைகரை
ஓரை மகளி ரோராங் காட்ட
வாய்ந்த லவன் துன்புறு துனைபரி
ஓங்குவரல் விரிதிரை களையும்
துறைவன் சொல்லோ பிறவா யினவே.

கொண்டு கூட்டு: தோழி! வாழி! உரவுக்கடல் பொருத விரவு மணல் அடைகரை ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட ஆய்ந்த அலவன் துன்புறு துனைபரிஓங்குவரல் விரிதிரை களையும் துறைவன் சொல்லோ, பிற ஆயின. ஆய்வளை ஞெகிழவும், அயர்வு மெய் நிறுப்பவும் நோய்மலி வருத்தம் அன்னை அறியின் விளியாது உளெனோ?
அருஞ்சொற்பொருள்: ஆய்வளை = அழகிய வளையல்கள்; உளெனோ = உயிரோடு இருப்பேனோ; ஞெகிழ்தல் = கழலுதல்; அயர்வு = வருத்தம்; நிறுப்பவும் = நிலைக்கச் செய்யவும்; நோய் = துன்பம்; மலிதல் = மிகுதல்; விளியாது = இறவாது; உரவு = வலி; விரவுதல் = கலத்தல்; அடைகரை = மணல் அடைந்த கரை (கரை ஓரம்); ஒரை = சிறுமியர் விளையாட்டு; ஓராங்கு = ஒரேயடியாக; ஆட்ட = துன்புறுத்த; ஆய்தல் = வருந்துதல்; அலவன் = நண்டு ; துனை = விரைவு; பரிதல் = ஓடுதல்; பிற ஆயின = பொய்யாயின.
உரை: தோழி! நீ வாழ்க! வலிய கடல் அலைகள் மோதுவதால், மணல் பரவியுள்ள கடற்கரையில், பெண்கள் ஒரை என்னும் விளையாட்டை விளையாடுகிறார்கள். அவர்கள் ஒன்றுசேர்ந்து, அங்குள்ள நண்டு ஒன்றைத் துன்புறுத்துகிறார்கள். அதனால், வருத்தமடைந்த அந்த நண்டு, துன்பத்தோடு விரைந்து ஓடுகிறது. உயர்ந்து வருகின்ற விரிந்த அலை, அந்த நண்டைக் கொண்டு சென்று, அந்த நண்டின் துன்பத்தை நீக்குகிறது. அத்தகைய, துறையையுடைய தலைவன் சொன்ன சொற்கள் பொய்யாயின. அதனால், என் கையிலுள்ள அழகிய வளையல்கள் நெகிழ்ந்தன; உடலில் சோர்வு நீங்காமல் நிலைத்தது. இவ்வாறு என் காமநோயால் எனக்கு உண்டான மிகுந்த வருத்தத்தை என் தாய் அறிவாளாயின், நான் இறவாமல் உயிரோடு இருப்பேனோ?

சிறப்புக் குறிப்பு: மகளிர் துன்புறுத்திய பொழுது, அவர்களுக்கு அஞ்சி விரைந்து ஓடிய நண்டை, அம்மகளிர் கையில் அகப்படாதவாறு அலை கொண்டு சென்றது. அதனால், அந்த நண்டின் துன்பம் தீர்ந்தது.  அதுபோல், தனது காமநோயால் உண்டாகிய மிகுந்த வருத்தத்தையும், ஊரார் கூறும் அலரால் தோன்றிய வருத்தத்தையும், களவொழுக்கத்தைத் தாய் அறிந்து கொள்வாளோ என்ற அச்சத்தையும், தலைவன் தன்னைத் திருமணம் செய்துகொண்டு, போக்க வேண்டும் என்று தலைவி விரும்புகிறாள்.

No comments:

Post a Comment