Wednesday, March 8, 2017

315. தலைவி கூற்று

315. தலைவி கூற்று 

பாடியவர்: மதுரை வேள்ஆதத்தனார். இவருடைய இயற்பெயர் தத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. இப்பாடலை இயற்றியவர் குறுந்தொகையில் உள்ள 61 – ஆம் பாடலை இயற்றிய தும்பிசேர் கீரனார் என்றும் கருதப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவிடை ஆற்றகிற்றியோ என்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடச் சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துவாள் என்று எண்ணிய தோழி, “தலைவன் திரும்பிவந்து, உன்னைத் திருமணம் செய்துகொள்ளும்வரை உன்னால் வருந்தாமல், பொறுமையோடு இருக்க முடியுமா?” என்று கேட்கிறாள்அதற்குத் தலைவி. “நான் அவர் விருப்படியே நடப்பவள். அதனால் அவர் வரும்வரை நிச்சயம் பொறுமையோடு காத்திருப்பேன்.” என்று கூறுகிறாள்.

எழுதரு மதியங் கடற்கண் டாஅங்
கொழுகுவெள் ளருவி யோங்குமலை நாடன்
ஞாயி றனையன் தோழி
நெருஞ்சி யனையவென் பெரும்பணைத் தோளே. 

கொண்டு கூட்டு: தோழி! எழுதரு மதியம் கடல் கண்டாங்கு, ஒழுகு வெள்ளருவி
ஓங்குமலை நாடன் ஞாயிறு அனையன்என் பெரும் பணைத்தோள் நெருஞ்சி அனைய. 
அருஞ்சொற்பொருள்: எழுதரு = எழுகின்ற; பணை = மூங்கில்.
உரை: தோழி!  கடலிலிருந்து மேலெழுகின்ற முழுமதியைக் கண்டால் அதன் ஒளி நம்மை நோக்கி வருவதைப் போல், ஒழுகிக்கொண்டிருக்கின்ற வெண்ணிறமான அருவியையுடைய உயர்ந்த மலைநாட்டையுடைய தலைவன், கதிரவனைப் போன்றவன். மூங்கிலைப் போன்ற என்னுடைய பெரிய தோள்கள், நெருஞ்சி மலர்களைப் போன்றவை.

சிறப்புக் குறிப்பு: நெருஞ்சி மலர் (சூரியகாந்திப் பூவைப் போல்) காலையில் கிழக்குத் திசையில் மலர்ந்து,  கதிரவன் இயங்கும் திசையையே நோக்கித் தானும் இயங்கும். மாலையில் கதிரவன் மறைந்தவுடன் நெருஞ்சி மலர் கூம்பிவிடும்.  நெருஞ்சி மலர் கதிரவனின் இயக்கத்தோடு இணைந்து இயங்குவதைப் போல் தன்னுடைய தோள்களும் இயங்கும் என்று தலைவி கூறுவது, ”நான் தலைவன் கருத்தின்படி வாழ்வேன்.“ என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. அருவிக்குத் திங்களின் ஒளி உவமை; மலைக்குக் கடல் உவமை; தலைவனுக்குக் கதிரவன் உவமை; தலைவியின் உள்ளத்திற்கு நெருஞ்சி மலர் உவமை. இச்சிறிய பாடலில் நான்கு உவமைகள் அடங்கி இருப்பது இப்பாடலின் தனிச் சிறப்பு. “இப் பாடல் உலகக் காதல் பாடல் வரிசையில் வைத்து எண்ணத்தக்கது. ஒருபெரிய புதினத்திற்கான கருத்தாழமும், கற்பனை வளமும் இந்நான்கு அடிகளுள் உள.” என்று இப்பாடலைத் தமிழண்ணல் அவர்கள் தம் நூலில் பாராட்டுகிறார்.

No comments:

Post a Comment