Sunday, March 19, 2017

323. தலைவன் கூற்று

323.  தலைவன் கூற்று
பாடியவர்: பதடி வைகலார்.
திணை: முல்லை.
கூற்று : வினை முற்றினான் பாகற்கு உரைத்தது. (வினை முற்றினான் = செயலை முடித்தவன்)
கூற்று விளக்கம்: தலைவன் தன் பணியை முடித்துத் திரும்பி வருகிறான். “தலைவியைப் பிரிந்திருக்கும் நாட்கள் எல்லாம் நல்ல நாட்கள் அல்ல; நான் தலைவியைக் காண மிகுந்த ஆவலோடு இருக்கிறேன். ஆகவே, தேரை விரைவாகச் செலுத்துக.” என்று தேர்ப்பாகனிடம் கூறுகிறான்.

எல்லாம் எவனோ பதடி வைகல்
பாணர் படுமலை பண்ணிய எழாலின்
வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
அரிவை தோளிணைத் துஞ்சிக்
கழிந்த நாளிவண் வாழு நாளே. 

கொண்டு கூட்டு: பாணர் படுமலை பண்ணிய எழாலின்  வானத்து எழும் சுவர் நல்லிசை வீழப் பெய்த புலத்துப் பூத்த முல்லைப் பசுமுகைத் தாது நாறும் நறுநுதல் அரிவை தோள் இணைத் துஞ்சிக் கழிந்த நாளே இவண் வாழும் நாள்எல்லாம் எவனோ? பதடி வைகல் !
அருஞ்சொற்பொருள்: பதடி = பதர்; வைகல் = நாள்; படுமலை = படுமலைப் பாலை (ஒரு பண்); எழால் = யாழ்; சுவர் = உச்ச ஒலி; வீழ = போல (உவம உருபு); பசுமுகை = பசுமையான மொட்டு; நாறும் = மணக்கும்; அரிவை = பெண் (தலைவி);  துஞ்சுதல் = உறங்குதல்.
உரை: பாணர்கள் படுமலைப் பாலை என்னும் பண்ணை வாசிக்கும் பொழுது, யாழின் இசையிலிருந்து தோன்றிய, உச்ச ஒலி வானத்தில் எழுந்து ஒலிப்பது போல, இனிய ஓசையுடன் மழை பெய்த கொல்லையில் மலர்ந்த முல்லையின், பசுமையான  அரும்பின் தாதைப் போன்ற நறுமணம் வீசுகின்ற நல்ல நெற்றியையுடைய, தலைவியின் தோள்களில் உறங்கிக் கழித்த நாட்களே இவ்வுலகில் வாழும் நாட்களாகும்; மற்ற  நாட்கள் எல்லாம், என்ன பயனை உடையன?  அவை பதர் போன்ற பயனற்ற நாட்களாகும்.

சிறப்புக் குறிப்பு: ”இவண் வாழுநாள்என்றது தலைவியைத் தழுவி உறங்கிய நாட்களையும் ,”எல்லாம்”  என்றது தலைவியைத் தழுவி உறங்காத நாட்களையும் குறிக்கின்றன. தலைவியைத் தழுவி உறங்காத நாட்கள் இன்பம் இல்லாதிருப்பதால் பதடி வைகல்என்றான். கொல்லையில் பெய்த மழையின் ஓசைக்குப் படுமலைப் பாலையின் இசை உவமை.

No comments:

Post a Comment