Wednesday, March 8, 2017

314. தலைவி கூற்று

314. தலைவி கூற்று

பாடியவர்: பேரிசாத்தனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 81 – இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வேறுபட்ட கிழத்தி வற்புறுத்துந் தோழிக்குப் பருவங்காட்டி அழிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பிவருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. தலைவன் இன்னும் வராததால் தலைவி வருந்துவதைக் கண்ட தோழி, தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள். ”அவர் திரும்பிவருவதாகக் கூறிய பருவம் வந்துவிட்டது. ஆனால், அவர் இன்னும் வரவில்லையே!” என்று தலைவி தன் வருத்தத்தைத் தோழியிடம் பகிர்ந்துகொள்கிறாள்.

சேயுயர் விசும்பி னீருறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
பெயர்தாழ் பிருளிய புலம்புகொள் மாலையும்
வாரார் வாழி தோழி வரூஉம்
இன்னுறல் இளமுலை ஞெமுங்க
இன்னா வைப்பின் சுரனிறந் தோரே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! இன்னா வைப்பின் சுரன் இறந்தோர்சேய் உயர் விசும்பின் நீர்உறு கமம்சூல்தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப் பெயல்தாழ்பு இருளிய புலம்புகொள் மாலையும் வரூஉம்இன் உறல் இளமுலை ஞெமுங்க வாரார்.
அருஞ்சொற்பொருள்: சேய் உயர் = நெடுந்தூரம் உயர்ந்த; விசும்பு = ஆகாயம்; உறு = மிக்க; கமம் = நிறை; சூல் = கருப்பம்; குரல் = ஒலி; எழிலி = மேகம்; தாழ்பு = இறங்கி (இறங்கி மழை பெய்தல்); புலம்பு = தனிமை; வாழிஅசைநிலை; இன் உறல் = தொட்டுத் தழுவுவதற்கு இனிய; ஞெமுங்க = அழுந்த; வைப்பு = இடம்.

உரை: தோழி! துன்பத்தைத் தரும் இடங்களையுடைய, பாலைநிலத்தைக் கடந்து சென்ற தலைவர், மிக உயர்ந்த வானத்தில், நீர்மிக்க, நிறைந்த கருப்பத்தையுடைய மேகம்,  குளிர்ச்சியோடும், முழக்கத்தோடும், ஓள்ளிய மின்னலின் ஒளி வீசுமாறு,  மழைபெய்யும் இருண்ட, தனிமையைக் கொண்ட மாலைக்காலம் வந்தும்தொட்டுத் தழுவுவதற்கு  இனிய, என்னுடைய இளமுலைகள் அழுந்தும்படித் தழுவ வாரார்.

No comments:

Post a Comment