Wednesday, March 8, 2017

317. தோழி கூற்று

317. தோழி கூற்று

பாடியவர்: மதுரைக் கண்டரதத்தன். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: குறிஞ்சி.
கூற்று : பிரிவிடைக் கிழத்தியைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி தலைவனை நினைத்து வருந்திக் கொண்டிருப்பதைக் கண்ட தோழி, “ இப்பொழுது குளிர்காலம் வந்துவிட்டது. அதற்கு அறிகுறியாக வாடைக் காற்றும் வீசுகிறது. இந்தக் குளிர்காலத்தில் தலைவன் உன்னைவிட்டுப் பிரிந்திருக்க மாட்டான். அவன் விரைவில் வந்துவிடுவான்.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

புரிமட மரையான் கருநரை நல்லேறு
தீம்புளி நெல்லி மாந்தி யயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்துயிர்த்
தோங்குமலைப் பைஞ்சுனை பருகு நாடன்
நம்மைவிட் டமையுமோ மற்றே கைம்மிக
வடபுல வாடைக் கழிமழை
தென்புலம் படருந் தண்பனி நாளே. 


கொண்டு கூட்டு: புரிமட மரையான் கருநரை நல்ஏறுதீம்புளி நெல்லி மாந்தி, அயலது
தேம்பாய் மாமலர் நடுங்க வெய்து உயிர்த்து, ஓங்குமலைப் பைஞ்சுனை பருகும் நாடன்கைம்மிக வடபுல வாடைக்கு அழிமழை தென்புலம் படரும் தண்பனி நாள், நம்மைவிட்டு அமையுமோ

அருஞ்சொற்பொருள்: புரிதல் = விரும்பல்; மடப்பம் = இளமை; மரையான் = ஒருவகை மான்; ஆன் = எருமை, மான் ஆகியவற்றின் பெண்; தீம்புளி = இனிப்புள்ள புளிப்பு; மாந்துதல் = உண்ணுதல்; பாய்தல் = பரவுதல்; மா = அழகு; வெய்து உயிர்த்து = வெப்பமுள்ள பெருமூச்சுவிட்டு; கைம்மிக = அளவுக்கு மீறி (அதிகமாக); மழை = மேகம்; அழிமழை = சிதைந்த மேகம்.
உரை: விரும்பத்தக்க இளம் மரையான் இனத்தைச் சார்ந்த, கருமையும் வெண்ணிறமும் கலந்த மயிரை உடைய நல்ல ஆண்,  இனிய புளிப்பையுடைய நெல்லிக்கனியைத் தின்று, அருகில் உள்ள,  தேன் நிறைந்த அழகிய மலர்கள், அசையும்படி வெப்பமாக மூச்சை விட்டு,  உயர்ந்த மலையிலுள்ள பசுமையான தண்ணீரைக் குடிக்கின்ற நாட்டையுடைய தலைவன், மிகுதியாக வீசும், வடக்கிலிருந்து வந்த வாடைக்காற்றால் சிதைந்த மேகம்,  தெற்கு நோக்கிச் செல்லும், குளிர்ந்த பனிக்காலத்தில், நம்மைப் பிரிந்து தனிமையாக வாழ்வானோ?
சிறப்புக் குறிப்பு: நெல்லிகனியைத் தின்றால் புளிப்பும் இனிமையும் தோன்றுவதால் தீம்புளி நெல்லிஎன்றாள். உண்ணும் பொழுது நெல்லிக்கனி அதில் இனிமையும் புளிப்பும் கலந்திருப்பதுபோல், களவொழுக்கத்தில் இன்பமும் துன்பமும் கலந்திருக்கிறது. நெல்லிக்கனியை உண்ட பிறகு நீரைக் குடித்தால், அது இனிமையாக இருப்பதுபோல், திருமணத்திற்குப் பிறகு இல்லறமும் இனிமையாக அமையும் என்று தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.  

காட்டிலுள்ள மரையான்  முதலிய விலங்குகள் மலரால் மூடப்பட்ட சுனைநீரைக் குடிக்கும்பொழுது  அம்மலர்களைத் தம் மூச்சுக் காற்றால் விலகச் செய்து அதன் பிறகு நீரைக்குடிப்பது வழக்கம் என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

No comments:

Post a Comment