Wednesday, March 8, 2017

318. தலைவி கூற்று

318. தலைவி கூற்று

பாடியவர்: அம்மூவனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 49 – இல் காணலாம்.
திணை: நெய்தல்.
கூற்று : கிழவன் கேட்கும் அண்மையனாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வருகிறார்கள். ஒருநாள், தலைவன் தலைவியைக் காண்பதற்காக வந்து, அவள் வீட்டிற்கு வெளியே நிற்கிறான். “நாங்கள் முதலில் சந்தித்த பொழுது,” நான் ஒருபொழுதும் உன்னை விட்டுப் பிரிய மாட்டேன்.” என்று தலைவன் சூளுரைத்தான் (சத்தியம் செய்தான்). பிரியாமல் இருக்க வேண்டுமானால் திருமணம் செய்துகொள்ள வேண்டும். அவன் கூறிய சூளுரையை நிறைவேற்றுவது அவன் கடமை. அவனிடத்தில் அதைப் பற்றி நான் எதுவும் கூறவேண்டியது இல்லை.” என்று கூறி, விரைவில் தலைவன் தன்னைத்  திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்ற தன் விருப்பத்தைத் தலைவனுக்குத் தலைவி குறிப்பாக உணர்த்துகிறாள்.

எறிசுறாக் கலித்த இலங்குநீர்ப் பரப்பின்
நறுவீ ஞாழலொடு புன்னை தாஅய்
வெறியயர் களத்தினில் தோன்றுந் துறைவன்
குறியா னாயினும் குறிப்பினும் பிறிதொன்
றறியாற் குரைப்பலோ யானே யெய்த்தவிப்
பணையெழின் மென்றோ ளணைஇய வந்நாட்
பிழையா வஞ்சினஞ் செய்த
கள்வனும் கடவனும் புணைவனுந் தானே. 


கொண்டு கூட்டு: எறிசுறாக் கலித்த இலங்கு நீர்ப் பரப்பின்நறு வீ ஞாழலொடு புன்னை தாஅய்வெறிஅயர் களத்தினில் தோன்றும் துறைவன்குறியானாயினும் குறிப்பினும், பிறிதொன்று அறியாற்கு யான் உரைப்பலோ! எய்த்த இப் பணையெழில் மென்தோள் அணைஇய அந்நாள் பிழையா வஞ்சினஞ் செய்த கள்வனும் கடவனும் புணைவனும் தானே!
அருஞ்சொற்பொருள்: எறிதல் = அழித்தல்; கலித்த = தழைத்த (மிகுந்த); இலங்குதல் = விளங்குதல்; வீ = பூ; ஞாழல் = ஒரு வகை மரம்; புன்னை = ஒருவகை மரம் (புலிநகக் கொன்றை); தாஅய் = பரவி; வெறி அயர் களம் = வெறியாட்டு நடைபெறும் இடம்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; குறி = குறிப்பு; பிறிது ஒன்று = வேறொன்று (இங்கு, தலைவியைத் தலைவன் அல்லாத பிறர்க்கு  மணம் செய்விப்பதைக் குறிக்கிறது); எய்த்த = மெலிந்த; பணை = மூங்கில்; எழில் = அழகு; வஞ்சினம் = சூள் (சத்தியம்); கடவன் = கடமைப்பட்டவன்; புணைவன் = தெப்பம் போன்றவன் (பாதுகாவலாக இருப்பவன்).
உரை: தன்னை நெருங்குகின்றவரைக் கொல்லுகின்ற சுறாமீன்கள் நிறைந்த, விளங்குகின்ற கடற்கரை, மணம் கமழும் ஞாழற்பூவோடு புன்னை மலரும் பரவி, வெறியாடும் இடத்தைப் போலத் தோன்றுகிறது. அத்தகைய  துறையையுடைய தலைவன், என்னைத் திருமணம் செய்துகொள்ளும் குறிக்கோள் உடையவனாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், வேறு எவராவது என்னைத் திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்பதை அறியாத அவனுக்கு,  நான் அதைப்பற்றிக் கூற வேண்டுமா? மூங்கிலைப் போன்ற, அழகையுடைய என் மெல்லிய தோள்கள் இப்பொழுது மெலிந்தன. அவை மெலியாது அழகுடன் இருந்த பொழுது, என்னைத் தழுவிய அந்த நாளில்,  தான் தவறு செய்ய மாட்டேன் என்று சூளுரைத்த, வஞ்ச நெஞ்சுடையவனும்,  தான் உரைத்த சூளுரையை நிறைவேற்றும் கடமை உடையவனும், துன்பக் கடலைக் கடப்பதற்கு நமக்கோர் பாதுகாவலாக (தெப்பம் போல்) இருப்பவனும் அத்தலைவனே ஆவான்.

சிறப்புக் குறிப்பு: ”எய்த்த தோள்என்றது தலைவன் திருமணம் செய்துகொள்ளாமல் களவொழுக்கத்தைத் தொடர்வதால் தன் தோள்கள் மெலிந்தன என்று தலைவி கூறுவதைக் குறிக்கிறது. தன் சூளுரைக்கேற்பத் தலைவன் நடந்து கொள்ளாததால் அவனைக் கள்வன் என்று தலைவி கூறுகிறாள். தலைவன் கள்வனாயினும் அவனைத் தட்டிக்கேட்டு அவனுக்குத் தண்டனை அளிப்பார் எவரும் இல்லாததால், தானே தன் சூளுரையை நிறைவேற்றும் கடமையை உடையவன் என்றும். தலைவனைத் தவிர வேறு எவரும் தனக்கு உதவி செய்ய முடியாததால் தலைவனைப்புணையன் (தெப்பம் போன்றவன்)” என்று தலைவி கூறுகிறாள்.

No comments:

Post a Comment