Sunday, July 23, 2017

373. தோழி கூற்று

373. தோழி கூற்று
பாடியவர்: மதுரைக் கொல்லம் புல்லனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அலர் மிக்கவழித் தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் இடையே உள்ள நட்பைப் பற்றி ஊர்மகளிரின் பழிச்சொற்கள் அதிகரிக்கத் தொடங்கியதால் வருந்திய தலைவியை நோக்கித் தோழி, “ உனக்கும் தலைவனுக்கும் இடையே உள்ள நட்பு என்றும் அழியாததுஎன்று கூறுகிறாள்.

நிலம்புடை பெயரினு நீர்தீப் பிறழினும்
இலங்குதிரைப் பெருங்கடற் கெல்லை தோன்றினும்
வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக்
கேடெவன் உடைத்தோ தோழி நீடுமயிர்க்
கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை
புடைத்தொடு புடைஇப் பூநாறு பலவுக்கனி
காந்தளஞ் சிறுகுடிக் கமழும்
ஓங்குமலை நாடனொ டமைந்தநந் தொடர்பே. 

கொண்டு கூட்டு: தோழி! நீடுமயிர்க் கடும்பல் ஊகக் கறைவிரல் ஏற்றை, புடைத் தொடுபு  உடைஇ, பூநாறு பலவுக்கனி காந்தளம் சிறுகுடிக் கமழும் ஓங்குமலை நாடனொடு அமைந்த நம் தொடர்பு, நிலம் புடைபெயரினும், நீர் தீப்பிறழினும்இலங்கு திரைப் பெருங்கடற்கு எல்லை தோன்றினும்வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை அஞ்சிக் கேடு எவன் உடைத்து?

அருஞ்சொற்பொருள்: பிறழ்தல் = நேர் எதிராக மாறுதல்; கௌவை = பழிச்சொற்கள்; கடும்பல் = கூரிய பற்கள்; ஊகம் = கருங்குரங்கு; கறை = கறுப்பு நிறம்; ஏறு = விலங்குகளின் ஆண் (இங்கு, ஆண்குரங்கைக் குரங்கைக் குறிக்கிறது); புடை = பக்கம்; தொடுபு = தோண்டி.

உரை: தோழி! நீண்ட மயிரையும், கூரிய பற்களையும், கரிய விரல்களையும் உடைய ஆண் கருங்குரங்கு, பலாப்பழத்தின் பக்கத்திலே தோண்டியதால்,  அந்தப் பலாப்பழம் உடைந்து, மலரின் மணத்தைப் போல்  மணம் வீசுகிறது. அந்த மணம், காந்தளையுடைய அழகிய சிறிய ஊரில் பரவுகிறது.  அத்தகைய சிற்றூரில், ஓங்கிய மலையையுடைய நாடனோடு,  பொருந்திய நமது நட்பானது,  உலகம் தலைகீழாக  மாறினாலும், நீரும் தீயும் தம் இயற்கையினின்றும் மாறினாலும்,  விளங்குகின்ற அலைகளையுடைய பெரிய கடலுக்கு எல்லை தோன்றினாலும்,  கொடிய வாயையுடைய மகளிரது பழிச்சொற்களுக்கு அஞ்சி, எவ்வாறு கெடுதல் உடையதாகும்?


சிறப்புக் குறிப்பு: ஊரில் உள்ள மகளிர் கூறும் பழிச்சொற்கள், கேட்பவரின்  நெஞ்சைச் சுடுவதால், அச்சொற்களைக் கூறியவர்களின் வாயைவெவ்வாய்என்று தோழி கூறுகிறாள். குரங்கு தோண்டியதால் உடைந்த பலப்பழத்தின் மணம் ஊரெங்கும் பரவியது என்பது, ஊராரின் அலரால் தலைவனுக்கும் தலைவிக்கும் விரைவில் திருமணம் நடைபெறும் என்பதைக் குறிக்கிறது. இது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம்.

No comments:

Post a Comment