Monday, May 18, 2015

22. பாலை - தோழி கூற்று

22. பாலை - தோழி கூற்று

பாடியவர்: சேரமானெந்தை.  சங்க இலக்கியத்தில், இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் உள்ள ஒருபாடல் (22) மட்டுமே காணப்படுகிறது. ஆனால், அகநானூற்றில் உள்ள 41 –ஆம் பாடலை எழுதியவரும் இவரே என்று உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் குறிப்பிடுகிறார். அகநானூற்றில் உள்ள 41-ஆம் பாடலை எழுதியவர் குன்றியனார் என்று வேறு சில நூல்கள் கூறுகின்றன.
பாடலின் பின்னணி: தலைவன் பிரிந்து செல்வான் என்பதைக் குறிப்பால் அறிந்து வருந்திய தலைவியை நோக்கி, “தலைவர் உன்னை அழைத்துக் கொண்டுதான் செல்வார்என்று தோழி கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

நீர்வார் கண்ணை நீயிவண் ஒழிய
யாரோ பிரிகிற் பவரே சாரற்
சிலம்பணி கொண்ட வலஞ்சுரி மராஅத்து
வேனில் அஞ்சினை கமழும்
தேமூர் ஒண்ணுதல் நின்னொடுஞ் செலவே. 

அருஞ்சொற்பொருள்: வார்தல் = ஒழுகல், வடிதல்; இவண் = இங்கே; சாரல் = மலைப்பக்கம் ; சிலம்பு = மலை; அணீ = அழகு; வலஞ்சுரி = கடம்பமரம்; மராஅம் = மரம்; வேனில் = கோடைக்காலம்; சினை = கிளை; கமழ்தல் = மணத்தல்; தேம் = நறுமணம்; ஊர்தல் = பரவுதல்; நுதல் = நெற்றி; ஒண்ணுதல் = ஒள்+நுதல் = ஒளி பொருந்திய நெற்றி.

உரை: நீர் வடியும் கண்களையுடைய தோழி ( தலைவியே!)! உன்னை இங்கே தனியாக விட்டுவிட்டு யாரால் பிரிந்து செல்ல முடியும்?  கடம்ப மலரை உடைய கடம்ப மரங்கள், மலைப்பக்கத்திற்கு அழகு செய்கின்றன. வேனிற் காலத்தில் அந்த மலர்கள் மலர்வதால், அவற்றைத் தாங்கி நிற்கும் அழகிய கிளைகளும் மணம் உடையனவாக உள்ளன. அந்த மலர்களின் நறுமணம் போல் மணம் கமழும் ஒளி பொருந்திய நெற்றியை உடைய உன்னை உன் தலைவர் கூடவே அழைத்துச் செல்வார்.


விளக்கம்: வலஞ்சுரி மரம் என்பது கடம்ப மரத்தைக் குறிக்கிறது. கிளைகளுக்கு இயற்கையாக மணம் இருப்பதில்லை. கடம்ப மலர்களால் அந்த மரத்துக் கிளைகளும் மணம் பெறுகின்றன. அதுபோல், தலைவிக்குத் உறுதுணையாக இருக்கும் தலைவன் தலைவியினால்தான் சிறப்படைகிறான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment