Showing posts with label 21. முல்லை - தலைவி கூற்று. Show all posts
Showing posts with label 21. முல்லை - தலைவி கூற்று. Show all posts

Monday, May 18, 2015

21. முல்லை - தலைவி கூற்று

21. முல்லை - தலைவி கூற்று

பாடியவர்: ஓதலாந்தையார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 12 –இல் காண்க.
பாடலின் பின்னணி: கார்காலம் ஆரம்பிக்குமுன் தான் திரும்பிவருவதாகக் கூறிச் சென்ற தலைவன்  கார்காலம் தொடங்கிய பிறகும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துவாள் என்று தோழி எண்ணுகிறாள். தலைவியோ, ”இந்தக் காட்டைப் பார்த்தால் கார்காலம் வந்துவிட்டது போல் தோன்றுகிறது. ஆனால், நான் அதை நம்ப மாட்டேன். இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்திருந்தால், என் தலைவர் இந்நேரம் திரும்பி வந்திருப்பார். அவர் பொய் கூறாதவர்.“ என்று தோழியிடம் கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

வண்டுபடத் ததைந்த கொடியிணர் இடையிடுபு
பொன்செய் புனையிழை கட்டிய மகளிர்
கதுப்பிற் றோன்றும் புதுப்பூங் கொன்றை
கானங் காரெனக் கூறினும்
யானோ தேரேன் அவர் பொய்வழங் கலரே.

அருஞ்சொற்பொருள்: ததைதல் = செறிதல்; கொடி = நீளம்; இணர் = கொத்து; இடுபு = இட்டு; புனைதல் = அணிதல்; கதுப்பு = கூந்தல்; கொன்றை – இங்கு சரக்கொன்றையைக் குறிக்கிறது; கானம் =காடு; கார் = கார் காலம் ; தேர்தல் = தெளிதல்; வழங்குதல் = சொல்லுதல்.

உரை: வண்டுகள் தேன் உண்ணுதற்கு வருமாறு, தழைகளின் இடையே நீண்ட, புதிய  சரக்கொன்றைப் பூங்கொத்துகள் செறிந்து மலர்ந்து,  உள்ளன. அவை பொன்னால் செய்த அணிகலன்களைத் தங்கள் தலைகளில் கோத்துக் கட்டிய, மகளிருடைய கூந்தலைப் போலத் தோன்றுகின்றன. புதிய பூக்களை உடைய கொன்றை மரங்களை உடைய காடானது, இது கார்ப் பருவமென்று தெரிவித்தாலும்,  நான் அதை நம்பமாட்டேன்.  ஏனென்றால், என்  தலைவர் பொய் கூறாதவர்.


விளக்கம்: கொன்றை மலர்கள் நீண்ட கொத்துக்களாகக் கார்காலத்தில் மலரும் பூக்கள். இப்பாடலில் கொன்றை மரத்திற்கு மகளிரும், தழைக்கு அவர் கூந்தலும், பூங்கொத்திற்குப் பொன்னாலான அணிகலன்களும் உவமையாகக் கூறப்பட்டுள்ளன.