Sunday, May 21, 2017

344. தலைவி கூற்று

344. தலைவி கூற்று

பாடியவர்: குறுங்குடி மருதனார்.
திணை: முல்லை.
கூற்று : பிரிவிடை வற்புறுத்துந் தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். குளிர் மிகுந்த பனிக்காலம் வந்துவிட்டது. தலைவன் இன்னும் வரவில்லை. ஒருநாள், மாலை நேரத்தில் தலைவனைப் பற்றிய சிந்தனையோடு, மிகுந்த வருத்தத்தோடு தலைவி இருக்கிறாள். அவளைக் கண்ட தோழி, “தலைவர் விரைவில் வந்துவிடுவார். அவரை நினைத்து, நீ இப்படி வருந்துவது முறையன்றுஎன்று தலைவிக்கு அறிவுரை கூறுகிறாள். தோழியின் கூற்றுக்குத் தலைவியின் மறுமொழியாக இப்பாடல் அமைந்துள்ளது.

நோற்றோர் மன்ற தோழி தண்ணெனத்
தூற்றுந் துவலைப் பனிக்கடுந் திங்கட்
புலம்பயி ரருந்த அண்ண லேற்றொடு
நிலந்தூங் கணல வீங்குமுலைச் செருத்தல்
பால்வார்பு குழவி யுள்ளி நிரையிறந்
தூர்வயிற் பெயரும் புன்கண் மாலை
அரும்பெறற் பொருட்பிணிப் போகிப்
பிரிந்துறை காதலர் வரக்காண் போரே.

கொண்டு கூட்டு: தோழி! தண்ணெனத் தூற்றும் துவலைப் பனிக்கடுந் திங்கள்புலம்பயிர் அருந்த அண்ணல் ஏற்றொடு நிலம் தூங்கு அணல வீங்குமுலைச் செருத்தல் பால் வார்பு, குழவி உள்ளி, நிரை இறந்து, ஊர்வயின் பெயரும் புன்கண் மாலைஅரும்பெறல் பொருள்பிணிப் போகிபிரிந்து உறை காதலர் வரக் காண்போர் மன்ற நோற்றோர்!
அருஞ்சொற்பொருள்: நோற்றோர் = தவம் செய்தோர்; மன்ற = நிச்சயமாக; தண் = குளிர்ச்சி; துவலை = நீர்த் துளிகள்; திங்கள் = மாதம்; அருந்துதல் = உண்ணுதல்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; ஏறு = விலங்குகளின் ஆண் (இங்கு, காளையைக் குறிக்கிறது); தூங்குதல் = தொங்குதல்; அணல் = அலைதாடி (பசுவின் கழுத்தில் நீளமாகத் தொங்குகின்ற சதை); செருத்தல் = எருமை, பசு இவற்றின் மடி (இங்கு பசுவிற்கு ஆகுபெயராக வந்தது.); வார்தல் = ஒழுகுதல்; குழவி = கன்று; நிரை = பசுக்கூட்டம்; இறந்து = நீங்கி; புன்கண் = துன்பம்.
உரை: தோழி! குளிர்ச்சி உண்டாகும்படி,  வீசுகின்ற பனித்துளிகளையுடைய  கடுமையான குளிருள்ள மாதத்தில், மேய்ச்சல் நிலத்தில் உள்ள பயிரைத் தின்று, தலைமை பொருந்திய எருதோடு,  நிலத்தளவு தொங்கும் அலைதாடியோடு, பால் ஒழுகும் பருத்த முலைக்காம்புடன் கூடிய மடியையுடைய பசுக்கள்,  தம் கன்றுகளை நினைத்து, தம்மோடு சேர்ந்து மேயும் ஆநிரைகளைவிட்டு  நீங்கி, ஊரினிடத்தே,  மீண்டு வருகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலத்தில், பெறுதற்கரிய பொருள்மேல் பற்றுக் கொண்டு,  தம்மை முன்பு பிரிந்து சென்ற தலைவர்கள்,  திரும்பிவருவதைக் காணும் மகளிர், நிச்சயமாகத் தவம் செய்தவராவர்.

சிறப்புக் குறிப்பு: பசுக்கள் தம் கன்றுகளை நினைத்து மாலைநேரத்தில் ஊருக்குத் திரும்பிவருவதைக் கண்ட தலைவி, தன்னை நினைத்துத் தலைவர் இன்னும் வரவில்லையே என்று கூறுவது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமம் ஆகும்

No comments:

Post a Comment