Sunday, May 21, 2017

348.தோழி கூற்று

348.தோழி கூற்று

பாடியவர்: மாவளத்தனார்.
திணை: பாலை.
கூற்று : செலவுக்குறிப்பறிந்து வேறுபட்ட கிழத்தியைத் தோழி வற்புறீஇயது.
கூற்று விளக்கம்: பொருள் தேடுவதற்காகத் தலைவன் தன்னைவிட்டுப் பிரியப் போகிறான் என்பதைத் தலைவி உணர்ந்தாள். “அவர் பிரிந்து போவாரயின் உன் துன்பத்தைக் காணாது செல்வாரோ? அவர் உன்னைவிட்டுப் பிரிந்து செல்ல மாட்டார்என்று கூறித் தோழி தலைவியை ஆற்றுவிக்கிறாள்.

தாமே செல்ப வாயிற் கானத்துப்
புலந்தேர் யானைக் கோட்டிடை யொழிந்த
சிறுவீ முல்லைக் கொம்பிற் றாஅய்
இதழழிந் தூறுங் கண்பனி மதரெழிற்
பூணக வனமுலை நனைத்தலும்
காணார் கொல்லோ மாணிழை நமரே.

கொண்டு கூட்டு: மாண்இழை! நமர் தாமே செல்பவாயின், கானத்துப் புலம் தேர் யானைக் கோட்டிடை ஒழிந்தசிறு வீ முல்லைக் கொம்பின் இதழ் அழிந்து ஊறும் கண்பனி தாஅய்,
மதர் எழில் பூண் அக வனமுலை நனைத்தலும் காணார்கொல்?
அருஞ்சொற்பொருள்:; கானம் = காடு; புலம் = மேயும் இடம்; கோடு = கொம்பு; ஒழிதல் = தங்குதல்;  வீ = மலரிதழ்; தாஅய் = பரவி; இதழ் = கண்ணிமை; அழிந்து = கடந்து; பனி = துளி; மதர் = செருக்கு; அகம் = மார்பு; வனம் = அழகு; மாணிழை = மாண்+இழை = சிறந்த அணிகலன்களை அணிந்த பெண் (தலைவி); நமர் = நம் தலைவர்.
உரை: சிறந்த அணிகலன்களை அணிந்தவளே (தலைவி)! நம் தலைவர்,  நம்மைவிட்டுத் தாம் மட்டும் பிரிந்து செல்வாராயின், காட்டில், மேயும் இடத்தைத் தேடிச் செல்லும் யானையின் கொம்பில் முறிந்து ஒட்டிகொண்டிருக்கும் சிறிய மலரிதழ்களையுடைய முல்லைக் கொடியின் கிளைகளைப் போல, கண்ணிமையைக் கடந்து ஊறுகின்ற கண்ணீர்த்துளிகள் பரவி, செருக்குடன் கூடிய அழகையுடைய, அணிகலன்களைத் தன்னிடத்தே கொண்டுள்ள, உன் மார்பிலே உள்ள அழகிய முலைகளை நனைப்பதைக் காணாரோ?

சிறப்புக் குறிப்பு: யானையின் கொம்பில் உள்ள முல்லைக் கொடியில் இருந்து, சிறிய முல்லை மலர்கள் கீழே உதிர்வதைப் போல், தலைவியின் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வீழ்ந்தன. முல்லைக் கொடிகளை அழித்துத் தின்ற யானையின் கொம்பில் உள்ள முல்லைக்கொடியின் நிலையும் தலைவியின் நிலையும் ஒன்றேயாகும். அந்த முல்லைக்கொடி எந்நேரமும் யானையின் வாயில் புகலாம். அதுபோல், தலைவன் பிரிந்தால், தலைவியின் உயிர் எக்கணமும் பிரியலாம் என்ற கருத்தும் இப்பாடலில் காணப்படுகிறது

No comments:

Post a Comment