Sunday, April 16, 2017

338. தோழி கூற்று

338. தோழி கூற்று

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைத் தோழி வற்புறுத்தியது.
கூற்று விளக்கம்: தலைவனைப் பிரிந்து தலைவி வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தைப் போக்குவதற்காகத் தோழி எவ்வளவோ இனியமொழிகளைக் கூறி அவளை ஆற்றுவிக்க முயற்சி செய்கிறாள். ஆனால், அவள் முயற்சி பலனளிக்கவில்லை. தலைவன் பின்பனிக் காலத்தில் வருவதாகக் கூறிச் சென்றான். அவன் சொன்ன சொல் தவறாதவன். ஆகவே, அவன் கண்டிப்பாக விரைவில் வந்துவிடுவான் என்ற நம்பிக்கையோடு, “தலைவன் வந்துவிட்டான்.” என்று தலைவியிடம் தோழி கூறுகிறாள்.

திரிமருப் பிரலை யண்ணல் நல்லேறு
அரிமடப் பிணையோ டல்குநிழ லசைஇ
வீததை வியலரில் துஞ்சிப் பொழுதுசெலச்
செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப்
பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம்
வந்தன்று பெருவிறல் தேரே பணைத்தோள்
விளங்குநக ரடங்கிய கற்பின்
நலங்கே ழரிவை புலம்பசா விடவே. 

கொண்டு கூட்டு: பணைத்தோள் விளங்குநகர் அடங்கிய கற்பின் நலங்கேழ் அரிவை புலம்பு அசாவிட திரிமருப்பு இரலை அண்ணல் நல்ஏறு
அரிமடப் பிணையோடு அல்கு நிழல் அசைஇவீ ததை வியல் அரில் துஞ்சிப் பொழுது செல, செழும்பயறு கறிக்கும் புன்கண் மாலைப் பின்பனிக் கடைநாள் தண்பனி அச்சிரம் பெருவிறல் தேர் வந்தன்று.

அருஞ்சொற்பொருள்: திரி = முறுக்கினது; மருப்பு = கொம்பு; திரிமருப்பு = முறுக்கிய கொம்பு; இரலை = ஆண்மான்; அண்ணல் = தலைமைத் தன்மை பொருந்திய; மடம் = இளமை; பிணை = பெண்மான்; அரி = அழகு; அல்குதல் = தங்குதல்; அசைஇ = அசைந்து; வீ = மலர்; ததை = நெருங்கிய; வியல் =அகன்ற; அரில் = பிணங்கிய தூறு (கொடிகள் பின்னிக் கிடக்கும் புதர்); துஞ்சுதல் = தூங்குதல்; கறித்தல் = கடித்துத் தின்னுதல்; புன்கண் = துன்பம்; கடைநாள் = கடையாமம்; தண் = குளிர்ச்சி; அச்சிரம் = முன்பனிக் காலம் (இங்கு பின்பனிக் காலத்தைக் குறிக்கிறது); விறல் = வெற்றி; பணை = மூங்கில்; நகர் = வீடு; நலம் = அழகு; கேழ் = பொருந்திய (கெழு என்பது நீண்டு கேழ் என்று வந்தது); அரிவை = 20 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண் ( இங்கு, தலைவியைக் குறிக்கிறது); புலம்பு = தனிமை; அசாவுதல் = தளர்தல்.
உரை:  மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய தலைவியே! விளங்கும் இல்லத்தில், அடங்கிக் கிடக்கும் கற்புடையவளே! அழகு பொருந்திய தலைவியே! உன் தனிமைத் துன்பம் நீங்குமாறு,  முறுக்கிய  கொம்புகளை உடைய, தலைமைத் தன்மை பொருந்திய நல்ல ஆண்மான், அழகும் இளமையும் உடைய  பெண்மானோடு, தாம் தங்குதற்குரிய நிழலுள்ள இடத்தில் தங்கி,  மலர்கள் நெருங்கிய,  கொடிகள் பின்னிக் கிடக்கும் அகன்ற புதரில் படுத்து உறங்கி, பொழுது கழிந்ததைக் கண்டு,செழுமையான பயற்றம் பயிரைக் கடித்துத் தின்னுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தையும்,  பின்பனி பெய்யும் கடைச்சாமத்தையும், குளிர்ந்த பனியையும் உடைய பின்பனிக் காலத்தில், மிகுந்த  வெற்றியையுடைய தலைவனது தேர் வந்தது.

சிறப்புக் குறிப்பு: ”இரலையும் பிணையும் துஞ்சிப் பயறு கறிக்கும்என்றது, தலைவியும் தலைவனும் இனிமேல் பிரிவின்றி இன்பமாக வாழ்வார்கள் என்பதைக் குறிக்கிறது.     தலைவனின் தேர் வராவிட்டாலும், விரைவில் வந்துவிடும் என்ற துணிவினால், தோழி வந்ததுஎன்று இறந்த காலத்தில் கூறினாள்.

No comments:

Post a Comment