Sunday, April 16, 2017

335. தோழி கூற்று

335. தோழி கூற்று
பாடியவர்: இருந்தையூர்க் கொற்றன் புலவனார்.
திணை: குறிஞ்சி.
கூற்று : இரவுக்குறி நயவாமைத் தோழி செறிப்பு அறிவுறீஇயது. (நயவாமை = விரும்பாதபடி; அறிவுறீஇயது = அறிவுறுத்தியது)
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் அடிக்கடி பகலில் சந்தித்துப் பழகிவந்தார்கள். தலைவியை வீட்டில் காவலில் வைப்பதாகத் தலைவியின் தாய் முடிவு செய்தாள். அதை அறிந்த தோழி, “தலைவியை அவள் தாய் காவலில் வைக்கப் போகிறாள். இனி நீ அவளைச் சந்திக்க முடியாது.” என்று தலைவனிடம் கூறுகிறாள். தலைவன், “ நான் இரவிலே, அவள் இருக்கும் ஊருக்கு வந்து அவளைச் சந்திப்பேன்.” என்று கூறுகிறான். அதற்குத் தோழி, “அவள் இருக்கும் ஊர் மலைகளின் நடுவே உள்ளது. அங்கு இரவில் வந்தால் பல இன்னல்கள் நேரிடலாம். மற்றும், அவளுடைய தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, இரவிலே சந்திப்பதும் இயலாத செயல்.” என்று கூறுகிறாள்.

நிரைவளை முன்கை நேரிழை மகளிர்
இருங்கல் வியலறைச் செந்தினை பரப்பிச்
சுனைபாய் சோர்விடை நோக்கிச் சினையிழிந்து
பைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்பிடை நண்ணி யதுவே வார்கோல்
வல்விற் கானவர் தங்கைப்
பெருந்தோட் கொடிச்சி யிருந்த வூரே. 

கொண்டு கூட்டு: வார்கோல்  வல்வில் கானவர் தங்கைபெருந்தோள் கொடிச்சி இருந்த ஊர்நிரைவளை முன்கை நேரிழை மகளிர்,  இருங்கல் வியல் அறைச் செந்தினை பரப்பி,
சுனைபாய் சோர்வு இடைநோக்கிச் சினை இழிந்துபைங்கண் மந்தி பார்ப்போடு கவரும்
வெற்புஇடை நண்ணியது.

அருஞ்சொற்பொருள்: நிரை = வரிசை; நேரிழை = தகுதியான அணிகலன்களை அணிந்த பெண்; இரும் = கரிய; கல் = மலை; வியல் = அகன்ற; அறை = பாறை; சுனை = நீர்நிலை; சோர்வு இடை = சோர்ந்திருக்கும் சமயம்; சினை = கிளை; பைங்கண் = பசுமையான கண்; மந்தி = பெண்குரங்கு; பார்ப்பு = குட்டி; வெற்பு = மலை; நண்ணியது = பொருந்தியது; வார் = நீண்ட; கோல் = அம்பு; கானவர் = வேடர்; கொடிச்சி = குறிஞ்சி நிலத்துப்பெண்.

உரை: நீண்ட அம்புகளையும், வலிய வில்லையும் உடைய வேடர்களின் தங்கையாகிய, பெரிய தோளையுடைய குறிஞ்சிநிலப் பெண்ணாகிய தலைவி வாழும் ஊர், வரிசையாக  முன்கையில் வளையல்களையும், பொருத்தமான (அழகான) அணிகலன்களையும் அணிந்த மகளிர், கருமையான மலையிலுள்ள அகன்ற பாறையில், சிவந்த தினையைப் பரப்பி, நீர்நிலையில் இறங்கி நீராடுகின்ற, காவல் இல்லாத சமயத்தைப் பார்த்து, மரக்கிளையிலிருந்து  இறங்கி, பசுமையான கண்களையுடைய பெண் குரங்குகள், தம் குட்டிகளோடு அத்தினையைக் கவர்ந்து செல்லுகின்ற மலையிடத்தே அமைந்திருக்கிறது.


சிறப்புக் குறிப்பு: தலைவியின் ஊர் மலைகளின் இடையே உள்ளதால், தலைவன் இரவில் வருவது எளிதான செயலன்று. தலைவியின் தமையன்மார் வலிய வில்லை உடையவர்கள். ஆகவே, தலைவன் தலைவியை இரவில் சந்திப்பது இயலாத செயல் என்று தோழி கூறுவது, தலைவன் தலைவியை விரைவில் திருமணம் செய்துகொள்வதே சிறந்தது என்று அவள் மறைமுகமாக அவனுக்குக் உணர்த்துவதைக் குறிக்கிறது. பாறையில் உலர்த்தப்பட்டிருக்கும் தினையைக் காவல் இல்லாத சமயத்தில் குரங்குகளும் குட்டிகளும் கவர்ந்து செல்லும் என்றது, தலைவியை வேறு எவராவது திருமணம் செய்துகொள்ளக்கூடும் என்பதைக் குறிக்கிறது.

No comments:

Post a Comment