Sunday, April 2, 2017

333. தோழி கூற்று

333. தோழி கூற்று
பாடியவர்: உழுந்தினைம் புலவன்.
திணை: குறிஞ்சி.
கூற்று : அறத்தொடு நிற்பல்எனக் கிழத்திக்குத் தோழி உரைத்தது.
கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்துவந்தார்கள். சில நாட்களுக்குமுன், தலைவி, வீட்டில் காவலில் வைக்கப்பட்டாள். அதனால்தலைவன் அவளைக் காணமுடியவில்லை. தலைவன் தன்னை மணந்துகொள்வதற்காக, தன் வீட்டுக்குப் பெண்கேட்க வருவான் என்று தலைவி எதிர்பார்க்கிறாள். ஆனால், தலைவியின் வீட்டார் தன்னை ஏற்றுக் கொள்வார்களோ மாட்டார்களோ என்ற மனக் குழப்பத்தினால், தலவன் தலைவியைப் பெண்கேட்க வரவில்லை. தலைவன் தான் செய்ய வேண்டிய செயலைச் செய்யாததால், தலைவி மிகுந்த வருத்தமுற்றாள். தலைவியின் வருத்தத்தை அறிந்த தோழி, “ நமது களவொழுக்கத்தை நாம் நம் தாய்மாரிடம் துணிந்து  வெளிப்படுத்தினால் என்ன?” என்று கேட்கிறாள். களவொழுக்கத்தை வெளிப்படுத்தினால், தலைவியின் உறவினர்கள் தலைவனை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்ற நோக்கத்தோடும் தோழி இவ்வாறு தலைவியிடம் கூறுகிறாள்.

குறும்படைப் பகழிக் கொடுவிற் கானவன்
புனமுண்டு கடிந்த பைங்கண் யானை
நறுந்தழை மகளிர் ஓப்புங் கிள்ளையொடு
குறும்பொறைக் கணவுங் குன்ற நாடன்
பணிக்குறை வருத்தம் வீடத்
துணியின் எவனோ தோழிநம் மறையே. 

கொண்டு கூட்டு: தோழி! குறும்படைப் பகழி, கொடுவில் கானவன்புனம் உண்டு கடிந்த பைங்கண் யானை நறுந்தழை மகளிர் ஓப்பும் கிள்ளையொடு குறும்பொறைக்கு அணவும் குன்ற நாடன்பணிக்குறை வருத்தம் வீட, நம் மறை துணியின் எவன்

அருஞ்சொற்பொருள்: படை = படைக்கலம்; பகழிஅம்பு; கொடுவில் = வளைந்த வில்; கானவன் = வேட்டுவன்; கடிதல் = வெருட்டுதல்; பைங்கண் = பசுமையான கண்; கிள்ளை = கிளி; பொறை = பாறை; அணவுதல் = அண்ணாந்து பார்த்தல்; பணி = செயல் (இங்கு, மணந்துகொள்வதைக் குறிக்கிறது); வீடல் = விடுதல்; மறை = மறைக்கப் பட்டது (இங்கு, களவொழுக்கத்தைக் குறிக்கிறது). எவனோ என்பதில் உள்ள ஓகாரமும், மறையே என்பதில் உள்ள ஏகாரமும் அசைநிலைகள்.
உரை: தோழி! குறிய படையாகிய அம்பையும் வளைந்த வில்லையும் உடைய வேட்டுவன், தினைப்புனத்தில் தினையை உண்ட,  பசிய கண்களையுடைய யானையை வெருட்டுகிறான்.  மணமுளள  தழையுடையை அணிந்த மகளிர்,  தினைப் புனத்தில் படிந்துள்ள கிளிகளை வெருட்டுகின்றனர். அந்த யானை, கிளிகளோடு சேர்ந்து, குறுகிய பாறைகள் இருக்கும் இடத்திற்குச் செல்வதற்காக அண்ணாந்து பார்க்கிறது. தலைவன் அத்தகைய  மலைநாட்டை உடையவன்தலைவன் உன்னை மணந்துகொள்ளும் செயல் நிறைவேறாமல், குறையாக இருப்பதால் வரும் துன்பம் நீங்கும்படி,  நம்முடைய களவொழுக்கத்தைப் பற்றிய செய்தியைத் துணிந்து வெளிப்படுத்தினால் என்ன?
சிறப்புக் குறிப்பு: தினை காப்பவரால் யானையும் கிளியும் வெருட்டப்படும் நாடு என்றது செவிலித்தாய் மற்றும் தாய் முதலியோரால் தலைவி காவலால் வைக்கப்பட்டதால், தலைவன் தான் விரும்பிய இன்பத்தைப் பெறாது வருந்தும்படி வெருட்டப்பட்டான் என்பதைக் குறிக்கும் உள்ளுறை உவமமாகும்.

பணிக்குறை வருத்தம்என்றது தலைவன் பெண்கேட்க வராமல் இருப்பதால் வரும் வருத்தத்தைக் குறிக்கிறது. அறத்தொடு நின்றால் உண்மையையுணர்ந்து பெற்றோர்களும் உறவினர்களும் தலைவனை ஏற்றுக் கொள்வார்கள். அதனால் தலைவன் செய்ய வேண்டிய செயல் நிறைவுபெறும். தலைவியின் வருத்தமும் தீரும்

No comments:

Post a Comment