Sunday, April 2, 2017

328. தோழி கூற்று

328. தோழி கூற்று
பாடியவர்: பரணர்.
திணை: நெய்தல்.
கூற்று : வரைவிடை வேறுபடும் கிழத்தியை, அவர் வரையும் நாள் அணித்தெனவும், அலரஞ்சலெனவும் கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்குச் சென்றிருக்கிறான். அவனுடைய பிரிவைப் பொறுத்துக் கொள்ளமுடியாமல் தலைவி வருந்துகிறாள். அதைக் கண்ட தோழி, “ஊரில் உங்கள் இருவரையும் பற்றி அலர் மிகுதி ஆயிற்று. அதனால், நல்லதே நடக்கும். உன் சுற்றத்தார் அனைவரும் தலைவனைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவனை உனக்குக் ஏற்ற கணவனாகக் கருதி, விரைவில் உன் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வர். ஆகவே, இந்த அலரைக் கண்டு  நீ அஞ்ச வேண்டியதில்லை.” என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

சிறுவீ ஞாழல் வேரளைப் பள்ளி
அலவன் சிறுமனை சிதையப் புணரி
குணில்வாய் முரசின் இரங்குந் துறைவன்
நல்கிய நாள்தவச் சிலவே அலரே
வில்கெழு தானை விச்சியர் பெருமகன்
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்
புலிநோக் குறழ்நிலை கண்ட
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

கொண்டு கூட்டு: சிறுவீ ஞாழல் வேர் அளைப் பள்ளிஅலவன் சிறுமனை சிதைய, புணரி
குணில் வாய் முரசின் இயங்குந் துறைவன் நல்கிய நாள்தவச் சில. அலர் வில்கெழு தானை விச்சியர் பெருமகன்வேந்தரொடு பொருத ஞான்றை,  பாணர் புலிநோக்கு உறழ்நிலை கண்டகலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே. 

அருஞ்சொற்பொருள்: வீ = பூ; ஞாழல் = ஒரு வகை மரம்; அளை = வளை; பள்ளி = இடம்; அலவன் = நண்டு; சிதைத்தல் = அழித்தல்; புணரி = அலை; குணில் = குறுந்தடி; இரங்குதல் = ஒலித்தல்; நல்குதல் = அன்பும் அருளும் காட்டுதல்; தவ = மிக; ஞான்று = பொழுது; உறழ்தல் = ஒத்தல்; கலி = ஆரவாரம்; ஆர்ப்பு = முழக்கம்.    சிலவே என்பதில் உள்ள ஏகாரம் பிரிநிலைஅலரே, பெரிதே என்பவற்றில் உள்ள ஏகாரங்கள் அசை நிலை.
உரை: சிறிய மலரையுடைய ஞாழல் மரத்தின் வேரில் உள்ள வளையிடமாகிய நண்டின் சிறிய வீடு அழியும்படிக் கடலலைகள் மோதும். அவ்வலைகள் குறுந்தடியால் அடிக்கப்படும் முரசைப் போல முழங்கும் கடற்றுறையையுடைய தலைவன், உன்னிடம் அன்போடும் அருளோடும் பழகிய  நாட்கள் மிகவும் சிலவேயாகும். விற்படையோடு கூடிய விச்சியர்களுக்குத் தலைவன், அரசர்களோடு போர் செய்த காலத்தில், பாணர்களது புலியைப் போன்ற பார்வையைக் கண்டு,  குறும்பூரில் உள்ளவர்கள் மிகுந்த ஆரவாரம் செய்தார்கள். அவர்கள் செய்த ஆரவாரத்தைவிட ஊராரின் பழிச்சொற்களால் உண்டாகிய  முழக்கம் பெரிதாக உள்ளது.
சிறப்புக் குறிப்பு: போர் நடக்கும் இடத்தில் உள்ள மக்கள் ஆரவாரம் செய்தாலும், முடிவில் போரில் ஒருவர் வெற்றி பெறுவதைப்போல், ஊரார் அலர் தூற்றினாலும், தலைவிக்கும் தலைவனுக்கும் திருமணம் விரைவில் நடைபெறும் என்று தோழி குறிப்பாகக் கூறுகிறாள்.
 புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும் விச்சிக்கோன் என்ற ஓரு குறுநிலமன்னனைப் பற்றிய செய்தி காணப்படுகிறது. இப்பாடலில் குறிப்பிடப்படும் விச்சியர் பெருமகன் அவனாக இருக்கலாம் என்று உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

பாணர் போர்க்களத்திற்குச் சென்று, போரில் வெற்றி பெற்ற  மன்னனை களவழிப்பா, பரணி முதலிய பாடல்களால் புகழ்ந்து பாடுதல் மரபு. போர் முடியும்வரை போரில் யார் வெற்றி பெறுவார் என்பதைப் பாணர்கள் அறியாததால், அவர்கள் ஒதுங்கி இருந்து, இருதரத்தாரும் போர் செய்வதைக் காண்பர். புலி மற்ற விலங்குகளை வேட்டையாடும்பொழுது பதுங்கி இருந்து, பார்த்துத் தக்க சமயத்தில் பாய்வதைப்போல், பாணர்கள் ஒதுங்கி இருந்து போரில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பது வழக்கம். இங்கு, புலியின் பார்வை பாணர்களின் பார்வைக்கு உவமை.

No comments:

Post a Comment