Sunday, April 2, 2017

331. தோழி கூற்று

331. தோழி கூற்று

பாடியவர்: வாடாப் பிரபந்தனார்.
திணை: பாலை.
கூற்று : செலவுக் குறிப்பறிந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.
கூற்று விளக்கம்:  தலைவன் பொருள் தேடுவதற்காகத் தன்னைவிட்டுப் பிரியத் திட்டமிட்டிருப்பதை அறிந்த தலைவி  வருத்தத்தோடு இருக்கிறாள். தலைவியின் வருத்தத்தின் காரணத்தை  அறிந்த தோழி, “ பாலை நிலம் மிகவும் கொடுமையானது. அது கடத்தற்கரியது. அதனால், தலைவர் உன்னைவிட்டுப் பிரிய மாட்டார். நீ வருந்தாதே.” என்று தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

நெடுங்கழை திரங்கிய நீரி லாரிடை
ஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்று
கொடுஞ்சிலை மறவர் கடறுகூட் டுண்ணும்
கடுங்கண் யானைக் கான நீந்தி
இறப்பர்கொல் வாழி தோழி நறுவடிப்
பைங்கால் மாஅத் தந்தளி ரன்ன
நன்மா மேனி பசப்ப
நம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்கே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! நறுவடிப் பைங்கால் மாஅத்து அம் தளிர் அன்ன நன்மா மேனி பசப்பநம்மினுஞ் சிறந்த அரும்பொருள் தரற்குநெடுங்கழை திரங்கிய நீரில் ஆரிடைஆறுசெல் வம்பலர் தொலைய மாறுநின்றுகொடுஞ்சிலை மறவர் கடறு கூட்டுண்ணும்கடுங்கண் யானைக் கான நீந்திஇறப்பர் கொல்?

அருஞ்சொற்பொருள்: கழை = மூங்கில்; திரங்குதல் = உலர்தல்; ஆர் = அரிய; ஆறு = வழி; வம்பலர் = புதியவர்கள் (வழிப்போக்கர்கள்); மாறுநின்று = எதிர் நின்று; சிலை = வில்; மறவர் = பாலை நிலத்து மக்கள்; கடறு = காடு; கூட்டுண்ணல் = கொள்ளையடித்துக் கூடி உண்ணுதல்; கடுங்கண் = கொடுமை; கானம் = காடு; நீந்தி = கடந்து; இறத்தல் = நீங்குதல் (பிரிதல்); நறு = மணமுள்ள; வடி = வடு மாங்காய்; பைங்கால் = பசுமையான அடிப்பக்கம்; மாத்து = மாமரத்தின்; மாமேனி = மாமை நிறம்; பசப்ப = பசலையுற.
உரை: தோழி, நீ வாழ்க! நல்ல மணமுள்ள வடுவையும், பசுமையான அடிப்பக்கத்தையும் உடைய மாமரத்தின் அழகிய தளிரைப் போன்ற நல்ல மாமை நிறமுள்ள மேனி பசலை அடையுமாறு, நம்மைக் காட்டிலும் அவருக்குச் சிறந்ததாகத் தோன்றுகின்ற பொருளைக் கொண்டுவரும் பொருட்டு, நெடிய மூங்கில் உலர்ந்து வாடிய,  நீர் இல்லாத, கடத்தற்கரிய இடத்தில், வளைந்த வில்லையுடைய மறவர்கள், எதிர்த்து நின்று, வழிப்போக்கர்கள் அழியும்படி, அவர்களிடம் உள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கூடியுண்ணும், கொடிய  யானைகள் திரியும் காட்டைக் கடந்து, தலைவர் பிரிந்து செல்வாரோ? செல்ல மாட்டார்.

சிறப்புக் குறிப்பு: தலைவர் கடந்துசெல்ல எண்ணிய பாலைநிலம் கொடிய மறவர்கள் வாழும் இடம். அதனால், தலைவர் அங்குச் செல்ல மாட்டார் என்று எண்ணிய தோழி, பாலை நிலத்தின் கொடுமையை விரிவாகக் கூறுகிறாள். கூட்டுண்ணுதல் என்பது  வழிப்போக்கர்களிடம் உள்ள பொருள்களை கொள்ளை அடிப்பதைக் குறிக்கிறது.  

No comments:

Post a Comment