Sunday, April 2, 2017

330. தலைவி கூற்று

330.  தலைவி கூற்று
பாடியவர்: கழார்க் கீரனெயிற்றியனார்.
திணை: மருதம்.
கூற்று : பிரிவிடை வேறுபட்ட கிழத்தி தோழிக்குச் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவி, பிரிவைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வருந்துகிறாள், “இந்த மாலை நேரத்தில் நான் துன்பத்தால் தனிமையில் வாடுகிறேன். தலைவர் சென்ற நாட்டில், இந்த மாலைக்காலமும், தனிமையும் இல்லையோ?” என்று தலைவி தோழியிடம் கேட்கிறாள்.

நலத்தகைப் புலைத்தி பசைதோய்த் தெடுத்துத்
தலைப்புடைப் போக்கித் தண்கயத் திட்ட
நீரிற் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்
பேரிலைப் பகன்றைப் பொதியவிழ் வான்பூ
இன்கடுங் கள்ளின் மணமில கமழும்
புன்கண் மாலையும் புலம்பும்
இன்றுகொல் தோழியவர் சென்ற நாட்டே.

கொண்டு கூட்டு: தோழி! நலத்தகைப் புலைத்தி, பசைதோய்த்து எடுத்துத் தலைப்புடைப் போக்கித் தண்கயத்து இட்ட நீரில் பிரியாப் பரூஉத்திரி கடுக்கும்பேரிலைப் பகன்றைப் பொதி அவிழ் வான்பூஇன்கடுங் கள்ளின் மணம்இல கமழும் புன்கண் மாலையும் புலம்பும்அவர் சென்ற நாட்டு இன்றுகொல்?

அருஞ்சொற்பொருள்: நலம் = நற்குணம்; தகை = அழகு; புலைத்தி = வண்ணாத்தி; தலைப்புடை = முதல் துவைப்பு; தண் = குளிர்ந்த; கயம் = குளம்; பரூஉ = பருத்த; திரி = முறுக்கினது (இங்கு, முறுக்கிய ஆடையைக் குறிக்கிறது); கடுக்கும் = ஒக்கும்; பகன்றை = ஒருவகைக் கொடி; பொதி = தளை அவிழாத மொட்டு; வான்பூ = வெண்மையான பூ; புன்கண் = துன்பம்; புலம்பு = தனிமை.
உரை: தோழி! நற்குணமும் அழகுமுடைய வண்ணாத்தி, கஞ்சியிலே தோய்த்து எடுத்து, முதலில் துவைக்க வேண்டிய முறைப்படி துவைத்துவிட்டு, குளிர்ந்த நீர்நிலையில் போட்டபின், அந்நீரில், பிரியாத பருத்த ஆடையின் முறுக்கை ஒத்திருக்கின்ற, பெரிய இலைகளையுடைய பகன்றையின் முறுக்குடைய மொட்டுக்கள் விரிந்து மலர்ந்த வெண்மையான மலர், இனிய கடுமையான கள்ளைப் போல நல்ல மணமில்லாமல் நாறுகின்ற, துன்பத்தைத் தரும் மாலைக்காலமும், தனிமையும், தலைவர் நம்மைப் பிரிந்து சென்ற நாட்டில், இல்லையோ?
சிறப்புக் குறிப்பு: பகன்றையின் மலர்கள் வெண்ணிறமானவை. அதன் மலர்கள் நல்ல மணமில்லாதவை. பன்றையின் மொட்டு, முறுக்கிய துணியைப் போல் காட்சி அளிக்கும். முறுக்கிய துணி பகன்றை மொட்டுக்கு உவமை.

எனக்குத் துன்பதைத் தரும் மாலைக்காலமும் தனிமையும் தலைவர் சென்ற நாட்டில் இல்லை போலிருக்கிறது. அவை அங்கு இருந்தால், என்னைத் துன்புறுத்துவது போல் அவரையும் துன்புறுத்தும். அவர் அத் துன்பத்திலிருந்தும் தனிமையிலிருந்தும் நீங்க விரும்பிஇங்கு வந்திருப்பார்.” என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள்.

No comments:

Post a Comment