Sunday, November 6, 2016

267. தலைவன் கூற்று

267. தலைவன் கூற்று

பாடியவர்: காலெறி கடிகையார்.  இவர் இயற்பெயர் தெரியவில்லை. கரும்பின் அடிப்பாகம் மிகவும் இனிமையானதாக இருக்கும் என்பதைகரும்பின் காலெறி கடிகைக்கண் அயின்றன்னஎன்று இவர் இப் பாடலில் குறிப்பிட்டதால்  இவர்காலெறி கடிகையார்என்று அழைக்கப்பட்டார்இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: பாலை.
கூற்று : மேனின்றும் ஆடவர் பொருட்குப் பிரிந்தாராகலின் நாமும் பொருட்குப் பிரிதும் என்னும் நெஞ்சிற்கு, நாளது சின்மையும் இளமையது அருமையும் கூறிச் செலவழுங்கியது.

கூற்று விளக்கம்: முன்னோரைப் பின்பற்றித்  தானும் பொருள் தேடச் செல்ல வேண்டும் என்று தலைவன் நினைக்கிறான்பொருள் தேடச் செல்வதானால், தலைவியைப் பிரிந்து செல்ல வேண்டும். தலைவியோடு கூடியிருப்பதால் அவன் பெறும் இன்பத்தையும்  வாழ்க்கையின் நிலையாமையையும் எண்ணிப் பார்க்கிறான். பின்னர், தலைவன் தலைவியைப் பிரிந்து செல்வதைத் தவிர்க்கிறான்.

இருங்கண் ஞாலத் தீண்டுபயப் பெருவளம்
ஒருங்குடன் இயைவ தாயினுங் கரும்பின்
காலெறி கடிகைக் கண்ணயின் றன்ன
வாலெயி றூறிய வசையில் தீநீர்க்
கோலமை குறுந்தொடிக் குறுமக ளொழிய
ஆள்வினை மருங்கிற் பிரியார் நாளும்
உறன்முறை மரபிற் கூற்றத்
தறனில் கோணற் கறிந்திசி னோரே. 

கொண்டு கூட்டு: நாளும் உறல்முறை மரபின் கூற்றத்து, அறன்இல் கோள் நன்கு அறிந்திசினோர்இருங்கண் ஞாலத்து ஈண்டு பயப் பெருவளம் ஒருங்கு உடன் இயைவது ஆயினும், கரும்பின் கால் எறி கடிகைக் கண் அயின்றன்ன வால் எயிறு ஊறிய வசைஇல் தீநீர்க் கோல் அமை குறுந்தொடிக் குறுமகள் ஒழிய ஆள்வினை மருங்கில் பிரியார்.

அருஞ்சொற்பொருள்: இரு = பெரிய: ஞாலம் = உலகம்; பயம் = பயன்; இயைவது = கிடைப்பது; கால் = அடிப்பக்கம்; எறிதல் = வெட்டுதல்; கடிகை = துண்டு; அயில்தல் = உண்ணுதல்; வால் = தூய்மை; எயிறு = பல்; வசை = குற்றம்; தீ = இனிமை; கோல் = திரட்சி; குறுமகள் = இளம்பெண் (தலைவி); ஒழிதல் = நீங்குதல்; ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம்; நாளும் = நாள்தோறும்; உறல் = அடைதல் (வருதல்); கோள் = கொலை; அறனில் கோள் = இரக்கமின்றி உயிரைக் கொண்டு போவது; நற்கு = நன்கு; அறிந்திசினோர் = அறிந்தவர்கள்.

உரை: (நெஞ்சே!) நாள்தோறும், முறையாக வருகின்ற வழக்கத்தையுடைய கூற்றுவனின் இரக்கமில்லாத கொலைத்தொழிலை நன்றாக அறிந்தோர், பெரிய இடத்தை உடைய இவ்வுலகில் உள்ள பெரிய செல்வம் அனைத்தும் ஒருங்கே கிடைப்பதாயினும்,  கரும்பின் அடிப்பகுதியில் வெட்டிய துண்டத்தை உண்டதைப் போல் சுவையை உடைய,  தூய்மையான பற்களில் ஊறிய குற்றமற்ற, இனிமையான நீரையும், திரண்ட சிறிய வளையல்களயும் உடைய,  இளைய தலைவி தனித்து இருக்க, பொருள்தேடும்   முயற்சியின் பொருட்டு, தாம் மட்டும் பிரிந்து செல்ல மாட்டார்கள்.

சிறப்புக் குறிப்பு:    கூற்றுவனது கொலைத்தொழிலை அறிந்தவர், ”நாம் பிரிந்தால்  இருவருள் ஒருவர் உயிர் இழக்க நேரிடலாம். அதனால் மீண்டும் கூடுதல் இயலாது.“ என்று அஞ்சிப் பொருளுக்காகப் பிரிய மாட்டர்கள்.  இது வாழ்க்கை நிலையமையைப் பற்றிய சிந்தனையினால் பிரிவைத் தவிர்ப்பதைக் குறிக்கிறது. தலைவியின் வாயில் ஊறும் இனிய நீரை நினைத்து தலைவன் மகிழ்வது அவன் தலைவியிடம் பெறும் இன்பத்தைக் குறிக்கிறது. அவளைக் குறுமகள் என்று குறிப்பிட்டதால், தலைவி இளமைப் பருவம் உடையவளென்பது பெறப்படுகிறது.  இவ்வாறு தலைவன் கூறியது, ”இந்த இளமைப் பருவத்தில் நுகரும் இன்பத்தை இடையீடில்லாமல்  நுகராவிட்டால்  இது பின்னர் பெறுதற்கு அரியதாகும்என்னும் குறிப்பை உடையது. இது தலைவனின் இளமை நிலையாமையைப் பற்றிய சிந்தனையைக் குறிக்கிறது. ஆகவே, வாழ்க்கை நிலையாமை, தலைவியிடமிருந்து பெறும் இன்பத்தின் அருமை, இளமை நிலையாமை ஆகிய மூன்று சிந்தனைகளாலும் தலைவன் பிரிவைத் தவிர்த்தான்.


No comments:

Post a Comment