Sunday, November 6, 2016

265. தோழி கூற்று

265.  தோழி கூற்று

பாடியவர்: கருவூர்க்கதப் பிள்ளை. இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 64 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரையாது பிரிந்த இடத்து, அவர் பிரிந்தது நின்னை வரைந்து கோடல் காரணமாகத் தானெனத் தோழி தலைமகட்குக் கூறியது.

கூற்று விளக்கம்: தலைவனும் தலைவியும் களவொழுக்கத்தில் தங்கள் காதலைத் தொடர்ந்து வந்தார்கள். தலைவி யாரையோ அடிக்கடி சந்திக்கிற்றாள் என்பதை அறிந்த தாய்அவளை வீட்டிலில் காவலில் வைத்தாள். அதனால், தலைவனும் தலைவியும் சந்திக்க முடியவில்லை. தலைவியின் நிலையை உணர்ந்த தோழி, தலைவனைப் பார்த்து,
நீ  இன்னும் எவ்வளவு காலம் களவொழுக்கத்தைத் தொடரப் போகிறாய்?” என்று கேட்டாள். தலைவன் தன்னால் தலைவிக்கு இந்த நிலை வந்தது என்பதைக் குறித்து நாணினான். ”நான் இப்பொழுதே, திருமணத்திற்காகப் பொருள்தேடப் போகப் போகிறேன். நான் விரைவில் திரும்பிவந்து தலைவியைத் திருமணம் செய்துகொள்வேன்.” என்று கூறினான். ”தலைவன் திருமணத்திற்காகப் பொருள் தேடுவதற்காகத்தான் சென்றிருக்கிறான். அவன் விரைவில் வந்துவிடுவான். “ என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுகிறாள்.

காந்தளங் கொழுமுகை காவல் செல்லாது
வண்டுவாய் திறக்கும் பொழுதிற் பண்டும்
தாமறி செம்மைச் சான்றோர்க் கண்ட
கடனறி மாக்கள் போல இடன்விட்
டிதழ்தளை யவிழ்ந்த ஏகல் வெற்பன்
நன்னர் நெஞ்சத்தன் தோழி நின்னிலை
யான்றனக் குரைத்தனெ னாகத்
தானா ணினனிஃ தாகா வாறே. 

கொண்டு கூட்டு: தோழி! காந்தள் அம் கொழுமுகை காவல் செல்லாதுவண்டுவாய் திறக்கும் பொழுதில், பண்டும் தாம் அறி செம்மைச் சான்றோர் கண்ட கடன் அறி மாக்கள் போல, இடன்விட்டு  இதழ் தளை அவிழ்ந்த ஏகல் வெற்பன்நின்னிலை யான் தனக்கு உரைத்தனென் ஆக, இஃது ஆகாவாறு, தான் நாணினன் நன்னர் நெஞ்சத்தன்.

அருஞ்சொற்பொருள்:  அம் = அழகிய; முகை = மொட்டு; கொழுமுகை = வளமான மொட்டு; காவல் = காத்திருத்தல்; தாம் அறி செம்மை = தாம் அறிந்த நடுநிலைமையுள்ள; கடன் = கடமை; தளை = கட்டு; ஏகல் = உயர்ச்சி; வெற்பன் = குறிஞ்சிநிலத் தலைவன்; நன்னர் = நல்ல; இஃது ஆகா ஆறு = இனி இக்களவொழுக்கம் நடைபெறாமல்.

உரை: தோழி! காந்தளின் அழகிய கொழுவிய அரும்புகள், தானாக மலரும்வரை காத்திருக்காமல், வண்டுகள் வாய் திறக்கும் சமயத்தில், மூடிய இதழ்களை, வண்டுகளுக்கு  இடம் கொடுத்துத் திறந்து மலர்கின்றன. அது , முன்பு தாம் அறிந்த நடுநிலைமை உடைய சான்றோரைக் கண்டவுடன், எதிர் கொள்ளுதல் முதலிய கடமைகளை அறிந்த மனிதரின் செயலைப் போல் உள்ளது. அத்தகைய மலர்கள் உள்ள உயர்ந்த மலைகளை உடைய தலைவனிடம்,  உன் நிலையை, நான் எடுத்துரைத்தேன். உடனே, அவன் நாணம் அடைந்தான். இனி, இக் களவொழுக்கம் மேலும் நீட்டித்து நிகழாதபடி, அவன் உன்னைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் நல்ல நெஞ்சத்தை உடையவன்.


சிறப்புக் குறிப்பு: சான்றோரைக் கண்டவுடன் இடங்கொடுத்து அவரை வரவேற்கும் கடமையை உணர்ந்த மக்களைப்போல் காந்தள் மலர்கள் வண்டுகளுக்கு இடமளிக்கும் நாடு என்பது தோழி தலைவியின் நிலையைக் கூறியவுடன், தன் கடமையை  உணர்ந்து, நாணி, தலைவியை மணந்துகொள்வதற்குத் தலைவன் முன்வந்தான் என்பதை உள்ளுறை உவமமாகக் குறிப்பிடுகிறது.

No comments:

Post a Comment