Sunday, November 6, 2016

266. தலைவி கூற்று

266.  தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 -  இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று : வரையாது பிரிந்தவிடத்துத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
கூற்று விளக்கம்:  தலைவனும் தலைவியும் கூடிப் பழகினார்கள். திருமணத்திற்குமுன் பிரிந்து  சென்ற தலைவனிடமிருந்து எந்தச் செய்தியும் வரவில்லை. அதனால், தலைவி வருந்துகிறாள். பிரிந்து சென்ற தலைவன் ஒரு தூதுகூட அனுப்பவில்லையே என்று தோழியிடம் கூறுகிறாள்.

நமக்கொன் றுரையா ராயினுந் தமக்கொன்
றின்னா இரவின் இன்றுணை யாகிய
படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்லோ
மறப்பரும் பணைத்தோள் மரீஇத்
துறத்தல் வல்லியோர் புள்வாய்த் தூதே. 

கொண்டு கூட்டு: மறப்ப அரும் பணைத்தோள் மரீஇத் துறத்தல் வல்லியோர், புள்வாய்த் தூது நமக்கு ஒன்று உரையாராயினும், தமக்கு ஒன்று இன்னா இரவின் இன்துணையாகிய படப்பை வேங்கைக்கு மறந்தனர் கொல்

அருஞ்சொற்பொருள்: ஒன்றுதல் = பொருந்துதல்; படப்பை = தோட்டம்; வேங்கை = வேங்கை மரம்; பணை = பருத்த; மரீஇ = கூடி, தழுவி; துறத்தல் = பிரிதல்; வல்லியோர் = வல்லமை உடையவர்; புள் =  பறவை; வாய் = வாயிலாக.

உரை: (தோழி!),  மறத்தற்கரிய நம் பருத்த தோளைத் தழுவிய பிறகும், நம்மைப் பிரிந்து செல்லும் மனவலிமையையுடைய  தலைவர், பறவை வாயிலாக விடும் தூது மொழியை, நமக்கு அனுப்பாவிட்டாலும்,  தமக்குத் துன்பம் தரும் இரவில், இனிய துணையாக இருந்த,  தோட்டத்தில் உள்ள வேங்கை மரத்திற்குக்கூடத்  தூது மொழியை அனுப்புவதை மறந்தாரோ?

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், செய்தியை ஒலையில் எழுதி, அதைப் பறவையின் காலில் கட்டி அனுப்புவது வழக்கில் இருந்ததாகத் தெரிகிறது.


பிரிவதற்குமுன், தலைவனும் தலைவியும் இரவு நேரங்களில் வீட்டுத் தோட்டத்தில் இருந்த வேங்கை மரத்தடியில் சந்திப்பது வழக்கம். இப்பொழுது, தலைவன் பிரிந்து சென்றதால், அவன் இரவில் தனிமையில் இருப்பான். அத்தகைய இரவு நேரங்களில், வேங்கை மரத்தடியில் தன்னோடு கூடி இருந்ததைத் தலைவன் எண்ணிப் பார்ப்பான் என்று தலைவி நினைக்கிறாள். ஆகவே, கூடி இன்புறுவதற்கு இடமளித்த அந்த வேங்கை மரத்திற்காவது தூது அனுப்பலாமே என்று தலைவி கூறுகிறாள்.  

No comments:

Post a Comment