Sunday, June 18, 2017

361. தலைவி கூற்று

361. தலைவி கூற்று

பாடியவர்: கபிலர்.
திணை: குறிஞ்சி.
கூற்று : வரைவு மலிந்தவழித் தோழி நன்காற்றினாய்என்றாட்குக் கிழத்தி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவனுக்கும் தலைவிக்கும் திருமணம் நடைபெறப்போகிறது. அதற்கான முயற்சிகள் நடைபெறுகின்றன. “இதுவரை, தலைவனின் பிரிவை நீ நன்றாகப் பொறுத்துக்கொண்டிருந்தாய்என்று பாரட்டிய தோழியை நோக்கி, “அவர் மலையிலிருந்து வந்த காந்தளை வளர்த்தேன். நான் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு அது மிகவும் உதவியாக இருந்தது. என் தாயும் எனக்கு மிகுந்த ஆதரவாக இருந்தாள்என்று தலைவி மறுமொழி கூறுகிறாள்.

அம்ம வாழி தோழி அன்னைக்
குயர்நிலை உலகமுஞ் சிறிதால் அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே. 

கொண்டு கூட்டு: தோழி! வாழி! அம்ம! அவர்மலை மாலைப் பெய்த மணம்கமழ் உந்தியொடு, காலை வந்த காந்தள் முழுமுதல்மெல் இலை குழைய முயங்கலும் இல் உய்த்து நடுதலும் கடியாதோள் அன்னைக்கு  உயர்நிலை உலகமும் சிறிது.

அருஞ்சொற்பொருள்: உயர்நிலை உலகம் = தேவருலகம்; உந்தி = ஆறு, ஓடிவரும் வெள்ளம்; முழுமுதல் = முழுச்செடி; ஆல்அசைச்சொல்.

உரை: தோழி!, நீ வாழ்க! நான் கூறுவதைக் கேட்பாயாக!  தலைவருடைய மலையிலே, மாலைக் காலத்திலே பெய்த மழையால் பெருகி வந்தநறுமணம் கமழும் வெள்ளத்தோடு,  காலையிலே இங்கு வந்த காந்தளின்,  மெல்லிய இலையானது கசங்கும்படி நான் தழுவிக்கொள்ளுவதையும், அதன் கிழங்கை வீட்டில் கொண்டுவந்து நான் நடுவதையும், தடுக்காத தாய்க்குக் கைம்மாறாகக் கருதும் இடத்துஉயர்ந்த நிலையாகிய தேவருலகமும் சிறியதாகும்.


சிறப்புக் குறிப்பு: முதல்நாள் இரவு தலைவனுக்குரிய மலையில் பெய்த மழையினால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவந்தது. அந்த வெள்ளத்தில் மலர்களும் வந்ததால், அதுமணங்கமழ் உந்திஎன்று குறிப்பிடப்பட்டது. அந்த வெள்ளத்தில்காந்தள் செடி ஒன்று வேறோடு மிதந்து வந்தது. அது தலைவனின் மலையிலிருந்து வந்ததால், அதை எடுத்து, அதன் இலைகளைத் தலைவி தழுவிக்கொண்டாள். மற்றும், அந்தக் காந்தள் செடியின் கிழங்கை நட்டு அதை வளர்த்து வந்தாள். அவளுடைய செயல்களுக்கு அவள் தாய் ஆதரவாக இருந்தாள். காந்தள் செடி தலைவனுக்குரிய மலையிலிருந்து வந்ததால், அதைக் காண்பதும் கண்காணிப்பதும் அவளுக்குத் தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொள்வதற்கு உதவியாக இருந்தது. அதைக் காணும் போதெல்லாம் தலைவனைக் காண்பதாகவே கற்பனை செய்துகொண்டு  தலைவனின் பிரிவைப் பொறுத்துக்கொண்டிருந்தாள்

No comments:

Post a Comment