Monday, June 5, 2017

352. தலைவி கூற்று

352. தலைவி கூற்று
பாடியவர்: கடியலூர் உருத்திரங்கண்ணனார்.
திணை: பாலை.
கூற்று : பிரிவிடைத் தோழிக்குக் கிழத்தி மெலிந்து (வருந்திக்) கூறியது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். பிரிவினால் வருந்தும் தலைவி, “இந்த மாலைக்காலம் இவ்வளவு  துன்பத்தைத்  தரும் என்ற உண்மையைத் தலைவைரைப் பிரிந்திருக்கின்ற நாட்களில்தான் நான் உணர்கின்றேன்என்று கூறுகிறாள்.

நெடுநீ ராம்பல் அடைப்புறத் தன்ன
கொடுமென் சிறைய கூருகிர்ப் பறவை
அகலிலைப் பலவின் சாரல் முன்னிப்
பகலுறை முதுமரம் புலம்பப் போகும்
சிறுபுன் மாலை உண்மை
அறிவேன் தோழியவர்க் காணா ஊங்கே.

கொண்டு கூட்டு: தோழி! நெடுநீர் ஆம்பல் அடைப்புறத்து அன்னகொடுமென் சிறைய, கூர் உகிர்ப் பறவை அகல் இலைப் பலவின் சாரல் முன்னிபகல் உறை முதுமரம் புலம்பப் போகும் சிறுபுன் மாலை உண்மை, அவர்க் காணா ஊங்கு அறிவேன்.

அருஞ்சொற்பொருள்: நெடுநீர் = ஆழமான நீர்நிலை; அடை = இலை; கொடு = வளைந்த; சிறை = சிறகு; உகிர் = நகம்; கூர்உகிர்ப் பறவைஇது வௌவாலைக் குறிக்கிறது; முன்னி = நினைத்து; புலம்ப = தனித்திருக்கும்படி; சிறுபுன் மாலை = சிறுமை நிறைந்த துன்பம் தரும் மாலைக்காலம்; காணா ஊங்கு = காணாத காலத்தில்.
உரை: தோழி! ஆழமான நீரில் வளர்ந்த ஆம்பலின் இலையின் புறப்பக்கத்தைப் போன்ற, வளைந்த மெல்லிய சிறகையும், கூரிய நகங்களையும் உடைய வௌவால்கள், அகன்ற இலைகளையுடைய பலாமரங்கள் உள்ள மலைச்சாரலை நோக்கி, பகற்காலத்தில் தாம் தங்கி இருந்த பழைய மரத்தைவிட்டு விலகிப்போகும் சிறுமை நிறைந்த  மாலைக்காலம் உள்ளது என்பதை, அத்தலைவரைக் காணாத காலத்தில் உணர்கிறேன்.
சிறப்புக் குறிப்பு: தலைவனைக் காணாத பொழுது, மாலைக்காலத்தில் காமநோய் அதிகரிப்பதால், அவர்க் காணாவூங்கு மாலை உண்மை அறிவேன் என்று தலைவி கூறுகிறாள்தலைவனோடு இருக்கும் பொழுது, மாலைக்காலம் துன்பம் தருவதாக இல்லை. ஆனால், அவனைப் பிரிந்திருக்கும் நாட்களில் மாலைக்காலம் துன்பம் தருவதாக உள்ளது  என்ற கருத்து, திருக்குறளிலும் காணப்படுகிறது.
            மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
            காலை அறிந்த திலேன்.                                                       (குறள் – 1226)

பொருள்: கூடியிருந்த காலத்து இன்பம் தந்த மாலைப்பொழுது, பிரிவில் இத்துணைத் துன்பம் தரும் என்பதை என்னை மணந்த துணைவர் பிரியாத காலத்தில் அறிந்தேனில்லை.

No comments:

Post a Comment