Monday, June 5, 2017

354. தோழி கூற்று

354. தோழி கூற்று 
பாடியவர்: கயத்தூர் கிழார்.
திணை: மருதம்
கூற்று : பரத்தையிற் பிரிந்து வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.
கூற்று விளக்கம்: தலைவன் தலைவியைப் பிரிந்து பரத்தையரோடு சிலகாலம் தங்கி இருந்தான். இப்பொழுது தலைவியோடு மீண்டும் வாழ விரும்புகிறான். தலைவி, தலைவனின் செயலை வெறுத்து, அவனோடு  ஊடியிருக்கிறாள். தலைவன், தலைவியின் ஊடலைத் தீர்த்து வைக்குமாறு தோழியை வேண்டுகிறான்.  “உன் மனைவி, நீ அவளை விரும்பவில்லை என்று நினைக்கிறாள். அது உண்மையானால், நீ அவளை அவள் தந்தையிடம்  அழைத்துச் செல்வாயாக. ” என்று கூறித் தலைவனின் வேண்டுகோளைத் தோழி மறுக்கிறாள்.  

நீர்நீ டாடிற் கண்ணுஞ் சிவக்கும்
ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்
தணந்தனை யாயினெம் இல்லுய்த்துக் கொடுமோ
அந்தண் பொய்கை எந்தை எம்மூர்க்
கடும்பாம்பு வழங்குந் தெருவில்
நடுங்கஞர் எவ்வம் களைந்த எம்மே.

கொண்டு கூட்டு: நீர் நீடு ஆடின் கண்ணும் சிவக்கும்ஆர்ந்தோர் வாயில் தேனும் புளிக்கும்தணந்தனை ஆயின் எம் அம் தண் பொய்கை எந்தை எம்மூர்க் கடும் பாம்பு வழங்கும் தெருவில்,  நடுங்கு அஞர் எவ்வம் களைந்த எம் இல் உய்த்துக் கொடுமோ?

அருஞ்சொற்பொருள்: ஆர்தல் = உண்ணுதல் (இங்கு, ஆர்ந்தோர் என்பது நிரம்ப உண்டவர் என்ற பொருளில் வந்தது); தணத்தல் = பிரிதல்; தண் = குளிர்ச்சியான; உய்த்தல் = கொண்டு போதல்; அஞர் = துன்பம்; எவ்வம் = துன்பம்.
உரை: நீரில் நெடுநேரம் விளையாடினால் கண்களும் சிவக்கும். நிரம்ப உண்டவர்களின் வாயில் தேனும் புளிக்கும். அழகிய குளிர்ந்த நீர்நிலையையுடைய, எம் தந்தையின் ஊரில், கடுமையான நஞ்சையுடைய பாம்புகள் ஓடும் தெருவில், எங்களுடைய நடுங்குதற்குரிய மிகுந்த துன்பத்தை நீ முன்பு களைந்தாய். இப்பொழுது, நீ எம்மைப் பிரிவாதாக  இருந்தால், எம்மை எம்முடைய வீட்டிற்கு கொண்டுபோய் விட்டுவிடுவாயாக.

சிறப்புக் குறிப்பு: குளிர்ச்சியாக, விளையாடுவதற்கு இனிமையாக இருக்கும் அருவியில் நெடுநேரம் இருந்தால் கண் சிவக்கும் என்பதும், நிரம்ப உண்டால் தேனும் புளிக்கும் என்பதும், “உன் மனைவி உனக்கு முதலில் இனியவளாக இருந்தாள். பின்னர் நெடுங்காலம் பழகியதால் உன்னால் வெறுத்தற்கு உரியவளானாள்என்று தோழி தலைவனிடம் கூறுவதைக் குறிக்கிறது. இதுபழகப் பழகப் பாலும் புளிக்கும்என்னும் பழமொழியைப் போன்றது. ”கடும் நஞ்சுடைய பாம்பைக் கண்டு முன்பு நாங்கள் அஞ்சிய பொழுது, நீ எங்கள் துன்பத்தைக் களைந்தாய்என்று கூறித் தோழி தலைவன் முன்பு தலைவியிடம் அன்பாக இருந்ததைச் சுட்டிக் காட்டுகிறாள்.  

No comments:

Post a Comment