Monday, June 5, 2017

351. தோழி கூற்று

351. தோழி கூற்று

பாடியவர்:
அம்மூவனார்.
திணை: நெய்தல்.
கூற்று : தலைமகன் தமர் வரைவொடு வந்தவழி, "நமர் அவர்க்கு வரைவு நேரார் கொல்லோ?" என்று அஞ்சிய தலைமகட்குத் தோழி வரைவு மலிந்தது. (நேரார் கொல்லோ = உடன்பட மாட்டாரோ; மலிந்தது = மகிழ்ந்து கூறியது)
கூற்று விளக்கம்: தலைவனின் உறவினர்கள் தலைவியைப் பெண்கேட்க வந்துள்ளார்கள். தன்னுடைய சுற்றத்தார் தன் திருமணத்திற்கு உடன்படுவார்களோ அல்லது உடன்பட மாட்டோர்களோ என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “நம் சுற்றத்தார் உன் திருமணத்திற்குச் சம்மதித்தனர்என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தோழி கூறுகிறாள்.

வளையோய் உவந்திசின் விரைவுறு கொடுந்தாள்
அளைவாழ் அலவன் கூருகிர் வரித்த
ஈர்மணல் மலிர்நெறி சிதைய இழுமென
உருமிசைப் புணரி உடைதரும் துறைவர்க்கு
உரிமை செப்பினர் நமரே விரியலர்ப்
புன்னை ஓங்கிய புலாலஞ் சேரி
இன்னகை ஆயத் தாரோடு
இன்னும் அற்றோஇவ் வழுங்க லூரே. 

கொண்டு கூட்டு: வளையோய்! நமரே விரைவுறு கொடுந்தாள் அளைவாழ் அலவன் கூர் உகிர் வரித்த ஈர்மணல் மலிர் நெறி சிதைய, இழும்என உரும் இசைப் புணரி உடைதரும். துறைவர்க்கு உரிமை செப்பினர். உவந்திசின்! விரி அலர்ப் புன்னை ஓங்கிய புலால் அம்  சேரிஇன்நகை ஆயத்தாரோடு இவ் அழுங்கல் ஊர் இன்னும் அற்றோ?

அருஞ்சொற்பொருள்: வளையோய் = வளையலை அணிந்தவளே; உவந்திசின் = மகிழ்ந்தேன்; கொடு = வளைந்த; தாள் = கால்; அளை = வளை; அலவன் = நண்டு; உகிர் = நகம்; வரித்தல் = கோடு கோடாகக் கீறுதல்; மலிர் = நீரூற்று; நெறி = வழி; சிதைதல் = அழிதல்; இழும் = ஒலிக்குறிப்பு; உரும் = இடி; புணரி = கடல் அலைகள்; துறைவன் = நெய்தல் நிலத்தலைவன்; நமர் = நமது உறவினர்; அலர்ந்த = மலர்ந்த; புன்னை = ஒருவகை மரம்; சேரி = தெரு; ஆயம் = மகளிர் கூட்டம்; அழுங்கல் =ஆரவாரம்.    
உரை: வளையலை அணிந்த தலைவியே! விரைந்து செல்லும் வளைந்த கால்களையுடைய, வளையில் வாழும் நண்டு, தன் கூரிய நகத்தினால் கீறிய, ஈரமுள்ள மணலையுடைய நீரிலுள்ள கோடுகள் அழியும்படி, இழுமென்னும் ஓசையுடன் கூடிய, இடி முழக்கத்தையுடைய அலைகள் மோதி உடைகின்ற துறையையுடைய தலைவருக்கு, நீ உரிமையானவள் என்று நம் சுற்றத்தார் உடம்பட்டுக் கூறினர். அதனையறிந்து நான் மகிழ்ந்தேன். விரிந்த மலர்களையுடைய புன்னை மரங்கள் உயர்ந்து வளர்ந்துள்ள,  புலால் நாற்றத்தை உடைய சேரியில் உள்ள,  இனிய புன்னகை தவழும் மகளிர் கூட்டத்தோடு, இந்த ஆரவாரத்தையுடைய ஊர், இனியும் முன் போல் பழிச்சொற்களைக் கூறுமோ?


சிறப்புக் குறிப்பு: புன்னை மலரின் மணமும் புலாலின் நாற்றமும் ஒருங்கே வீசும் சேரி என்றது தலைவன் வரைவுக்கு உடம்படும் உறவினரும், அலர்கூறும் மகளிர் கூட்டமும் உடையது என்பதைக் குறிக்கிறதுநண்டுகள் தம் நகத்தால் கடற்கரையில் கீறிய கோடுகளை அலைகள் அழிப்பதைப் போல, திருமணம் முடிவு செய்யப்பட்டவுடன் ஊரார் கூறும் அலர் ஒழியும் என்பது இப்பாடலில் உள்ள உள்ளுறை உவமமாகும்.

No comments:

Post a Comment