Sunday, February 21, 2016

160. தலைவி கூற்று

160. தலைவி கூற்று

பாடியவர்: மதுரை மருதன் இளநாகனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 77 –இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: வரைவு நீட்டிப்ப ஆற்றாளாகிய தலைமகளை நோக்கித் தோழி, வரைவரென ஆற்றுவிப்புழித் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்:  திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகப் பிரிந்து சென்ற தலைவன், தான் திரும்பி வருவதாகக் குறிப்பிட்ட காலத்தில் வரவில்லை. தோழி, “அவர் விரைவில் வந்து உன்னைத் திருமணம் செய்துகொள்வார். பொறுமையாக இரு.” என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, “இதுவரை அவர் வரவில்லை. இனி அவர் வந்து எப்படித் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்?” என்று கேட்கிறாள்.


நெருப்பி னன்ன செந்தலை யன்றில்
இறவி னன்ன கொடுவாய்ப் பேடையொடு
தடவின் ஓங்குசினைக் கட்சியிற் பிரிந்தோர்
கையற நரலு நள்ளென் யாமத்துப்
பெருந்தண் வாடையும் வாரார்
இஃதோ தோழிநங் காதலர் வரவே. 

கொண்டு கூட்டு: நெருப்பின் அன்ன செந்தலை அன்றில் இறவின் அன்ன கொடுவாய்ப் பேடையொடு தடவின் ஓங்குசினைக் கட்சியில் பிரிந்தோர் கையற நரலும் நள்ளென் யாமத்துப் பெருந்தண் வாடையும் வாரார். தோழி! நம் காதலர் வரவு இஃதோ?

அருஞ்சொற்பொருள்: அன்றில் = ஆணும் பெண்ணும் எப்பொழுதும் இணைந்திiருக்கும் பறவை; இறவு = இறால் மீன் ; கொடுவாய் = வளைந்த வாய்; பேடை = பெண்பறவை; தடவு = தடா மரம் ; ஓங்கல் = உயர்ச்சி; சினை = கிளை; கட்சி = பறவைக்கூடு; கையறுதல் = செயலறுதல்; நரல் = ஒலி; நள் = செறிவு; யாமம் = நடுஇரவு; வாடை = வடக்கிலிருந்து வரும் குளிர் காற்று; வாரார் = வரமாட்டார்.

உரை: தோழி, நெருப்பைப் போன்ற சிவந்த தலையையுடைய ஆண் அன்றில், இறாமீனைப் போல் வளைந்த அலகையுடைய பெண் அன்றிலோடு, தடா மரத்தின் உயர்ந்த கிளையில் உள்ள கூட்டிலிருந்து கொண்டு, பிரிந்தவர் செயலற்று வருந்துமாறு  ஒலிக்கின்ற, இருள் செறிந்த நள்ளிரவில் மிகுந்த குளிர்ச்சியையுடைய வாடைக்காற்று வீசும் கூதிர் காலத்திலும், தலைவர் வரவில்லை. நம் தலைவர் என்னை மணந்து கொள்வது இதுதானோ?

சிறப்புக் குறிப்பு: ஆண் அன்றில் தன் துணையாகிய பெண் அன்றிலோடு மகிழ்ந்து எழுப்பும் ஒலியைக் கேட்டு, ”இப்பறவை பெற்ற பேறு நமக்குக் கிடைக்கவில்லையே!” என்று தன் துணையைப் பிரிந்தவர் வருந்துவராகையால் “‘பிரிந்தோர் கையற நரலும்என்றாள்.


வாடைக்காலம் வந்தும் தலைவர் வரவில்லை. அவர் இனியும் வருவார் என்று எப்படி நம்ப முடியும்? திருமணம் விரைவில் நடைபெறும் என்று நீ கூறுகிறாய். அது எப்படி நிகழும்?” என்று தோழியை நோக்கித் தலைவி வருத்தத்தோடு கேட்கிறாள்.

No comments:

Post a Comment