Tuesday, February 9, 2016

149. தலைவி கூற்று

149. தலைவி கூற்று

பாடியவர்: வெள்ளி வீதியார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 27-இல் காணலாம்.
திணை: பாலை.
கூற்று: உடன்போக்கு உணர்த்திய தோழிக்குத் தலைவி சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவியைத் தலைவனுக்குத் திருமணம் செய்விக்க அவள் பெற்றோர்கள் மறுத்தனர். ஆகவே, அவ்வூரைவிட்டுப் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வேறு ஊருக்குச் சென்றுவிடலாம் (உடன்போக்கு) என்று தலைவன் தலைவியை அழைக்கிறான். தலைவி அவனோடு செல்லுவதற்குத் தயங்குகிறாள். அவனுடன் செல்லுவதுதான் சரியான செயல் என்று தோழி கூறுகிறாள். அதற்குத் தலைவி, எப்பொழுதும் என்னுடனேயே இருந்த நாணம்இப்பொழுது காமநோய் மிகுந்ததால் என்னைவிட்டு நீங்கியது,” என்று கூறித் தலைவனுடன் செல்லுவதற்கு உடன்படுகிறாள்.


அளிதோ தானே நாணே நம்மொடு
நனிநீ டுழந்தன்று மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை
தீம்புனல் நெரிதர வீய்ந்துக் காஅங்குத்
தாங்கு மளவைத் தாங்கிக்
காம நெரிதரக் கைந்நில் லாவே. 

கொண்டு கூட்டு: நாணே நம்மொடு நனி நீடு உழந்தன்று. மன்னே இனியே
வான்பூங் கரும்பின் ஓங்குமணற் சிறுசிறை தீம்புனல் நெரிதர, வீய்ந்து உக்காஅங்குத்
தாங்கும் அளவைத் தாங்கிக் காமம் நெரிதரக் கைந்நில்லாவே.  தான் அளிதோ!

அருஞ்சொற்பொருள்: அளிது = இரங்கத் தக்கது; நாணம் = வெட்கம்; நனி = மிக; உழந்தன்று = வருந்தியது; மன் - அசைச்சொல்; வான் = வெண்மை; ஓங்கல் = உயர்ச்சி; சிறுசிறை = நீரைத் தடுப்பதற்காக இடப்பட்ட சிறிய வரம்பு (பாத்தி); தீ = கொடுமை; புனல் = ஆறு, நீர்; நெரிதருதல் = நெருங்கித் தாக்குதல்; வீய்ந்து = அழிந்து; உகுதல் = கரைதல்; தாங்கும் = தடுக்கும்; கைந்நில்லாது = என்னிடம் நிலைபெறாது.
உரை: தோழி! நாணம் நம்மோடு மிக நெடுங்காலம் கூடவே இருந்து வருந்தியது. இனிமேல், வெண்ணிறமான பூக்க்களையுடைய கரும்பிற்குப் போடப்பட்ட உயர்ந்த மணலையுடைய பாத்தி, வெள்ளம் பெருகி வந்ததால் அழிந்து விழுந்ததைப்போல,  பொறுக்கும் அளவிற்குப் பொறுத்து, காமம் நெருங்கித் தாக்கியதால், நாணம் என்பால் நிலைபெறாமல் போய்க்கொண்டிருக்கிறது. என்னுடைய நாணம் இரங்கத் தக்கது.

சிறப்புக் குறிப்பு: இதுவரை, தலைவி தனக்கு இயற்கையாக உள்ள நாணத்தால் காமத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தாள். இப்பொழுது காமத்தின் மிகுதியால், நாணம் நீங்கியது. அவள் உடன்போக்குக்குச் சம்மதித்தாள் என்பது இப்பாடலின் கருத்து

பெண்களின் காதல் வாழ்க்கை நாணத்திற்கும் காமத்திற்கும் இடையே நடைபெறும் ஒரு போராட்டம். ஒரு ஆண்மகனுடன் பழகினால், ஊர்மக்களும் உற்றாரும் பழிச்சொற்கள் கூறுவார்களோ என்ற அச்சம் ஒருபக்கமும், மற்றொருபக்கம் காம உணர்வும் பெண்களை வருத்துவதாக இலக்கியத்தில் பலபாடல்களில் காண்கிறோம். உதாரணமாக,  திருக்குறளில், நாணத்திற்கும் காமத்திற்கும், இடையே நடைபெறும் போராட்டத்தைத் திருவள்ளுவர் வெகு அழகாகச் சித்திரிக்கிறர்.

காமக் கணிச்சி உடைக்கும்  நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு.                                      (குறள் 1251)

(பொருள்: நாணம் என்னும் தாழ்ப்பாளிட்டுப் பூட்டப்பட்ட நிறை (மனவுறுதி) என்னும் கதவைக் காமம் என்னும் கோடரி முறித்து உடைக்கும். நான் அதைத் தடுக்க இயலாதவளாய் உள்ளேன்.)

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே!
யானோ பொறேன்இவ் விரண்டு.                          (குறள் – 1247)

(பொருள்: என் நல்ல நெஞ்சமே! காமம் நாணம் எனும் இரண்டுள், நீ ஒன்று காமத்தைக் கைவிடு; அல்லது நாணத்தைக் கைவிடு. இவை இரண்டையும் நீ ஒருசேர வைத்துக் கொள்ள விரும்பினால், ஒன்றோடொன்று மாறுபட்ட அவ்விரண்டையும் தாங்கும் ஆற்றல் எனக்கில்லை.)

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்குமென்
நோனா உடம்பின் அகத்து.                                     (குறள் – 1163)


(பொருள்: பிரிவுத் துன்பத்தைத் தாங்க முடியாமல் வாடும் என் உடம்பில், ஒருபக்கம் காமமும், மறுபக்கம் அதனை வெளிப்படுத்தத் தயங்கும் வெட்கமும், என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு தொங்குகின்றன. ஒரு பக்கத்தில் காமவுணர்வு இழுக்க, மறுபக்கத்தில் வெட்கவுணர்வு இழுக்க என் உயிர் ஊசலாடுகிறது.)

No comments:

Post a Comment