Tuesday, February 9, 2016

148. தலைவி கூற்று

148.  தலைவி கூற்று

பாடியவர்: இளங்கீரந்தையார். இவர் இயற்றியதாக இந்த ஒரு பாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: பருவங் கண்டு அழிந்த தலைமகளைத் தோழி பருவமன்றென்று வற்புறுத்தத் தலைமகள் சொல்லியது.
கூற்று விளக்கம்: தலைவன் கார்காலத்தில் திரும்பி வருவதாகக் கூறிச் சென்றான். கார்காலம் வந்தது. அவன் இன்னும் திரும்பிவரவில்லை. தலைவி வருத்தப்படுவாளே என்று எண்ணிய தோழி, இன்னும் கார்காலம் வரவில்லை. கார்காலம் வந்தவுடன் உன் தலைவர் வந்துவிடுவார்,” என்று கூறுகிறாள். அதற்குத் தலைவி, கொன்றையும் குருந்தமும் மலர்ந்திருக்கின்றன. இது கார்காலம் அல்லாமல் வெறும் கனவா?” என்று கேட்கிறாள்.

செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த
தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக்
காசி னன்ன போதீன் கொன்றை
குருந்தோ டலம்வரும் பெருந்தண் காலையும்
காரன் றென்றி யாயிற்
கனவோ மற்றிது வினவுவல் யானே. 

கொண்டு கூட்டு: செல்வச் சிறாஅர் சீறடிப் பொலிந்த தவளை வாய பொலஞ்செய் கிண்கிணிக் காசின் அன்ன போது ஈன் கொன்றைகுருந்தோடு அலம்வரும் பெருந்தண் காலையும் ”கார் அன்றுஎன்றி ஆயின் மற்று இது கனவோ?  யான் வினவுவல். 

அருஞ்சொற்பொருள்: சீறடி = சிறிய அடி; பொலிவு = அழகு; பொலம் = பொன்; கிண்கிணி = சதங்கை (சலங்கை); போது = முற்றிய அரும்பு; அலம்வருதல் = சுழலுதல்; தண் = குளிர்ச்சி; காலை = பொழுது; கார் = கார்காலம்.

உரை: செல்வந்தர்களின் சிறு பிள்ளைகளுடைய, சிறிய பாதங்களில் அழகுடன் விளங்கும், தவளையின் வாயைப் போன்ற வாயையுடைய, பொன்னாற் செய்யப்பட்ட சலங்கையில் உள்ள  காசைப் போன்ற, பெரிய (உருண்டையான) அரும்புகளை தோற்றுவிக்கும் கொன்றை மரமும்,  குருந்த மரமும்  சுழலும் மிகுந்த குளிரிச்சியையுடைய பருவத்தைக் கார் காலம் அன்று என்று  நீ கூறுவாயாயின், இவ்வாறு தோன்றுவது கனவோ?  நான் கேட்கிறேன். எனக்கு விடை கூறுவாயாக.


சிறப்புக் குறிப்பு:  கொன்றையும் குருந்தும் கார்காலத்து மலர்வன என்பது குறிப்பிடத் தக்கது

No comments:

Post a Comment