Monday, March 14, 2016

161. தலைவி கூற்று

161. தலைவி கூற்று

பாடியவர்: நக்கீரனார். இவரைப் பற்றிய செய்திகளைப் பாடல் 78 – இல் காணலாம்.
திணை: குறிஞ்சி.
கூற்று: இரவுக்குறிக்கண் வந்த தலைமகனைக் காப்பு மிகுதியான் எதிர்ப்படப் பெறாத தலைமகள், பிற்றைஞான்று தலைமகன் சிறைப்புறத்தானாக, தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.
கூற்று விளக்கம்: ஒருநாள் இரவு தலைவன் தலைவியைச் சந்திக்க வந்தான். அவன் வந்ததை அறிந்தும், வீட்டுக்கு வெளியே வந்து, தலைவியால் அவனைக் காண முடியவில்லை. மறுநாள் இரவு தலைவன் அவளைக் காண வந்திருக்கிறான் என்பதை அறிந்த தலைவி, நேற்று இரவு மழை பெய்தபொழுது தலைவன் வந்தான். அப்பொழுது என் அன்னை தூங்காமல் விழித்துக்கொண்டிருந்தாள். அந்த நேரத்தில், தலைவன் வந்து வீட்டுக்கு வெளியே நின்றான். என்னால் அவனைக் காண முடியவில்லை. ஐயோ! அவன் என்ன நினைத்தானோ? என்ன செய்தானோ? என்று தலைவனின் காதில் கேட்குமாறு தோழியிடம் கூறுகிறாள்

பொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
கழுதுகண் பனிப்ப வீசும் அதன்றலைப்
புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி
அன்னா வென்னும் அன்னையு மன்னோ
என்மலைந் தனன்கொல் தானே தன்மலை
ஆரம் நாறு மார்பினன்
மாரி யானையின் வந்துநின் றனனே. 

கொண்டு கூட்டு: பொழுதும் எல்லின்று;  பெயலும் ஓவாது, கழுது கண்பனிப்ப வீசும். அதன்தலைப் புலிப்பல் தாலிப் புதல்வர்ப் புல்லி அன்னையும் அன்னா என்னும்.
தன்மலை ஆரம் நாறு மார்பினன் மாரி யானையின் வந்து நின்றனனே. அன்னோ! தான் என் மலைந்தனன் கொல்?

அருஞ்சொற்பொருள்: பொழுது = கதிரவன்; எல் = ஓளி; பெயல் = மழை; ஓவாதுஓயாமல்; கழுது = பேய்; பனித்தல் = நடுங்குதல்; வீசும் = வேகமாகப் பெய்யும்; தலை = மேல்; புல்லுதல் = தழுவுதல்; அன்னா = அன்னையே (அன்னையே அன்பது மருவி அன்னா என்று வந்தது.); அன்னோஇரக்கக் குறிப்பு; மலைதல் = செய்தல்; ஆரம் = சந்தனம்; மாரி யானை = மழையில் நனைந்த யானை.
உரை:  கதிரவனின் ஒளி குறைந்து இருள் சூழ்ந்தது.  பேய்கள் அடிக்கடித் தங்கள் கண்களை இமைத்து நடுங்கும்படி, மழை ஓயாமல் வேகமாகப் பெய்தது. அதற்கும் மேலே, என் தாய், புலிப்பல் கோத்த தாலியை அணிந்த தன் மகனைத் (என் தம்பியைத்)  தழுவிக்கொண்டு, ”அன்னையே என்று என்னை அழைத்தாள். அப்பொழுது,  தனது மலையில் விளைந்த சந்தனம் மணக்கின்ற மார்பையுடைய தலைவன், மழையில் நனைந்த யானையைப் போல வீட்டுக்கு வெளியே வந்து நின்றான்; அந்தோ! அவன் பின்னர் என்ன செய்தானோ?


சிறப்புக் குறிப்பு: இரவில் பேய்கள் அச்சமின்றித் திரிவதாக ஒரு நம்பிக்கை அக்காலத்தில் நிலவியது. ”கழுது கண்பனிப்ப வீசும்என்றது மழையின் கொடுமையைக் குறிக்கிறது. பொன்னாலான  சங்கிலியில் புலிப்பல்லை அமைத்துச் சிறுவர்கள் அணிவது வழக்கம். புதல்வனைத் தழுவிக்கொண்டிருந்த தாய் தன்னையும் அழைத்ததால், தான் தாய்க்கு அருகில் இருக்க வேண்டியதாயிற்று என்று தலைவி தலைவனுக்குத் தெரியப்படுத்துகிறாள்.  தலைவன் வழக்கமாக அணியும் சந்தனத்தின் மணத்தைத் தலைவி அறிந்தவளாதலால், அவன் வெளியே வந்து நின்றவுடன், அந்தச் சந்தன மணத்தால் அவள் தலைவனின் வருகையை அறிந்தாள். கொல், என்பது ஐயத்தைக் குறிக்கிறது. தான், ஏ ஆகிய இரண்டும் அசைச்சொற்கள்.

No comments:

Post a Comment