Monday, March 14, 2016

162. தலைவன் கூற்று

162.  தலைவன் கூற்று

பாடியவர்: கருவூர்ப் பவுத்திரனார். இவர் இயற்றியதாக இந்த ஒருபாடல் மட்டுமே சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது.
திணை: முல்லை.
கூற்று: வினைமுற்றி மீளும் தலைமகன் முல்லைக்கு உரைப்பானாய் உரைத்தது.

கூற்று விளக்கம்: தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன், தான் மேற்கொண்ட செயல்களை முடித்துத் திரும்பி வருகிறான். அவன் திரும்பி வரும்பொழுது, வழியில் முல்லைக்கொடிகளிலில் இருந்த அரும்புகளைப் பார்க்கிறான். அவை தன்னைப் பார்த்து ஏளனமாகச் சிரிப்பதுபோல் அவனுக்குத் தோன்றுகிறது. அவன்  முல்லையைப் பார்த்து, “நீ தனிமையில் இருப்பவர்களைப் பார்த்து எள்ளி நகையாடுவது தகுமோ?” என்று கேட்கிறான்.

கார்புறத் தந்த நீருடை வியன்புலத்துப்
பலர்புகு தரூஉம் புல்லென் மாலை
முல்லை வாழியோ முல்லை நீநின்
சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
நகுவை போலக் காட்டல்
தகுமோ மற்றிது தமியோர் மாட்டே. 

கொண்டு கூட்டு: முல்லை வாழியோ, முல்லை! கார் புறந்தந்த நீருடை வியன்புலத்துப்
பலர் புகுதரூஉம் புல்லென் மாலை நீ நின் சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை!
தமியோர் மாட்டே நகுவை போலக் காட்டல் மற்றிது தகுமோ. 

அருஞ்சொற்பொருள்: புறந்தருதல் = பாதுகாத்தல்; வியன் = அகன்ற; வியன்புலம் = அகன்ற நிலம்; புகுதரும் = புகும்; புல்லென் = ஒளியிழந்த; முகை = மொட்டு; முறுவல் = புன்னகை; மற்றுஅசைச்சொல்; தமியோர் = தனித்திருப்போர்.
உரை: முல்லையே! நீ வாழ்வாயாக! முல்லையே, கார்காலத்து மழையால் பாதுக்காப்பட்ட, நீரையுடைய அகன்ற நிலத்தின்கண், பலரும் தம் வீடுகளுக்குச் செல்லும் ஒளியிழந்த மாலைக் காலத்தில், நீ உன் சிறிய வெண்ணிறமான அரும்புகளால் புன்னகை கொண்டாய். அது, தன் துணையைப் பிரிந்து தனிமையுடன் இருப்பவர்களைப் பார்த்து நீ எள்ளி நகைப்பது போல் உள்ளது. இது உனக்குத் தகுமோ?


சிறப்புக் குறிப்பு: கார்காலம் தொடங்குவதற்கு முன்பே வந்துவிடுவதாகத் தலைவியிடம் தலைவன் கூறிச் சென்றான். இப்பொழுது கார்காலம் வந்துவிட்டது. மழையும் பெய்ய ஆரம்பித்துவிட்டது. தான் கார்காலத்திற்கு முன்னதாகவே வராததால் முல்லை தன்னைப் பார்த்துச் சிரிப்பதாக அவன் நினைக்கிறான்

No comments:

Post a Comment