Saturday, March 26, 2016

172. தலைவி கூற்று

172.  தலைவி கூற்று

பாடியவர்: கச்சிப்பேட்டு நன்னாகையார்.   இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 30 – இல் காணலாம்.  
திணை: நெய்தல்.
கூற்று: வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
கூற்று விளக்கம்: திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின் பிரிவால் தலைவி வருந்துவாள் என்று எண்ணித் தோழி அவளுக்கு ஆறுதல் கூறுகிறாள். ஆனால், தலைவி பிரிவால் நான் வருந்துவதாக நீ நினைக்கிறாய். நான் வருந்துவது உண்மைதான். அதைவிட, என்னைப் பிரிந்து சென்ற தலைவர் எவ்வாறு துன்பப்படுகிறாரோ என்று நினைத்து என் நெஞ்சு இடைவிடாமல் வருந்துகிறது என்று கூறுகிறாள்.

தா அம் சிறை நொப்பறை வாவல்
பழுமரம் படரும் பையுள் மாலை
எமியம் ஆக ஈங்குத் துறந்தோர்
தமியர் ஆக இனியர் கொல்லோ?
ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த
உலை வாங்கு மிதிதோல் போலத்
தலைவரம்பு அறியாது வருந்தும் என் நெஞ்சே.

கொண்டு கூட்டு: தாஅ அம் சிறை நொ பறை வாவல், பழுமரம் படரும் பையுள் மாலை எமியம் ஆக ஈங்குத் துறந்தோர், தமியராக இனியர் கொல்லோ? ஏழூர்ப் பொதுவினைக்கு ஓரூர் யாத்த உலைவாங்கும் மிதிதோல் போலத் தலைவரம்பு அறியாது, என் நெஞ்சு வருந்தும்.

அருஞ்சொற்பொருள்: தா = வலிமை; சிறை = இறகு; நொய்ம்மைமென்மை; பறை = பறத்தல்; வாவல் = வௌவால்; படர்தல் = செல்லுதல்; பையுள் = துன்பம்; எமி = தனிமை; தமியர் = தனியராய் இருப்போர்; யாத்த = அமைத்த; உலை = கொல்லர்களின் ஊதுலை; வாங்குதல் = மூச்சு முதலியன உட்கொள்ளுதல்; மிதிதோல் = துருத்தி; தலைவரம்பு = எல்லை.

உரை: தோழி! வலிமையையுடைய அழகிய சிறகையும்,  மென்மையாகப் பறக்கும் இயல்பையும் உடைய வௌவால்கள், பழுத்த மரங்களை நோக்கிச் செல்லும், தனியாக இருப்பவர்களுக்குத் துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், நாம் தனியாக இருக்கும்படி,  இங்கு எம்மைவிட்டுப் பிரிந்த தலைவர், தாம் தனிமையாக இருப்பதால் மகிழ்ச்சியாக இருப்பாரோ? ஏழு ஊரில் உள்ளவர்களுக்குப் பொதுவாகப் பயன்படும்படி, ஓர் ஊரில் அமைத்த, கொல்லன் உலையில் பொருத்திய துருத்தியைப் போல, எல்லையில்லாத் துன்பத்தை அடைந்து என் நெஞ்சு வருந்துகிறது.


சிறப்புக் குறிப்பு: ஏழு ஊரில் உள்ளவர்கள் கொடுக்கும் வேலையைச் செய்து முடிப்பதற்கு ஒரே ஒரு உலையில் உள்ள துருத்தி இடைவிடாமல் வேலை செய்வதுபோல், என் நெஞ்சு இடைவிடாமல் தலைவரை நினைத்து வருந்துகிறது என்று தலைவி கூறுகிறாள்.

No comments:

Post a Comment