Monday, March 14, 2016

167. செவிலித்தாய் கூற்று

167. செவிலித்தாய் கூற்று

பாடியவர்: கூடலூர் கிழார். இவரப் பற்றிய செய்திகளைப் பாடல் 166 –இல் காணலாம்.
திணை: முல்லை.
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. (கடிநகர்மணவீடு; இங்கு திருமணமான பிறகு கணவனும் மனைவியும் நடத்தும் தனிக்குடித்தனத்தைக் குறிக்கிறது.)

கூற்று விளக்கம்: தலைவி ஒரு செல்வந்தர் வீட்டுப் பெண். அவள் தன் வீட்டில்  செல்லமாக வளர்ந்தவள்அவளுக்குச் சமைத்துப் பழக்கமில்லை. திருமணம் முடிந்தவுடன் தன் கணவனுடன் தனிக்குடித்தனம் போய்விட்டாள். ”அவளுக்குச் சமைக்கத் தெரியாதே! அவள் என்ன செய்கிறாளோ? எப்படிக் குடும்பம் நடத்துகிறாளோ?” என்று தலைவியின் தாய் வருந்துகிறாள். அப்பொழுது அங்கு வந்த தலைவியின் செவிலித்தாய் ( தலைவியை வளர்த்தவள்) தான் போய்த் தலைவி எப்படி இருக்கிறாள் என்று பார்த்துவருவதாகத் தலைவியின் தாயிடம் சொல்லிவிட்டு, தலைவியின் வீட்டிற்கு போகிறாள்அங்கு, தலைவி மோர்க்குழம்பு செய்வதையும், கணவனுக்கு அவள் அதைப் பரிமாறும் காட்சியையும்,  ”நீ சமைத்த மோர்க்குழம்பு மிகவும் இனிமையாக இருக்கிறதுஎன்று சொல்லி,  மகிழ்ச்சியோடு அவள் கணவன் உண்ணுவதையும், கணவனின் பாராட்டுதலைக் கேட்ட தலைவி புன்முறுவல் பூப்பதையும் பார்த்த செவிலித்தாய் அந்தக் காட்சியைத் தலைவியின் தாயிடம் கூறுகிறாள்.

முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 

கொண்டு கூட்டு: முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ, குவளை உண்கண் குய்ப்புகை கமழத்தான்துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவன் உண்டலின்ஒள்நுதல் முகன் நுண்ணிதின் மகிழ்ந்தன்று. 

அருஞ்சொற்பொருள்: முளி = நன்றாகக் காய்ச்சிய பாலால் உண்டாக்கிய கெட்டித் தயிர்; காந்தள் = காந்தள் மலர்; கழுவுறுதல் = துடைத்தல்; கலிங்கம் = ஆடை; கழாஅது = கழுவாமல் (துவைக்காமல்); உடீஇ = உடுத்தி; உண்கண் = மை தீட்டிய கண்கள்; குய் = தாளிப்பு, கழுமல் = நிறைதல்; துழத்தல் =கலத்தல்; அட்ட = சமைத்த; தீ = இனிமை; பாகர் = குழம்பு; பாகம் = பக்குவமய்ச் செய்தது; ஒள் = ஒளி; நுதல் = நெற்றி.
உரை: கட்டித் தயிரைப் பிசைந்த, காந்தள் மலரைப் போன்ற மெல்லியவிரல்களைத் துடைத்துக் கொண்ட ஆடையைத் துவைக்காமால் உடுத்திக்கொண்டு,  குவளை மலரைப் போன்ற, மைதீட்டிய கண்களில், தாளிப்பின் புகை நிறைய, தானே துழாவிச் சமைத்த, இனிய, புளிப்பையுடைய மோர்க்குழம்பைத் தன் கணவன், இனிதென்று உண்பதனால், தலைவியின் முகம் மிக நுட்பமாகத் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது.


சிறப்புக் குறிப்பு:  தயிர் கட்டியாக இருந்ததால், தலைவி மோர்க்குழம்பு செய்யும் பொருட்டுத் தன் மெல்லிய விரல்களால் துழாவித் தாளிதம் செய்தாள். விரைவில் சமைக்க வேண்டுமென்று விரும்பியதால் தயிர் பிசைந்த கையைத் துடைத்த ஆடையைத் துவைப்பதற்குத் தலைவி மறந்தாள்அவள் சமைத்த உணவைத் தன் கணவன்இனிதுஎன்று விரும்பி உண்டதால் தலைவியின் அகமகிழ்ச்சியை முகம் காட்டியது. இயல்பாகவே அழகாக இருந்த நெற்றி, மகிழ்ச்சியால் மேலும் அழகாகத் தோன்றியது

3 comments:

  1. முளிதயிர் பிசைந்கையை கணவனுக்கு உணவு உருவாக்கும்ொருட்டு அதின்பெறுமதியைொருட்டாது டைக்கிறாள் என வரவேண்டும்

    ReplyDelete
  2. எங்கள் தமிழாசிரியர் சொன்ன விளக்கம். ஒரு வேளை தயிரைப் பிசைந்த கைகளைக் கழுவினால், கழுவிய கையில் இருக்கும் நீர்த்துளிகள் பட்டு, பக்குவம் குறைந்து விடும் எனக்கருதி, அந்தக்கையை சேலைத்தலைப்பிலே துடைத்துக்கொண்ட தலைவி....என்று விளக்குவார்..எவ்வளவு பெருமை?

    ReplyDelete